பொறையுடைய பூமி நீர் ஆனாய் போற்றி!
பூதப்படையாள் புனிதா போற்றி!
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி!
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி!
வானோர் வணங்கப்படுவாய் போற்றி!
கறையுடைய கண்டம் உடையாய் போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!
முன்பாகி நின்ற முதலே போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா போற்றி!
அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி!
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி!
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி!
கண்பாவி நின்ற கனலே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
மாலை எழுந்த மதியே போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி!
மேலாடு திங்கள் முடியாய் போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி!
அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!
காலை முளைத்த கதிரே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி!
ஒள்எரி வீசும் பிரானே போற்றி!
படரும் சடைமேல் மதியாய் போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே போற்றி!
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி!
கடலில் ஒளியாய முத்தே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி!
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி!
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி!
மெய்சேரப் பால்வெண்நீறு ஆடீ போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி!
கைசேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
ஆறேறு சென்னி முடியாய் போற்றி!
அடியார்கட்கு ஆரமுதுதாய் நின்றாய் போற்றி!
நீறேறு மேனி உடையாய் போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி!
கூறேறு அம் கை மழுவா போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி!
காறேறு கண்டம் மிடற்றாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி!
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி!
உருகி நினைவார் தம் உள்ளாய் போற்றி!
ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி!
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி!
ஆரும் இகழப்படாதாய் போற்றி!
கருகிப் பொழிந்து ஓடும் நீரே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி!
தேடி உணராமை நின்றாய் போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி!
பொருளாக என்னை ஆட்கொண்டாய் போற்றி!
மெய்யாக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி!
கையானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி!
மேலாடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி!
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி!
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி!
கோலத்தால்குறைவில்லான் தன்னை அன்று
கொடிதாகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!
"திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக