திங்கள், 13 ஏப்ரல், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 11

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை நான்காம் திருமுறை 52 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


திருவாரூர் நகரத்தில் பல நாட்கள் தங்கியிருந்த அப்பர் பிரான், அங்கே உழவாரப் பணி செய்தவாறே இறைவனையும் வணங்கி ஏத்திய இருபத்தொரு பதிகங்கள் நமக்கு தற்போது கிடைத்துள்ளன. முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெறும் பெருமை திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கச்சி ஏகம்பம் மற்றும் திருமறைக்காடு தலங்களை குறிக்கும் பதிகங்களும் முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெறுகின்றன. மணிவாசகரின் திருப்புலம்பல் பதிகம், திருவாரூரில் அருளியதாக கருதப்படுகின்றது.

உலகம் வாழ அப்பர் பிரான் திருத்தொண்டு செய்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இனிமையான சொற்களைக் கொண்ட தீந்தமிழ் பாடல்கள், அப்பர் பிரானின் திருவாயில் சென்று சேர்ந்தன என்று இங்கே சேக்கிழார் கூறுகின்றார். சிவபிரான் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்ட அவரது உள்ளம் கசிந்து, கண்களில் ஆறாகப் பெருகும் நீர் மார்பினை நனைக்க, திருவீதிப் பணிகளைச் செய்து கொண்டே பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். அந்த தருணத்தில் வழங்கிய பதிகங்களில் இதுவும் ஒன்று.

பாடல் எண் : 01
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம்மனிதர் வாழ்க்கை காண்தொறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
கடல் போன்று பெரிய பள்ளமாகிய வயிற்றினை நிரப்புவதற்கான வழிகளில் மனிதன் ஈடுபடுவதால் அவனது வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகி அல்லற்படுகின்றது. இதனைக் காணும் நான் மிகவும் வருத்தம் அடைந்து கலங்குகின்றேன். மேலும் எனது உடலில் உள்ள அறிவற்றதும் முரட்டுத் தன்மை கொண்டதும் ஆகிய ஐம்பொறிகளும், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுமாறு என்னைத் தூண்டுகின்றன. என்னால் இந்த பொறிகளை கட்டுப்படுத்த இயலவில்லை எனவே இவைகளுடன் சேர்ந்து வாழ என்னால் முடியாது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனக்கு அருள் புரிந்து ஐம்பொறிகளை அடக்கும் திறனை எனக்கு நல்க வேண்டும்.


பாடல் எண் : 02
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை
சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வயிற்றினை, மேலே ஒரு தோலால் மூடப்பட்டு உள்ள உடலில் காணப்படும் ஒன்பது துளைகளும் (கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள், வாய், கருவாய், எருவாய்) தங்களுக்குள் ஒற்றுமை ஏதும் இல்லாத வகையில் செயல்படுகின்றன. இந்த துளைகளிலிருந்து மலங்கள் ஒழுகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறான குற்றங்கள் கொண்டுள்ள உடலினை ஐந்து பொறிகளும் தத்தம் வழியில், வருத்தி துயரம் இழைக்கின்றன. இவ்வாறு, ஒன்பது துளைகளாலும் ஐந்து பொறிகளாலும் கலக்கம் அடைந்து, அந்த கலக்கத்தின் விளைவால், வாழ முடியாதவனாக நான் உள்ளேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது கலக்கங்களைத் தீர்த்து, பயனுள்ள வாழ்க்கை நான் வாழுமாறு வழிகாட்ட வேண்டும்.


பாடல் எண் : 03
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நஞ்சினை உண்டதால் கருமையாக மாறிய கழுத்தினை உடையவனே, தலைவனே, அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனே, எனது உடலில் உள்ள ஐம்பொறிகள், பஞ்சினைப் போன்ற மென்மையான அடிகள் கொண்டுள்ள பெண்கள் பக்கம் சார்ந்து, நான் உன்னை நினைக்க முயற்சி செய்தாலும், எனது நெஞ்சத்தில் பல விதமான எண்ணங்களையும் நோய்களையும் தோற்றுவித்து, என்னை அவ்வாறு நினைக்க ஒட்டாமல் தடுக்கின்றன. இவ்வாறு செயல்படும் ஐம்பொறிகளுக்கு நான் மிகவும் அஞ்சுகின்றேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது அச்சத்தைத் தவிர்த்து, அஞ்சேல் என்று சொல்லி அடைக்கலம் அளிக்க வேண்டும்.


பாடல் எண் : 04
கெண்டையம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியின் நூக்கக்
கண்டு நான் தரிக்க கில்லேன் காத்துக் கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர் போற்றும் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நீலகண்டரே, எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் தலைவனே, கெண்டை மீன் போன்று அழகிய அகன்ற கண்களை உடைய பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் நான் இணைய வேண்டும் என்று வல்லமை வாய்ந்த எனது ஐந்து பொறிகளும் என்னை நிலைகுலையச் செய்கின்றன. மேலும் அந்த ஐம்பொறிகள் என்னைத் துன்பக் குழியில் ஆழ்த்துகின்றன. இந்தச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாதவனாக நான் உள்ளேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீ தான், நான் துன்பக் குழியில் இல்லாதவாறு பாதுகாத்து, என்னை உனது உனது அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


பாடல் எண் : 05
தாழ் குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று
ஏழையேனாகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான்.
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
எனது பெருமானே, தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரைத் தஞ்சம் என்று அடைந்து, அறிவில்லாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடியேன் என்ன செய்வது என்பதை அறியாமல் திகைக்கின்றேன். எப்போதும் ஐந்து பொறிகளும் என்னை துன்பம் என்னும் ஆழ்குழியில் ஆழ்த்துவதற்கு முயற்சி செய்கின்றன. அதனால் வாழ்க்கை நடத்துவதே மிகவும் அரிய செயலாக உள்ளது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்.


