இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : நான்காம் திருமுறை 19 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : நான்காம் திருமுறை 19 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
சூலப் படை யானை சூழாக வீழருவிக்
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை பாங்காய
ஆலத்தின் கீழானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால் போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.
பாடல் எண் : 02
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கவூர்ப் பிச்சை ஏற்று உண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கு இறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோடு
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
இருபுறமும் பூதங்கள் சூழத் தாம் சென்ற ஊர்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்டு, நல்ல விளக்கம் பொருந்து வனவாகக் கொக்கிறகின் தொகுதி, ஒழுங்காக அமைக்கப்பட்ட கோவணம், சங்குமணி இவற்றை அணிந்த தலைவனை அடியேன் கண்டவிடம் ஆரூராகும்.
பாடல் எண் : 03
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை
மாயப்போர் வல்லானை மாலை தாழ் மார்பானை
வேயொத்த தோளியர் தம் மென் முலை மேல் தண் சாந்தின்
ஆயத்து இடையானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
சேய்மையதாகிய வீட்டுலகமாகியபேறும் அதனை அடைவதற்குரிய வழியாகிய ஆறும் ஆகின்றவனாய், அழிக்கின்ற போரில் வல்லவனாய், மாலை தொங்கும் மார்பினனாய், தம் மென்முலைமேல் குளிர்ந்த சந்தனம் பூசிய, மூங்கிலை ஒத்த தோள்களை உடைய, தன்னை வழிபடும் மகளிர் கூட்டத்திடையே இருக்கும் பெருமானை நான் கண்ட இடம் ஆரூர் ஆகும்.
பாடல் எண் : 04
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
வாகனமாக ஏறுதற்குரியவற்றில் மேம்பட்டதான காளையை இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.
பாடல் எண் : 05
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்
பாங்கான ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.
பாடல் விளக்கம்:
அழகாக வெண்ணிற எலும்புகளைச் சூடித் தம் காளை மீது இவர்ந்து, பக்கலிலுள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லும் மேம்பட்டவராய் இனிய குவளை மலர்கள் மணம் வீசும் திருவாரூர் ஆகிய பழைய ஊரில் உள்ள பூங்கோயில் என்ற பெயரை உடைய கோயிலை உகந்து கொண்டு அதனை ஒரு பொழுதும் நீங்காமல் எம்பெருமான் இருந்துள்ளார்.
பாடல் எண் : 06
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
எமது பட்டத்தைத் தனது பட்டமாகக் கொண்டு இருப்பவனாய், அழகான பிறையாகிய குறுகலான பட்டம் சேர்ந்த நெற்றியனாய், மாலை நேர வானம் போன்ற சிவந்த பட்டினை உடுத்து, சிறிய மான் தோல் ஆடையாகிய அழகிய பட்டினையும் கட்டிய பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.
பாடல் எண் : 07
போழொத்த வெண் மதியம் சூடிப் பொலிந்திலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ
ஊழித் தீ அன்னானை ஒங்கு ஒலிமாப் பூண்டதோர்
ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண் பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும். ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்.
பாடல் எண் : 08
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப் பாரித்து
தஞ்சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
வஞ்சனையுடையவர் யார் மாட்டும் அணுகாத திறமையுடையவனாய், எல்லோரும் உறங்கும் இருள் நேரத்தில் கூத்தாடுதலை விரும்பியவனாய், தன் அடியவர்களுடைய உள்ளத்தில் துயரமாகிய இருள் மிகும்போது ஞானமாகிய ஒளியைப் பரப்பி அழகிய ஞானப் பிரகாசனாய் நின்ற பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.
பாடல் எண் : 09
காரமுது கொன்றை கடி நாறு தண்ணென்ன
நீரமுது கோதையோடு ஆடிய நீள் மார்பன்
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
நன்கு முதிர்ந்த கொன்றை மரத்தில் பூக்கும் பூவின் நறுமணம் கமழும் குளிர்ந்த நீர் மயமான கங்கையைப் பார்வதியோடு மகிழ்ந்த, நீண்ட மார்பினனாய், பெரிய அமுதத்தை உண்டார்களாய்த் தேவர்கள் உயிர் பிழைப்பதற்காகப் பெரிய கடலின் விடத்தை அமுதமாக உண்ட பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.
பாடல் எண் : 10
தாள் தழுவு கையன் தாமரைப் பூஞ்சேவடியன்
கோள் தால வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
முழந்தாள் அளவும் நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் கொள்ள முடியாத வேடத்தினனாய், வீணையைக் கையில் கொண்டவனாய், அசைகின்றவாய் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய அத்தகைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
பாடல் எண் : 11
மஞ்சாடு குன்று அடர ஊன்றி மணி விரலால்
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்
செஞ் சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று
அம்சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே.
பாடல் விளக்கம்:
மேகங்கள் அசைந்து செல்லும் கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக