வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் 01 - 04

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை. இதற்கு உரை எழுதியவர் ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள் ஆவார். 

விநாயகர் துதி




பாடல் எண் : 01

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.


சொற்பிரிவு

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி 
கப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ 
கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் 
மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் 
முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் 
அச்சு அது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி 
படும் அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணம் அருள் பெருமாளே

பாடல் விளக்கம்:

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், பிறைச் சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். 

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, அசுரர்களின் திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, வள்ளி மீது கொண்ட காதலாகிய அந்தத் துயரத்தோடு உன் தம்பியாகிய சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.


பாடல் எண் : 02

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.


சொற்பிரிவு 

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் நீபப் 

பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் 
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்...

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு 
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் 
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்டு 

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு 
வெளரிப்பழம் இடிப் பல்வகை தனி மூலம் 

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு 
விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி

வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் 
வித்தக மருப்பு உடைய பெருமாளே


பாடல் விளக்கம்:

அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள மயிலாகிய குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும் படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும் படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். 

கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை இவைகளை பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.

*திருவண்ணாமலையில் "முத்தைத்தரு" என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரி நாதரை வயலூர் என்ற "செய்ப்பதி"க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல் தான் இது.

**மேருமலையில் முன்னர் "வியாசர்" விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு "ஏகதந்தன்" (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.


பாடல் எண் : 03

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.


சொற்பிரிவு 

உம்பர் தரு தேனுமணி கசிவாகி 
ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி 

இன்பரசத்தே பருகிப் பலகாலும்
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே

தம்பிதனக்காக வனத்(து) அணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.

பாடல் விளக்கம்:

விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி இவைகளைப் போல் ஈதற்கு என் உள்ளம் நெகிழ்ந்து ஒளி வீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும் படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக! தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.


பாடல் எண் : 04

நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.


சொற்பிரிவு 

நினது திருவடி சத்தி மயில் கொடி 
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட 
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால்தேன் 

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் 
நிறவில் அரிசி பருப்பு அவல் எள் பொரி 
நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்ட கரத்து
ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

தெனன தெனதென தெத்தென அன பல 
சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறிமூளை

செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்
நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசேசே 

எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் 
துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே


பாடல் விளக்கம்:

முருகா உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் இவைகளை நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு வழிபட்டும், துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு துதித்தும், தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும்** ,(அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். 

தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.

*திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.

**ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

1 கருத்து:

  1. ஐயா மிகவும் அருமை ஆனால் நூல்கள் வேண்டும் என்ன செய்வது இந்த விளக்கவுரை நூல்கள் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை எமக்கு தெரியப்படுத்தினால் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் நன்றி.

    பதிலளிநீக்கு