பாடல் எண் : 06
மாற்றம் ஒன்று அருள கில்லீர் மதியிலேன் விதியிலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர் சிக்கன உடையராகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவும் கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
அடியேன் நல்லறிவு இல்லாத காரணத்தால், வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிக்கப்பட்ட வழிகளை பின்பற்றி வழிபாடு செய்ய முடியாதவனாக உள்ளேன். அதனால் தாங்கள் என் மீது கொண்டுள்ள கோபத்தை தணிக்காமல் இருக்கின்றீர் போலும்: எனது இயலாமையை கருத்தில் கொண்டு நீங்கள் என்னை மன்னித்து அருளவேண்டும். தங்களது விருப்பத்தின் வழியே என்னைச் செயல்பட வைப்பதில் மிகுந்த உறுதி கொண்டவர்களாக விளங்கும் ஐந்து பொறிகளும், கூற்றுவன் வருத்துவது போல் என்னை வருத்தி, எனது சிந்தனையை குலைத்திட்டு என்னை இழிவான தன்மைக்குத் தள்ளுகின்றார்கள். நாயினும் கீழான தன்மை உடையவனாகிய நான், ஐந்து பொறிகளால் விளையும் துயரத்தினை பொறுக்க முடியாமல் தவிக்கின்றேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீர் எனது துன்பங்களைத் தீர்த்து நான் உய்வதற்கான வழியை அருளாமல் இருக்கின்றீர். அவ்வாறு இராமல், நீங்கள் நான் உய்வதற்கான வழியினைக் காட்டவேண்டும்.


பாடல் எண் : 07
உயிர் நிலை உடம்பே காலா உள்ளமே தாழியாகத்
துயரமே ஏற்றமாகத் துன்பக் கோல் அதனைப் பற்றி
பயிர் தனைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
உயிர் நிற்பதுற்கு உரிய இந்த உடல் ஏற்றத்தின் காலாக செயல்பட, துயரம் எனப்படும் ஏற்றத்தின் மூலம், துன்பக் கோலாகிய ஏற்றக் கோலால் தடுக்கப்பட்டு, எனது உள்ளம் எனும் தாழியில் எனது உணர்வாகிய நீரினை மொண்டு வந்து, அந்த உணர்வினை சிவலோகம் எனப்படும் நல்ல நிலத்திற்கு அளிக்காமல், பாழ் நிலத்தில் பாய்ச்சுவது போன்று வேறு வழிகளில் செலுத்துகின்றேன். இதனால் எனது உள்ளமாகிய நிலத்தில் சிவபெருமானைப் பற்றிய சிந்தனை வளராமல், நான் செய்யும் முயற்சிகள் வீணாகக் கழிய எனது உடலும் உள்ளமும் அயர்ந்து போகின்றன. இவ்வாறு நடைபெறுவது ஐம்பொறிகளின் ஆதிக்கத்தில் எனது உள்ளம் கட்டுண்டு இருப்பதால் தான். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீ தான் என்னை ஐந்து பொறிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, எனது உணர்வினை இறைநெறியில் ஈடுபட வழி வகுக்க வேண்டும்.


பாடல் எண் : 08
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடிப்
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
ஆரூர் மூலத்தானத்தில் உறையும் பெருமானே, தகுந்த குருவை அடைந்து அடியேன் பயன் தரும் கல்வி ஏதும் நான் கற்கவில்லை: சிற்றின்பத்தையும் இல்லற சுகத்தையும் பெரியதாக கருதி, பெண்கள் பின்னே திரிந்த நான், இறுதியில் அடைந்தது துன்பம் தான். இவ்வாறு மூடனாக இருந்த நான் செய்த தவறுகளால், தமது ஆற்றலில் முழுமை அடைந்திருந்த ஐந்து பொறிகளும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மறுபடியும் மறுபடியும் என்னை வருத்தி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டன: இந்த ஐம்பொறிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாத காரணத்தால், என்னால் அவற்றை கட்டுப்படுத்த இயலவில்லை: இதனால் எனது உயிர் மேலும் மேலும் துயருற்றது. இறைவனே, நீ தான் என்னை ஐம்பொறிகளின் பிடியில் இருந்து விடுவித்து எனது உயிர் அடையும் துயரங்களை நீக்கவேண்டும்.


பாடல் எண் : 09
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
எனது தலைவனே, அமரர்களின் அரசனே, பக்தனாக உனது திருவடிகளை வணங்கி உன்னை வாழ்த்தி வணங்காமல் இருக்கின்றேன்: ஐம்பொறிகள் அனைத்தும் சேர்ந்து, எனது உள்ளம் பல தீய வினைகள் செய்த வண்ணம் இருக்கின்றன. அதனால் எனது உள்ளம், மத்தால் கடையப்படும் தயிர் போன்று ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது உள்ளம், ஐம்பொறிகளின் ஆளுகையிலிருந்து விடுபட்டு நிலையாக இருக்குமாறு செய்ய வேண்டும்.


பாடல் எண் : 10
தடக்கை நாலைந்தும் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து அருள் செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நீண்ட இருபது கைகளைக் கொண்டு, பெரிய மலையாகிய கயிலை மலையை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலையில் இருந்த பூத கணங்கள், அச்சத்தால் பல திசைகளில் சிதறி ஓடின. அரக்கனது முடிகள் கொண்ட பத்து தலைகள் மற்றும் இருபது கைகளும் முறியுமாறு, தனது கால் விரலைச் சிறிதே ஊன்றி, இராவணனை மலையின் கீழ் நெருக்கியவர் ஆரூர் மூலத்தானத்தில் குடி கொண்டிருக்கும் சிவபிரான் தான்.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக