இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்
இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி
திருமுறை : ஆறாம் திருமுறை 1வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
பாடல் எண் : 01
அரியானை அந்தணர் தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை தேனைப் பாலைத்
திகழ் ஒளியை தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், கலையறிவால் ஆராய்ந்து அறிவதற்கு அரியவர், தில்லை வாழ் அந்தணர்களின் சிந்தையில் விளங்குபவர், சிறப்பின் மிக்கதாகிய வேதங்களின் உட்பொருளாகத் திகழ்பவர், அணுவைப் போன்று நுண்மையாக இருப்பவர், யாராலும் அறிந்து கொள்ள முடியாதவராகவும் தத்துவமாகிய மெய்ப்பொருளாகவும் விளங்குபவர், தேனும் பாலும் போன்று இனிமையானவர், அஞ்ஞானமாகிய இருளை நீக்கும் பேரொளியாக விளங்குபவர், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மற்றும் திருமால், நான்முகன், நெருப்பு, காற்று, ஒலிக்கும் கடல், உயர்ந்து மேவும் மலை என யாங்கும் கலந்து மேவும் பெரும் பொருளாக விரிந்து விளங்குபவர். பெரும்பற்றப் புலியூர் என்னும் பெருமையுடைய தில்லையில் வீற்றிருக்கும் அப்பெருமானை ஏத்திப் போற்றி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு ஏத்துதல் செய்து வழிபடுவது மனிதப் பிறவியை எடுத்ததற்கு உரிய உண்மையான பயனாகும். அவ்வாறு ஈசனைப் போற்றாது இருப்பது மனிதப் பிறவியை வீணாக்கும் நாள் என்பதாகும்.
பாடல் எண் : 02
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னை
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், எல்லாக் கலைகளையும் கற்று வல்லமையுடன் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; வலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; வறியவர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும் அருள்செய்து ஆதரவு அளிப்பவர்; திருவாரூரில் வீற்றிருப்பவர்; நிகரற்றவராக விளங்குபவர்; தேவர்களால் எல்லாக்காலங்களிலும் தொழப்படுபவர்; பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தில்லையில் வீற்றிருப்பவர். அப்பெருமானை வாழ்த்தி ஏத்தாத நாள் பிறவியின் பயனை அடைந்ததாகக் கொள்ளத்தக்கதன்று.
பாடல் எண் : 03
கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி
வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட
வளர்மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி
அருமான வாள் முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணம் முடி வணங்க ஆடுகின்ற
பெருமானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; ஒலிக்கும் கழல்கள் காலில் ஒலிக்க, நெருப்பைக் கையில் ஏந்திப் பெருமையுடைய தோள்களை வீசி நடனம் புரிவர்; வளரும் சந்திரனைச் சடையில் அணிந்து கங்கையானவள் ஏத்துமாறு நடனம் புரிபவர். அவர் பெரும்பற்றப்புலியூரில் விளங்குபவர். அப்பெருமானை தினந்தோறும் ஏத்தி வாழ்த்த வில்லையானால் பிறவியின் பயன் அடைந்ததாக ஆகாது.
பாடல் எண் : 04
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை, அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும்
திரிசுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், அரிய தவச்சீலர்களால் தொழுது ஏத்தப்பெறும் தலைவர்; தேவர்களுடைய பெருமான்; அரனாகவும் மூப்பு கொள்ளாத அருமருந்தாகவும் விளங்குபவர்; தேவர்களுக்கு அருள் புரிந்தவர்; கடலும், மலையும் மண்ணும் விண்ணும், விண்மீன்களாகவும், திரிகின்ற சுடர்களில் சூரியன் சந்திரன் ஆகிய இருவராகவும், பிறவுமாகவும் விளங்குகின்ற பெருந்தகையாவர். அவர், பெரும்பற்றப்புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பற்றிப் பேசாத நாள், பிறவியின் பயனை உணர்ந்து நோக்காத நாள் என்கின்றவாறு பயனற்ற நாளாகும்.
பாடல் எண் : 05
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், எல்லாருக்கும் கிடைத்தற்கரிய சிறப்புமிக்க துணையாகத்திகழ்பவர்; அடியவர்களுடைய துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாகுபவர்; இப்பெரிய உலகத்துள் உள்ளத்தில் தோன்றி தோன்றாத் துணையாய் விளங்குபவர்; புலன்களின் வழிச்செல்லாது, உலகப் பொருளின் மீது உள்ள நாட்டத்தை நீக்கியவர்களுக்குப் பெருந்துணையாய் விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபடாத நாள், பிறவியின் பேற்றினை அடையாத நாளாகும்.
பாடல் எண் : 06
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், கரும்பு போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியை உடனாகக் கொண்டவர்; வைரத்தின் குன்று போன்று வெண்மை திகழும் திருநீற்றுத் திருமேனியராகக் காட்சி தருபவர்; அரும்பு விளங்கும் கொன்றை மலரை மாலையாகத் தரித்துள்ளவர்; வேதமும் ஆறு அங்கங்களும் ஆகியவர்; வண்டுகள் ரீங்காரம் செய்து சூழும் பொழில்களையுடைய அழகிய திருவாரூரில் சோதிச் சுடராய்த் திகழ்பவர்; எத்தகைய தன்மையாலும் அசைவு கொள்ளாத விளக்கின் ஒளியாகுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் கைதொழுது ஏத்திப் போற்றித் துதிக்காத நாள், பிறவியன் பயனை அடையாத நாள் ஆகும்.
பாடல் எண் : 07
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை
வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், ஏழு நரம்பின் வாயிலாக இசையாகவும் அத்தன்மையைக் கேட்டு மகிழ்கின்ற இனிய பயனாகவும் விளங்குபவர்; தேவர்களை அச்சுறுத்திய மூன்று அசுரர் புரங்களை மேரு மலையை வில்லாகக் கொண்டு அக்கினிக் கணை தொடுத்து எரித்தவர்; கடலில் தோன்றிய கொடிய நஞ்சினைக் கண்டத்தில் அடக்கித் தேவர்களைக் காத்தவர்; காமத்தின் வயப்படாத சிந்தையுடையவராகிய துறவியரின் உள்ளத்தில் மேவுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் விளங்க, அப்பெருமானை ஏத்திவழி படாத நாள், பிறவியின் பயனைக் காணாத நாளாகும்.
பாடல் எண் : 08
காரானை ஈர் உரிவைப் போர்வை யானை
காமருபூங் கச்சி ஏகம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானை பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர், எல்லாருக்கும், விரும்பும் நன்மைகளை வழங்கும் பாங்கில் திகழும் கச்சியில் விளங்கும் திருவேகம்பன் ஆவார்; வேற்றுமை இன்றி எல்லா அடியவர்களுக்கும் அன்புடன் அருள் புரிபவர்; தேவர்களாலும் அறியப்படாத பெருமையுடையவர்; பூவுலக மாந்தர்களும் தேவர்களும் பணிந்து, ஏத்தி நிற்கத் திருநடனம் புரிபவர்; பரஞ்சுடராய் பரம்பொருளாகி, எண்ணற்ற திருப் பெயர்களை உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் திகழ்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாத நாள், பிறவிப் பயனை அடையாத நாளாகும்.
பாடல் எண் : 09
முற்றாத பால் மதியம் சூடினானை
மூ உலகம் தான் ஆய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னை
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
சிவபெருமான், இளமையுடைய சந்திரனைச் சூடி விளங்குபவர்; மூன்று உலகங்களும் தானாக விளங்கி மேவுபவர். யாவற்றுக்கும் தலைவராகியவர்; பகைத்து நின்ற முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்தவர். ஒளியாகத் திகழ்பவர்; மரகதம் போன்ற எழில் வண்ணம் உடையவர்; தேனும், பாலும், இனிமை நலனை விளைவித்து, உடலுக்கு எழில் சேர்ப்பது போன்று, உயிருக்கு நல்லாக்கத்தையும் இனிமையையும் சேர்பவர், திருக்குற்றாலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அன்பின் மிக்கவர்; ஆங்குத் திருக்கூத்து நல்கி, மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை நல்குபவர்; பரஞானமும் உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி புகழ்ந்து ஏத்தாத நான் பிறவியின் பேற்றை அடையாத நாள் ஆகும்.
பாடல் எண் : 10
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும்
ஏழ் உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்
சோத நாள் எல்லாம் பிறவா நாளே.
பொருள்:
கரிய ஒளி வண்ணமுடைய திருமாலும், தாமரைமலரில் உறையும் பிரமனும் காணமுடியாதவாறு, சிறப்பின்மிக்க ஒளிதிகழும் நெருப்பின் பிழம்பாய் விளங்கிய சிவபெருமான், சிந்தையில் தோன்றும் அஞ்ஞானத்தை நீக்கும் ஞான ஒளியாகுபவர், பூவுலகம், ஆகாயம், தேவர்உலகம் மற்றும் உள்ள ஏழுலகங்களைக் கடந்து அண்டங்களையும் கடந்த பேரொளியாக விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பேசிப் புகழாத நாள், பிறவிப் பேற்றின் பயனடையாத நாள் ஆகும்.
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக