வியாழன், 18 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 05

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 80வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
பாளை உடைக் கமுகு ஓங்கி பல் மாடம் நெருங்கி எங்கும் 
வாளை உடைப் புனல் வந்தெறி வாழ் வயல் தில்லை தன்னுள்
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் 
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே.

#பொருள்:
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்த மாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம்பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய்போன்ற இயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 02
பொருவிடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்
உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 03
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் 
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பரியான்
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
மாலையாகத் தொடுக்கப்பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 04
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய 
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற 
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேல் அசைத்த 
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!


பாடல் எண் : 05
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க 
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய் நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!


பாடல் எண் : 06
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன்
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எம்கோன்
வானத்தவர் உய்ய வன்நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் 
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட் கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்குமாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 07
தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயில் மூழ்க 
எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள் 
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 08
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் 
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன், 
நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் "உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை" என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டிய போது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!


பாடல் எண் : 09
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ 
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

பொருள்:
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!


பாடல் எண் : 10
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை 
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணி தில்லை அம்பலவன் 
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பது என்னே.

பொருள்:
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக