இறைவர் திருப்பெயர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர் : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
திருமுறை : முதல் திருமுறை 49 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
திருமுறை : முதல் திருமுறை 49 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது.
சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று.
அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
பாடல் எண் : 01
போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.
பாடல் எண் : 02
தோடுடைய காதுடையன் தோல்டையன் தொலையாப்
பீடுடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
அம்மை பாகத்தே உள்ள இடச்செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 03
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணியிழையோர்
பான்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 04
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன்சூடிப்
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 05
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
ஆன் ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடை முடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவியதலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 06
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம்பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 07
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி விண்கொண் முழவு அதிர
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 08
சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டுமாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால் மதியம் சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின் மேல் பால்போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 09
உண்ணலாகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி
அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
யாராலும் உண்ண முடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
பாடல் எண் : 10
மாசு மெய்யர் மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
பாடல் விளக்கம்:
அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.
பாடல் எண் : 11
தண் புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே
பாடல் விளக்கம்:
நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
ஓம் நமச்சிவாயம்
பதிலளிநீக்குபொக்கிஷமான பதிகம், அருமையான விளக்கம்.
வாழ்க உமது தொண்டு.
ஓம் சிவாயநம
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஎம் பெருமானே போற்றி 🙏🙏
பதிலளிநீக்குஓம் சிவாயநம
பதிலளிநீக்குஅவன் அருளாலே திருநள்ளாறு பதிக மகிமை அறிந்து உய்தேன்...
பதிலளிநீக்குஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி
பதிலளிநீக்குதிருநள்ளாறு பதிகத்தின் மகிமை பெற்றேன். திருச்சிற்றம்பலம்.3-7-2020 மாலை6-31
தெளிந்த நீரோடை போன்ற விளக்கம்.மிக நன்று
பதிலளிநீக்குபச்சைப்திகச் சிறப்பினை விளக்குக
பதிலளிநீக்குSivanarul sirakkattum. Vaaazhga valamudan 🙏
பதிலளிநீக்குஓம் நமசிவாய
பதிலளிநீக்குவிளக்கத்திற்கு நன்றி,ஓம் நமசிவாய
பதிலளிநீக்குதெளிந்த விளக்கம் வணக்கமுடன் நன்றிகள் கோடானுகோடிகள்.
பதிலளிநீக்கு