புதன், 3 டிசம்பர், 2014

சமயக் குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்கள் துதி

சமய குரவர்கள் துதி 


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி....!

சமய குரவர்கள்

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே....!

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்


பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் 
குண்டரை வென்று முன் கூடல் வைகியே 
வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் 
தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்


பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் 
கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு 
வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு 
துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்


வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் 
உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் 
இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று 
அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.

மாணிக்கவாசக சுவாமிகள்


கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் 
சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் 
முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் 
வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.


சந்தான குரவர்கள் துதி 


சந்தானக் குரவர்கள்

ஈராண்டில் சிவஞானம் பெற்று உயர்ந்த 
மெய்கண்டார் இணைத்தாள் போற்றி...!
நாராண்ட பல்அடியார்க்கு அருள் புரிந்த
அருள் நந்தி நற்றாள் போற்றி...!
நீராண்ட கடந்தை நகர் மறைஞானசம்பந்தர்
நிழல் தாள் போற்றி...!
சீராண்ட தில்லை நகர் உமாபதியார் 
செம்பதுமத் திருத்தாள் போற்றி...!

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''