இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்
இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி
திருமுறை : முதல் திருமுறை 80வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
பாடல் எண் : 01
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பொருள்:
வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.
"இப்பாடல் சிற்றம்பலநாதன் திருவடியே பற்றுக் கோடாகக் கொண்டவர்களைப் பாவம் பற்றாது என்கின்றது."
பாடல் எண் : 02
பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
பிறப்பு இல்பெருமானை பின் தாழ்சடையானை
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.
பொருள்:
பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.
"சிற்றம்பலநாதரை மறவாதவர்களே மலமயக்கம் தீர்வார்கள் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 03
மை ஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்து ஓச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகு ஏத்தச்
செய்யான் உறைகோயில் சிற்றம்பலம்தானே.
பொருள்:
மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.
"வேதத்தை விரும்பிய சிவபெருமான் உலகேத்த உறையுங் கோயில் சிற்றம்பலம் என்கின்றது. இப்பாடல்."
பாடல் எண் : 04
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறை வந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.
மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.
"சிற்றம்பலநாதன் சேவடியை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 05
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
பொருள்:
செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.
"சிற்றம்பலத்தெழுந்தருளியிருக்கின்ற செல்வன் கழலை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 06
வருமாந் தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்
திருமாந் தில்லையுள் சிற்றம்பலம் மேய
கருமான் உரி-ஆடைக் கறைசேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.
பொருள்:
புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.
"சிற்றம்பலத்து எழுந்தருளியுள்ள பெருமான் திருவடியல்லது என்னுள்ளம் வேறொன்றையும் பேணாது என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 07
அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
பொருள்:
அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு மகிழ்ந்திருப்பவனும் உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.
"சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குபவர்களே தலையானவர்கள் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 08
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
பொருள்:
கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராதநோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.
"சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார் தீராத நோயெல்லாம் தீர்வர் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 09
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்
காணார் கழல் ஏத்த கனல் ஆய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
பொருள்:
வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம் பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.
"சிற்றம்பலத்தைத் துதிக்க, பெரியநோயெல்லாம் மாயும் என்கின்றது இப்பாடல்."
பாடல் எண் : 10
பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.
பொருள்:
மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.
"புறச்சமயிகள் புல்லுரையைக் கேளாது சிற்றம்பலநாதன் திருவடியைத்தினம் தொழுவோம் என்கிறது இப்பாடல்."
பாடல் எண் : 11
ஞாலத்து உயர்காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
பொருள்:
உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப் பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.
"திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பலநாதனைப் பற்றிச் சொன்ன தமிழ் மாலையைப் பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. இப்பாடல்."
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
மிக்க நன்று.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு