திருமுறை : நான்காம் திருமுறை 08 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
திருப்புகலூரில் உழவார பணி புரிந்த நாட்களில் அருளிய பொதுப் பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. சிவபிரானது திருநாமத்து இயல்பினையும் சிவபிரானது இயல்பினையும் உமையம்மையின் இயல்பினையும் எடுத்துக் கூறும் பாடல்கள் அடங்கிய பதிகம். பொதுவாக மூவர் முதலிகள், சிவபிரானையும் உமையம்மையையும் வேறுவேறாகவோ, பிரித்தோ கருதியதில்லை. இந்த பின்னணியில். உமையம்மையின் இயல்புகளும் இங்கே குறிப்பிடப் பட்டமையால், தனித்தன்மை வாய்ந்த பதிகமாக இந்த பதிகம் கருதப்படுகின்றது. மாதொரு பாகனாக இறைவனை உணரும் அப்பர் பிரான், இறைவனது செய்கைகளும் இறைவியின் செயல்களும் எவ்வாறு காணப்படுகின்றன என்று நயமாக இணைத்து கூறும் பாடல்களை உடைய பதிகம்.
பாடல் எண் : 01
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம்
கவண் அளவு உள்ள உள்கு கரிகாடு கோயில் கலனாவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் நேர்வார் தேவர் அவரே.
பாடல் விளக்கம்:
உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன். எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன். தோலையே ஆடையாக உடையவன். அத்தோல்மேல் ஆடும் பாம்பை இறுகக்கட்டியவன். கவண் கல் அளவு சிறிதே உண்பவன். சுடுகாடே இருப்பிடம். அவனுடைய உண்கலன் மண்டையோடு. ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.
பாடல் எண் : 02
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில்
அரி தரு கண்ணியாளை ஒரு பாகமாக அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே.
பாடல் விளக்கம்:
இப்பெருமானார் ஒளிக்கதிர்கள் விரியும் சூரியனும் அல்லர். சந்திரனும் அல்லர். பிரமனும் அல்லர். வேதத்தில் விதித்தனவும் விலக்கியனவும் அல்லர். விண்ணும் நிலனும் அலையும் காற்றும் துன்புறுத்தும் தீயும் தெளிந்த நீரும் அல்லர். செவ்வரி கருவரி பரந்த கண்களை உடைய பார்வதி பாகராக அருள் காரணத்தால் காட்சி வழங்கும் இவர் கோபிக்கின்ற பாம்பினை மார்பில் மாலையாக உடையவர். இவர் கண் இமைக்காத தேவரும் கண் இமைக்கும் மக்களும் அல்லர். இவரே எல்லாமாகி அல்லராய் உடனும் ஆவர்.
பாடல் எண் : 03
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேலோர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் காலொர் கழலர்
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்தே
இவர் ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே.
பாடல் விளக்கம்:
நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர். சூரியன் தோன்றும் கீழ்க்கடலின் நீல ஒளி பொருந்திய கழுத்தினர். சுடுகாட்டில் உறைபவர். காலில் ஒற்றைக் கழல் அணிபவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி நடுங்குமாறு கொடிய மழுப்படையை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இவர் கூத்தினை நிகழ்த்துவதும், அதனைப் பார்வதி காணுமாறு செய்வதும் இவருக்கு இயல்பு போலும்.
பாடல் எண் : 04
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளரக்
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயல் அவளோடு அன்று வாய்மை பெருகிக்
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே.
பாடல் விளக்கம்:
பெருமானார் வளர்ந்த, பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து, நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும், மான்தோலும் பூணூலும் ஓளி வீசுவதும், மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய், காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார். செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும்.
பாடல் எண் : 05
உறைவது காடு போலும் உரிதோல் உடுப்பர் விடை ஊர்வதோடு கலனா
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும் ஈசர் ஒருபால் இசைந்ததொரு பால்
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர் உலகே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் வசிப்பது காட்டில்: அவர் உடுப்பது புலியின் தோல்: வாகனமாகக் கொண்டு ஊர்வது காளை: அவர் கையில் வைத்திருக்கும் உண்கலம் மண்டையோடு; இது தான் தலைவராகிய சிவபெருமான் வாழும் தன்மை. இவ்வாறு ஈசன் இருந்த போதிலும், இவருக்கு உரியது இவரது உடலின் வலது பகுதியே. இவரது உடலின் இடது பகுதியில், பிறைச் சந்திரனைப் போன்று வளைந்த நெற்றியினை உடைய உமை நங்கை இருக்கின்றாள். உமை நங்கை, சிவபெருமான் ஆடும் போது அவரது ஆடலுக்கு ஏற்ப பாடிக் கொண்டு இருக்கின்றாள். இவ்வாறு வீரக்கழல்களின் ஒலியும், பாதங்களில் காணப்படும் மலர்களைச் சூழ்ந்திருக்கும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து காணப்படும் இறைவனின் திருவடிகள் நிழலாகிய ஆணைகளை மீறி தேவர் உலகம் செயல்படாது.
பாடல் எண் : 06
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே.
பாடல் விளக்கம்:
சோதிடரைப் போன்று திருமண காலத்தை உணர்த்தும் வேங்கையின் மலர்களையும், சந்திரனையும் தனது முடியில் மாலையாக சூடியவர் சிவபெருமான்: அவர் ஒலிக்கும் சிலம்பினைத் தனது கால்களில் அழகுற அணிந்தவர்: அவர், நவமணிகள் மலிந்து காணப்படுவதும் அழகான மேகம் தவழும் சோலைகளில் ஆடும் மயில்களை உடையதும் ஆகிய இமயமலையின் மன்னனாகிய மலைமகளுக்கு இறைவரும் ஆவார்: ஒப்பற்ற ஒருவராக இருக்கும் சிவபிரான் ஒரே உருவத்தில் இருவராகவும், அன்னத்தை ஒத்த அம்மையாகவும், தீயின் நிறத்தை ஒத்த ஐயானாகவும் காணப்படுகின்றார்.
பாடல் எண் : 07
நகை வளர் கொன்றை துன்று நகு வெண்தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர்
முகை வளர் கோதை மாதர் பாடுமாறும் எரியாடுமாறும் இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி மதி இயங்குமாறும் இது போலும் ஈசர் இயல்பே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் எளிதில் அடையாளம் காணக்கூடிய கொன்றை மலரை அணிபவன்: தலைகளை நெருக்கமாக சேர்த்து கட்டப்பட்ட தலை மாலையை அணிந்தவன்: கங்கையைச் சடையில் தாங்கியவன்: உலகில் மேன்மையுடன் விளங்கும் வேதங்களை முறையாக பாடுவதில் வல்லவன்: ஆலகால விடம் உண்டதால் மாணிக்கம் போன்று ஒளி வீசும் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவன்: சர்வ சங்கார காலத்தில், அழித்தல் தொழிலில் ஈடுபட்டு கோபத்துடன், தீயினைக் கையில் ஏந்தி நடமாடும் சிவபெருமானின் கூத்துக்கு ஏற்ப கோப உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களை பாடும் திறமை படைத்தவள் உமையம்மை: தனது பகையாகிய பாம்பு சடையில் இருந்தாலும், சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டதால், சந்திரன் அச்சம் ஏதுமின்றி, சடையில் உலாவுகின்றது.
பாடல் எண் : 08
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன் தன் உடல் வெந்து வீய சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர்
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகமாக எழில் வேதம் ஓதும் அவரே.
பாடல் விளக்கம்:
கங்கை நதியினைத் தாங்கிய சிவபெருமானின் சடை செந்நிறத்தில் ஒளிர்கின்றது: பிரமன் திருமால் ஆகிய இருவரது உடல்கள் எரிந்த சாம்பலை உடலில் பூசிக் கொண்டு இருக்கும் சிவபிரானின் மேனி வெண்மை நிறத்துடன் மின்னுகின்றது: வலிமையிலும் திறமையிலும், அவருக்கு ஒப்பாக எவரும் இல்லாத காரணத்தால், தனியராக காணப்படும் அவர், தனது கருணையின் வடிவாகிய உமையம்மையை, அழகிய வடிவம் கொண்டு அனாதியாக விளங்கும் அம்மையை, மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது உடலில் ஏற்று இருவராகவும் காட்சி அளிக்கின்றார். தன்னைத் தாக்க வந்த மதயானையின் தோலினை உரித்து, போர்வையாக அணிந்து கொண்டவர்: கையில் உணவு உட்கொள்ளும் கலனாக, பிரம கபாலத்தை ஏந்தியவர்: இத்தகைய சிறப்புகளைக் கொண்டு எழில் திகழும் மேனியினை உடைய பெருமான், அழகான வேதங்களைப் பாடுபவராகவும் காணப்படுகின்றார்.
பாடல் எண் : 09
மலை மடமங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி மகிழ்வர்
தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.
பாடல் விளக்கம்:
மலை மங்கையாகிய உமையம்மையுடன், நமது நாட்டின் வடக்கே பாயும் கங்கையையும் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தவர் சிவபெருமான். பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தி, தனியாகச் சென்று பிச்சை ஏற்கும் பிச்சைப்பெருமான், அடியார்கள் அவரைக் குறித்து செய்யும் தவத்தால் மகிழ்ந்து அவர்களுக்கு அருள் புரிபவர் ஆவார். நறுமணம் கமழும் திருநீற்றினை, சந்தனமாக கருதி தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு பல திருவிளையாடல்கள் புரிபவர் சிவபிரான்: அவர் மற்றவர்களிடம் இருந்து பெரிதும் மாறுபட்டவர். மிகுந்த ஆரவாரத்துடன் பாற்கடல் கடையப்பட்ட சமயத்தில், அதனின்று கரிய நெருப்பு போன்று எழுந்த நஞ்சினை, சிறிதும் அஞ்சாமல் உண்டு அனைவரையும் காப்பாற்றியவர் சிவபிரான் தான்.
பாடல் எண் : 10
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கு நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓத ஒருபாடும் மெல்ல நகுமால்
மது விரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே.
பாடல் விளக்கம்:
புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்த படியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக