செவ்வாய், 9 டிசம்பர், 2014

திருமுறைகளின் போற்றி திரட்டு - 06


அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரை விரவு தென் கெடில நாடன் அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

கொடுவினையார் என்றும் குறுகா அடி
குறைந்து அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி
படுமுழவம் பாணி பயிற்றும் அடி 
பதைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி
கடுமுரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி
கடல் வையம் காப்பான் கருதும் அடி
நெடுமதியம் கண்ணி அணிந்தான் அடி 
நிறைகெடில வீரட்டம் நீங்கா அடி.

வைதெழுவார் காமம் பொய் போகா அடி
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி
கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி
கணக்கு வழக்கைக் கடந்த அடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும் அடி 
நீள்விசும்பை ஊடறுத்து நின்ற அடி
தெய்வப்புனல் கெடில நாடன் அடி 
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி
சோமனையும் காலனையும் காய்ந்தவ அடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்ல அடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் அடி 
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி
ஊழிதோறுஊழி உயர்ந்த அடி 
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்  அடி
புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும் அடி
இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.

திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி
உருவிரண்டு ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உரு என்று உணரப்படாத அடி 
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.

உரைமாலை எல்லாம் உடைய அடி 
உரையால் உணரப்படாத அடி
வரைமாதை வாடாமை வைக்கும் அடி 
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும் அடி 
அரைமாத்திரையில் அடங்கும் அடி 
அகலம் அளக்கிற்பார் இல்லா அடி
கரைமாங் கலிக்கெடில நாடன் அடி
கமழ்வீரட்டானக் காபாலி அடி.

நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடு ஆய் உலகம் நாடு ஆய அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த அடி
மறுமதியை மாசு கழுவும் அடி 
மந்திரமும் தந்திரமும் ஆய அடி
செறிகெடில நாடர் பெருமானடி 
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.

அணியனவும் சேயனவும் அல்லா அடி
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய அடி
பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி
பற்றற்றார் பற்றும் பவள அடி
மணியடி பொன்னடி மாண்பு ஆம் அடி
மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி
தணிபாடு தண்கெடில நாடன் அடி
தகைசார் வீரட்டத் தலைவன் அடி.

அம் தாமரைப்போது அலர்ந்த அடி
அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
முந்தாகி முன்னே முளைத்த அடி 
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி அடி
பந்தாடு மெல்விரலாள் பாகன் அடி
பவளத் தடவரையே போல்வான் அடி
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி 
வீரட்டம் காதல் விமலன் அடி.



ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! 
"திருச்சிற்றம்பலம்'' 

1 கருத்து: