புதன், 24 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 09

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஆறாம் திருமுறை 1வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
அரியானை அந்தணர் தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனை தேனைப் பாலைத்
திகழ் ஒளியை தேவர்கள்தம் கோனை மற்றைக் 
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், கலையறிவால் ஆராய்ந்து அறிவதற்கு அரியவர், தில்லை வாழ் அந்தணர்களின் சிந்தையில் விளங்குபவர், சிறப்பின் மிக்கதாகிய வேதங்களின் உட்பொருளாகத் திகழ்பவர், அணுவைப் போன்று நுண்மையாக இருப்பவர், யாராலும் அறிந்து கொள்ள முடியாதவராகவும் தத்துவமாகிய மெய்ப்பொருளாகவும் விளங்குபவர், தேனும் பாலும் போன்று இனிமையானவர், அஞ்ஞானமாகிய இருளை நீக்கும் பேரொளியாக விளங்குபவர், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மற்றும் திருமால், நான்முகன், நெருப்பு, காற்று, ஒலிக்கும் கடல், உயர்ந்து மேவும் மலை என யாங்கும் கலந்து மேவும் பெரும் பொருளாக விரிந்து விளங்குபவர். பெரும்பற்றப் புலியூர் என்னும் பெருமையுடைய தில்லையில் வீற்றிருக்கும் அப்பெருமானை ஏத்திப் போற்றி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு ஏத்துதல் செய்து வழிபடுவது மனிதப் பிறவியை எடுத்ததற்கு உரிய உண்மையான பயனாகும். அவ்வாறு ஈசனைப் போற்றாது இருப்பது மனிதப் பிறவியை வீணாக்கும் நாள் என்பதாகும்.


பாடல் எண் : 02
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை 
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை பெரும்பற்றப் புலியூரானை 
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், எல்லாக் கலைகளையும் கற்று வல்லமையுடன் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; வலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; வறியவர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும் அருள்செய்து ஆதரவு அளிப்பவர்; திருவாரூரில் வீற்றிருப்பவர்; நிகரற்றவராக விளங்குபவர்; தேவர்களால் எல்லாக்காலங்களிலும் தொழப்படுபவர்; பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தில்லையில் வீற்றிருப்பவர். அப்பெருமானை வாழ்த்தி ஏத்தாத நாள் பிறவியின் பயனை அடைந்ததாகக் கொள்ளத்தக்கதன்று.


பாடல் எண் : 03
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் 
கனைகழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி
வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட
வளர்மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி 
அருமான வாள் முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணம் முடி வணங்க ஆடுகின்ற 
பெருமானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; ஒலிக்கும் கழல்கள் காலில் ஒலிக்க, நெருப்பைக் கையில் ஏந்திப் பெருமையுடைய தோள்களை வீசி நடனம் புரிவர்; வளரும் சந்திரனைச் சடையில் அணிந்து கங்கையானவள் ஏத்துமாறு நடனம் புரிபவர். அவர் பெரும்பற்றப்புலியூரில் விளங்குபவர். அப்பெருமானை தினந்தோறும் ஏத்தி வாழ்த்த வில்லையானால் பிறவியின் பயன் அடைந்ததாக ஆகாது.


பாடல் எண் : 04
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை, அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் 
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் 
திரிசுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய 
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானை 
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், அரிய தவச்சீலர்களால் தொழுது ஏத்தப்பெறும் தலைவர்; தேவர்களுடைய பெருமான்; அரனாகவும் மூப்பு கொள்ளாத அருமருந்தாகவும் விளங்குபவர்; தேவர்களுக்கு அருள் புரிந்தவர்; கடலும், மலையும் மண்ணும் விண்ணும், விண்மீன்களாகவும், திரிகின்ற சுடர்களில் சூரியன் சந்திரன் ஆகிய இருவராகவும், பிறவுமாகவும் விளங்குகின்ற பெருந்தகையாவர். அவர், பெரும்பற்றப்புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பற்றிப் பேசாத நாள், பிறவியின் பயனை உணர்ந்து நோக்காத நாள் என்கின்றவாறு பயனற்ற நாளாகும்.


பாடல் எண் : 05
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி 
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் 
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் 
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானை 
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், எல்லாருக்கும் கிடைத்தற்கரிய சிறப்புமிக்க துணையாகத்திகழ்பவர்; அடியவர்களுடைய துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாகுபவர்; இப்பெரிய உலகத்துள் உள்ளத்தில் தோன்றி தோன்றாத் துணையாய் விளங்குபவர்; புலன்களின் வழிச்செல்லாது, உலகப் பொருளின் மீது உள்ள நாட்டத்தை நீக்கியவர்களுக்குப் பெருந்துணையாய் விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபடாத நாள், பிறவியின் பேற்றினை அடையாத நாளாகும்.


பாடல் எண் : 06
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை, மிக்க 
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், கரும்பு போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியை உடனாகக் கொண்டவர்; வைரத்தின் குன்று போன்று வெண்மை திகழும் திருநீற்றுத் திருமேனியராகக் காட்சி தருபவர்; அரும்பு விளங்கும் கொன்றை மலரை மாலையாகத் தரித்துள்ளவர்; வேதமும் ஆறு அங்கங்களும் ஆகியவர்; வண்டுகள் ரீங்காரம் செய்து சூழும் பொழில்களையுடைய அழகிய திருவாரூரில் சோதிச் சுடராய்த் திகழ்பவர்; எத்தகைய தன்மையாலும் அசைவு கொள்ளாத விளக்கின் ஒளியாகுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் கைதொழுது ஏத்திப் போற்றித் துதிக்காத நாள், பிறவியன் பயனை அடையாத நாள் ஆகும்.


பாடல் எண் : 07
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை 
வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி 
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப் 
பெரும்பயனை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், ஏழு நரம்பின் வாயிலாக இசையாகவும் அத்தன்மையைக் கேட்டு மகிழ்கின்ற இனிய பயனாகவும் விளங்குபவர்; தேவர்களை அச்சுறுத்திய மூன்று அசுரர் புரங்களை மேரு மலையை வில்லாகக் கொண்டு அக்கினிக் கணை தொடுத்து எரித்தவர்; கடலில் தோன்றிய கொடிய நஞ்சினைக் கண்டத்தில் அடக்கித் தேவர்களைக் காத்தவர்; காமத்தின் வயப்படாத சிந்தையுடையவராகிய துறவியரின் உள்ளத்தில் மேவுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் விளங்க, அப்பெருமானை ஏத்திவழி படாத நாள், பிறவியின் பயனைக் காணாத நாளாகும்.


பாடல் எண் : 08
காரானை ஈர் உரிவைப் போர்வை யானை
காமருபூங் கச்சி ஏகம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை 
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர், எல்லாருக்கும், விரும்பும் நன்மைகளை வழங்கும் பாங்கில் திகழும் கச்சியில் விளங்கும் திருவேகம்பன் ஆவார்; வேற்றுமை இன்றி எல்லா அடியவர்களுக்கும் அன்புடன் அருள் புரிபவர்; தேவர்களாலும் அறியப்படாத பெருமையுடையவர்; பூவுலக மாந்தர்களும் தேவர்களும் பணிந்து, ஏத்தி நிற்கத் திருநடனம் புரிபவர்; பரஞ்சுடராய் பரம்பொருளாகி, எண்ணற்ற திருப் பெயர்களை உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் திகழ்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாத நாள், பிறவிப் பயனை அடையாத நாளாகும்.


பாடல் எண் : 09
முற்றாத பால் மதியம் சூடினானை 
மூ உலகம் தான் ஆய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னை 
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
சிவபெருமான், இளமையுடைய சந்திரனைச் சூடி விளங்குபவர்; மூன்று உலகங்களும் தானாக விளங்கி மேவுபவர். யாவற்றுக்கும் தலைவராகியவர்; பகைத்து நின்ற முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்தவர். ஒளியாகத் திகழ்பவர்; மரகதம் போன்ற எழில் வண்ணம் உடையவர்; தேனும், பாலும், இனிமை நலனை விளைவித்து, உடலுக்கு எழில் சேர்ப்பது போன்று, உயிருக்கு நல்லாக்கத்தையும் இனிமையையும் சேர்பவர், திருக்குற்றாலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அன்பின் மிக்கவர்; ஆங்குத் திருக்கூத்து நல்கி, மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை நல்குபவர்; பரஞானமும் உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி புகழ்ந்து ஏத்தாத நான் பிறவியின் பேற்றை அடையாத நாள் ஆகும்.


பாடல் எண் : 10
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் 
ஏழ் உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
சோத நாள் எல்லாம் பிறவா நாளே.

பொருள்:
கரிய ஒளி வண்ணமுடைய திருமாலும், தாமரைமலரில் உறையும் பிரமனும் காணமுடியாதவாறு, சிறப்பின்மிக்க ஒளிதிகழும் நெருப்பின் பிழம்பாய் விளங்கிய சிவபெருமான், சிந்தையில் தோன்றும் அஞ்ஞானத்தை நீக்கும் ஞான ஒளியாகுபவர், பூவுலகம், ஆகாயம், தேவர்உலகம் மற்றும் உள்ள ஏழுலகங்களைக் கடந்து அண்டங்களையும் கடந்த பேரொளியாக விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பேசிப் புகழாத நாள், பிறவிப் பேற்றின் பயனடையாத நாள் ஆகும். 


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

செவ்வாய், 23 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 08

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஐந்தாம் திருமுறை 2வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனை, 
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், பனை போன்ற நீண்ட துதிக்கையும் மூன்று வகையான மதங்களும் உடைய யானையின் தோலை உரித்தவர்; தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களின் மனத்தைக் கோயிலாகக் கொண்டு விளங்குபவர். யார் யார் எத்தன்மையில் காண விழைகின்றார்களோ அத்தகைய திருக்கோலத்தில் மேவிக் காட்சியளிப்பவர். அவர், அம்பலத்தில் விளங்கும் நடராசப் பெருமான் ஆவார். அப்பெருமானை, இமைப்பொழுது மறந்தாலும் உய்ய முடியுமோ! ஆதலால் நான் மறவாது அப்பெருமானை ஏத்துவேன் என்பது குறிப்பு.


பாடல் எண் : 2
தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக் 
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், பாவங்களைத் தீர்ப்பவர், அன்புடையவர், அன்பின் உலகமாக விளங்கும் சிவலோகத்தின் தலைவர்; ஐந்தொழில் முழுமுதலாய் விளங்கும் ஒப்பற்ற ஒருவனாய் விளங்குவர், பார்த்தனுக்குப் பாசுபதம் அருள் செய்த பரமன், சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் கூத்தப்பெருமான். அப்பெருமானை நான் மறந்தால் உய்ய முடியுமோ!.


பாடல் எண் : 03
கட்டும் பாம்பும் கபாலம் கை மான்மறி
இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள் தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், பாம்பைக் கங்கணமாகக் கட்டி இருப்பவர்; மான் கன்றையும் கபாலத்தையும் கையில் ஏந்தி இருப்பவர்; சுடுகாட்டில் விரும்பி நடனமாடுபவர்; முனிவர்கள் வாழும் தில்லை அம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப்பெருமானை இமைப்பொழுதும் நான் மறவாமல் ஏத்துவேன்.


பாடல் எண் : 04
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட 
நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என் 
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற 
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசனை மணலால் தாபித்துப் பால் கறந்து அபிடேகம் செய்த பிரமகாரியாகிய சண்டேசருக்கு, உலகம் எல்லாம் அருளாட்சி செய்யும் பெருமையை வழங்கியவர், பொன்னம்பலத்தில் தாண்டவம் புரியும் சிவபெருமான். தாணுவாகிய அப்பரமனை நான் மறவாது ஏத்துவன்.


பாடல் எண் : 05
பித்தனை பெருங்காடு அரங்கா உடை 
முத்தனை முளைவெண் மதி சூடியை 
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற 
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், மன்னுயிர்பால் பேரன்பு உடையவர், மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரிபவர், பாசம் நீங்கி முத்தனாய்த் திகழும் இயல்புடையவர், இளம்பிறை சந்திரனைச் சூடியவர்; சித்தனாய் விளங்குபவர்;,பொன்னம்பலத்தில் விளங்கும் அன்புடையவர். அப்பரமனை, அடியேன் மறவேன். மறந்தால் உய்வனோ?.


பாடல் எண் : 06
நீதியை நிறைவை மறைநான்கு உடன் 
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச் 
சோதியை சுடர்ச் செம்பொனின் அம்பலத்து 
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், அறநெறியில் புகலப்படும் நீதியாகத் திகழ்பவர், யாவற்றையும் உடைய நிறைபொருளானவர், நான்கு வேதங்களையும் ஓதி அருளிச் செய்தவர், யார்க்கும் அறிய ஒண்ணாத சோதியாக விளங்குபவர், ஒளி திகழும் பொன்னம்பலத்துள், ஆதியாக இருந்து நடம்புரிபவர். அப்பரமனை மறந்து அடியேன் உய்யமுடியுமோ?.


பாடல் எண் : 07
மைகொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள் 
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், கருமையான கண்டத்தை உடையவர், எட்டுத்தோள் உடையவர், மூன்று கண்ணுடையவர், படம் கொண்ட பாம்பை அரையில் நன்கு கட்டி இருப்பவர், திருமகள் விளங்கி மேவும் சிற்றம்பலத்தில் உறையும் எம்தலைவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்வு பெறமுடியுமோ?.


பாடல் எண் : 08
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ.

பொருள்:
வானுலகத்தில் உள்ள தேவர்கள் தொழுது போற்ற விளங்குவது தூய பொன் வேய்ந்த விமானத்தையுடைய சிற்றம்பலம் ஆகும். ஆங்குத் திருநடனம் புரியும் அம்பலக்கூத்தனை நான் மறந்து, எங்ஙனம் உய்வன்?.


பாடல் எண் : 09
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனை 
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை 
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், கார் காலத்தில் நன்கு விளங்கும் பிரணவ புட்பமாகிய கொன்றை மலர் மாலை யணிந்தவர்; உமாதேவியின் மணவாளர். தேவர் உலவும் தில்லையுள் திருநடனம் புரிபவர். ஆரா அமுதாகிய அப்பெருமானை நான் மறந்து உய்வு பெற முடியுமா?.


பாடல் எண் : 10
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் 
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் 
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை 
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், கயிலையை அசைத்த இராவணனுடைய சிரங்கள் நெரியுமாறு ஊன்றிய திருப்பாதத்தை உடையவர், நீர்வயல் சூழ்ந்த தில்லையில் வீற்றிருப்பவர். அப்பரமனாகிய கூத்தப்பெருமானைத் தொண்டனாகிய யான் மறந்து உய்ய முடியுமா!.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திங்கள், 22 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 07

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஐந்தாம் திருமுறை 1வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை 
என்னம் பாலிக்கு ஆறு கண்டு இன்பு உற 
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.

பொருள்:
தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும்; உடலின் வளமைக்குரிய உணவு கிடைக்கும்; பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வு கிடைக்கும். இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கை வரப்பெறும். எம்பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ?


பாடல் எண் : 02
அரும்பு அற்றப் பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பு அற்றப் படத் தூவி தொழுமினோ- 
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே.

பொருள்:
எம்பெருமானாகிய ஈசனை, அரும்புகளை நீக்கி, நல்ல செழுமையான மலர்களைக் கொண்டு தேர்ந்து பறித்துத் தூவித் தொழுவீராக. அப்பெருமான், கரும்பு வில்லையுடைய மன்மதனை எரித்தவர். அவர் தில்லையில் வீற்றிருப்பவரே ஆவார்.


பாடல் எண் : 03
அரிச்சு உற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
ழுஎரிச் சுற்றக் கிடந்தார்ழு என்று அயலவர் 
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

பொருள்:
மக்கட்பிறவியானது, வினை வசத்தால் வாய்க்கப் பெறுவது. அதனைப் போக்கிக் கொள்வதற்கு, இத்தேகத்தை உபகரணமாகக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தப்பெருமானைத் தரிசிக்க வேண்டும். அவ்வாறு இன்றேல், உயிர்பிரிந்து சென்றபின் உடலை இடுகாட்டில் எரிக்கும்போது, அயலவர் எள்ளி நகையாடுவர். எனவே இறப்பு வருவதன்முன் ஈசனைக் கண்டு, வணங்க வேண்டும் என்பது, குறிப்பு.


பாடல் எண் : 04
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? 
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்? 
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு 
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

பொருள்:
தில்லை மாநகரில் மேவும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு விளங்குகின்ற நடராசப் பெருமானுக்கு, எல்லை இல்லாத அடிமை பூண்ட எனக்கு, அல்லல் இல்லை; அரிய வினையாகிய பிராரத்த வினையால் நேரக்கூடிய துன்பமும் இல்லை. தொன்று தொட்டுப் பிறவிகள் தோறும் சேர்ந்து பற்றிய சஞ்சித கன்மமும் என்னை எதுவும் செய்யாது.


பாடல் எண் : 05
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனை
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் 
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.

பொருள்:
இத்தேகத்தில் விளங்கும் உயிரை, மூச்சுக்காற்றுக் கொண்டு உயிர்த்திருக்கச் செய்யும் பொழுது எல்லாம் நான் என் நாதராகிய திருச்சிற்றம் பலவாணரையே நினைத்துக்கொண்டிருப்பவன் அவர், என் உள்ளத்தில் தேன் போன்று இனிமையைச் சேர்த்துக் கொண்டிருப்பவர். அப்பெருமான், என்னைப் பேரின்ப வீட்டில் இருக்கவும் வைப்பவரே.


பாடல் எண் : 06
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் 
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்து உறை 
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் 
சிட்டர்பால் அணுகான் செறு காலனே.

பொருள்:
முனிவர்களும் தேவர்களும் சென்று, வேண்டிய வரங்களைக் கொள்ளும் இடமாவது, அந்தணர்கள் வாழும் தில்லைச்சிற்றம்பலம். ஆங்கும் உறையும் நடராசப் பெருமானுடைய செம்மையான அடிமலரைத் தொழுது ஏத்தச்செல்கின்ற மெய்யன்பர்கள்பால், காலன், அணுகமாட்டான்.


பாடல் எண் : 07
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார இளையார் விடம் உண்ட எம் 
அருத்தனார் அடியாரை அறிவரே.

பொருள்:
ஈசன், ஒப்பற்ற ஒருவராய் விளங்குபவர், உலகங்களுக்கு எல்லாம் சோதியாய்த் திகழ்பவர். செம்மை யுடையவராய் விளங்கி யாவற்றினையும் திருக்குறிப்பால் இயக்குபவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் உரியவர்; விருத்தராகவும் இளமையுடையவராகவும் திகழ்பவர், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தருளியவர்; எமக்கு மெய்ப்பொருளாக இருப்பவர். அப்பெருமான், அடியவர் பெருமக்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்.


பாடல் எண் : 08
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு 
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா 
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத் 
துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே.

பொருள்:
விண்ணில் நிறைந்து நின்ற பேரழலாகிய ஒரு வடிவமானது, எண்ணத்தில் நிறைந்து ஏத்தி மேவிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அறிவு கொண்டு அறியமுடியாதவாறு திகழ்ந்தது. அப்பொருள், கண்ணுக்கு நிறைந்து குளிர்ச்சிமிக்க நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் தில்லை அம்பலத்தில் நின்று என் உள்ளம் நிறைந்து நின்று திருநடனம் புரியும் நடராசப்பெருமானே ஆகும்.


பாடல் எண் : 09
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் 
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் 
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை 
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே.

பொருள்:
சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு, மூன்று அசுரர் புரங்களை மாய்த்தவர். அவர் வீற்றிருக்கும் இடமானது தில்லை நகராகும். அத்திசை நோக்கிக் கைதொழும் அன்பர்களின் வினைகள் யாவும் விரைவில் விலகும். இது உண்மையே.


பாடல் எண் : 10
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் 
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து 
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே.

பொருள்:
திருமாலும், பிரமனும் ஈசனை நாடவேண்டும் என்று, முறையே பூமியில் குடைந்து தேடியும், வானில் திரிந்தும், சென்றனர். அவர்களால் காண இயலவில்லை. அதற்குக் காரணம் மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லையில் மேவும் அம்பலத்தில் ஆடும் நடராசப்பெருமானின் திருப்பாதமானது, என் நெஞ்சுள் இருப்பதே ஆகும்.


பாடல் எண் : 11
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், 
சதுரன் சிற்றம் பலவன் திருமலை 
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற 
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே.

பொருள்:
ஈசன், இனிய மொழியால் நவிலும் உமாதேவியைத்தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; எல்லாத்தன்மையிலும் தேர்ந்து ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய சதுரப்பாடு உடையவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு திருப்பாத விரல் கொண்ட ஊன்றியவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப்பெருமானுடைய மலர்ப் பாதத்தை நண்ணி, ஏத்தி, உய்ம்மின். 


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 06

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 81வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனை, கற்பகத்தை 
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந் தீ முழங்கத் 
திருநட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்துப் 
பெருநட்டம் ஆடியை “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே.

பொருள்:
கருமை நிலைபெற்ற நீலகண்டனாய், உலகங்களுக்குத் தலைவனாய், கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய், போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய், அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய், தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் ` தேவர்கள் தலைவன் என்று வாழ்த்துவேன்.


பாடல் எண் : 02
ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்:
வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள். அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள். உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது.


பாடல் எண் : 03
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே.

பொருள்:
கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டு அவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால், ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன்? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்து விட்டான்.


பாடல் எண் : 04
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பொருள்:
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.


பாடல் எண் : 05
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்துக் 
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே.

பொருள்:
சிவபெருமானுடைய அடியார்களே! நமக்கு நல்வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது. இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக. அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய், முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய், தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும்.


பாடல் எண் : 06
பூத்தன பொற்சடை பொன்போல் மிளிர புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூதக்கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக் 
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என் தன் கோல்வளைக்கே.

பொருள்:
பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச, அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க, "தெத்தே" என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவ பெருமானைப் போல, திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர் உளரோ? (என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு.)


பாடல் எண் : 07
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய் புலித்தோலும் என் பாவி நெஞ்சில் 
குடிகொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே.

பொருள்:
தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம் பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திரு வடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், புன்சிரிப்பும், உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும், உடல் முழுதும் பூசிய திருநீறும், பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும், இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன.


பாடல் எண் : 08
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன் 
அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே.

பொருள்:
அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்.


பாடல் எண் : 09
பொன் ஒத்த மேனிமேல் வெண் நீறு அணிந்து புரிசடைகள்
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால் இவ் இரு நிலமே.

பொருள்:
பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து, முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச, பிச்சை எடுத்துத் திரியும், உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய், வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது.


பாடல் எண் : 10
சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் 
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே.

பொருள்:
தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

வியாழன், 18 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 05

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 80வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
பாளை உடைக் கமுகு ஓங்கி பல் மாடம் நெருங்கி எங்கும் 
வாளை உடைப் புனல் வந்தெறி வாழ் வயல் தில்லை தன்னுள்
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் 
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே.

#பொருள்:
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்த மாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம்பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய்போன்ற இயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 02
பொருவிடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்
உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 03
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் 
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பரியான்
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
மாலையாகத் தொடுக்கப்பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 04
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய 
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற 
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேல் அசைத்த 
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 05
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க 
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய் நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!


பாடல் எண் : 06
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன்
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எம்கோன்
வானத்தவர் உய்ய வன்நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் 
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட் கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்குமாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 07
தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயில் மூழ்க 
எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள் 
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 08
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் 
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன், 
நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் "உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை" என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டிய போது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!


பாடல் எண் : 09
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ 
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 10
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை 
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணி தில்லை அம்பலவன் 
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''