செவ்வாய், 23 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 08

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஐந்தாம் திருமுறை 2வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனை, 
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், பனை போன்ற நீண்ட துதிக்கையும் மூன்று வகையான மதங்களும் உடைய யானையின் தோலை உரித்தவர்; தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களின் மனத்தைக் கோயிலாகக் கொண்டு விளங்குபவர். யார் யார் எத்தன்மையில் காண விழைகின்றார்களோ அத்தகைய திருக்கோலத்தில் மேவிக் காட்சியளிப்பவர். அவர், அம்பலத்தில் விளங்கும் நடராசப் பெருமான் ஆவார். அப்பெருமானை, இமைப்பொழுது மறந்தாலும் உய்ய முடியுமோ! ஆதலால் நான் மறவாது அப்பெருமானை ஏத்துவேன் என்பது குறிப்பு.


பாடல் எண் : 2
தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக் 
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், பாவங்களைத் தீர்ப்பவர், அன்புடையவர், அன்பின் உலகமாக விளங்கும் சிவலோகத்தின் தலைவர்; ஐந்தொழில் முழுமுதலாய் விளங்கும் ஒப்பற்ற ஒருவனாய் விளங்குவர், பார்த்தனுக்குப் பாசுபதம் அருள் செய்த பரமன், சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் கூத்தப்பெருமான். அப்பெருமானை நான் மறந்தால் உய்ய முடியுமோ!.


பாடல் எண் : 03
கட்டும் பாம்பும் கபாலம் கை மான்மறி
இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள் தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், பாம்பைக் கங்கணமாகக் கட்டி இருப்பவர்; மான் கன்றையும் கபாலத்தையும் கையில் ஏந்தி இருப்பவர்; சுடுகாட்டில் விரும்பி நடனமாடுபவர்; முனிவர்கள் வாழும் தில்லை அம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப்பெருமானை இமைப்பொழுதும் நான் மறவாமல் ஏத்துவேன்.


பாடல் எண் : 04
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட 
நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என் 
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற 
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசனை மணலால் தாபித்துப் பால் கறந்து அபிடேகம் செய்த பிரமகாரியாகிய சண்டேசருக்கு, உலகம் எல்லாம் அருளாட்சி செய்யும் பெருமையை வழங்கியவர், பொன்னம்பலத்தில் தாண்டவம் புரியும் சிவபெருமான். தாணுவாகிய அப்பரமனை நான் மறவாது ஏத்துவன்.


பாடல் எண் : 05
பித்தனை பெருங்காடு அரங்கா உடை 
முத்தனை முளைவெண் மதி சூடியை 
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற 
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், மன்னுயிர்பால் பேரன்பு உடையவர், மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரிபவர், பாசம் நீங்கி முத்தனாய்த் திகழும் இயல்புடையவர், இளம்பிறை சந்திரனைச் சூடியவர்; சித்தனாய் விளங்குபவர்;,பொன்னம்பலத்தில் விளங்கும் அன்புடையவர். அப்பரமனை, அடியேன் மறவேன். மறந்தால் உய்வனோ?.


பாடல் எண் : 06
நீதியை நிறைவை மறைநான்கு உடன் 
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச் 
சோதியை சுடர்ச் செம்பொனின் அம்பலத்து 
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், அறநெறியில் புகலப்படும் நீதியாகத் திகழ்பவர், யாவற்றையும் உடைய நிறைபொருளானவர், நான்கு வேதங்களையும் ஓதி அருளிச் செய்தவர், யார்க்கும் அறிய ஒண்ணாத சோதியாக விளங்குபவர், ஒளி திகழும் பொன்னம்பலத்துள், ஆதியாக இருந்து நடம்புரிபவர். அப்பரமனை மறந்து அடியேன் உய்யமுடியுமோ?.


பாடல் எண் : 07
மைகொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள் 
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருள்:
ஈசன், கருமையான கண்டத்தை உடையவர், எட்டுத்தோள் உடையவர், மூன்று கண்ணுடையவர், படம் கொண்ட பாம்பை அரையில் நன்கு கட்டி இருப்பவர், திருமகள் விளங்கி மேவும் சிற்றம்பலத்தில் உறையும் எம்தலைவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்வு பெறமுடியுமோ?.


பாடல் எண் : 08
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ.

பொருள்:
வானுலகத்தில் உள்ள தேவர்கள் தொழுது போற்ற விளங்குவது தூய பொன் வேய்ந்த விமானத்தையுடைய சிற்றம்பலம் ஆகும். ஆங்குத் திருநடனம் புரியும் அம்பலக்கூத்தனை நான் மறந்து, எங்ஙனம் உய்வன்?.


பாடல் எண் : 09
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனை 
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை 
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், கார் காலத்தில் நன்கு விளங்கும் பிரணவ புட்பமாகிய கொன்றை மலர் மாலை யணிந்தவர்; உமாதேவியின் மணவாளர். தேவர் உலவும் தில்லையுள் திருநடனம் புரிபவர். ஆரா அமுதாகிய அப்பெருமானை நான் மறந்து உய்வு பெற முடியுமா?.


பாடல் எண் : 10
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் 
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் 
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை 
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.

பொருள்:
சிவபெருமான், கயிலையை அசைத்த இராவணனுடைய சிரங்கள் நெரியுமாறு ஊன்றிய திருப்பாதத்தை உடையவர், நீர்வயல் சூழ்ந்த தில்லையில் வீற்றிருப்பவர். அப்பரமனாகிய கூத்தப்பெருமானைத் தொண்டனாகிய யான் மறந்து உய்ய முடியுமா!.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக