சனி, 13 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 02

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   மூன்றாம் திருமுறை 1வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல்கீதமும் பல்சடைப்பனி கால் கதிர் வெண்திங்கள் 
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே.

நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.


பாடல் எண் : 02
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் 
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ.

நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப் பட்டம் அணிந்தவனே, பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, (அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ? கூறியருள்க.


பாடல் எண் : 03
நீலத்தார் கரிய மிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலைப்பொடி நீறு அணிவார் சடையார்
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழக்
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே.

நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர் (திருநீலகண்டர்). அழகிய நெற்றிக் கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடி பூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.


பாடல் எண் : 04
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண்ணிடைக் கோல வாள்மதிபோலும் முகத்து இரண்டு அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்
கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழற்சேவடி கைதொழ
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே.

பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச்செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான், (நடராசப் பெருமான்), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற் கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழு முதல்வன் அடியவர்க்கு வினைத் தொடர்பு இல்லை.


பாடல் எண் : 05
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணிமிடறா 
பகுவாயதோர் பல்லையார் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா
தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழ
இல்லையாம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே.

திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீல மணி போலக் கறுத்த திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே! தில்லைவாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும்.


பாடல் எண் : 06
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா 
உமை பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல்
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே.

திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவ தேவனே! அம்பிகை பாகமுடைய பகவனே! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள் அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.)


பாடல் எண் : 07
சாதியார் பளிங்கி(ன்)னொடு வெள்ளிய சங்க வார்குழையாய் திகழப்படும்
வேதியா விகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல்லடியார்களை
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே.

நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது ; வருத்தா தொழியும்.


பாடல் எண் : 08
வேயினார் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது தாயினாய் இடுகாட்டெரி ஆடல் அமர்ந்தவனே
தீயினார் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேலுலகே.

மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங்கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.


பாடல் எண் : 09
தாரினார் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள்சடையாய் தலைவா நல்ல
தேரினார் மறுகின் திருவாரணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகாய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய் உன சீரடி ஏத்துதுமே.

மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத்தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.


பாடல் எண் : 10
வெற்று அரையுழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை 
கொள்ளன்மின் மற்றவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழற்சேவடி கைதொழ
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே.

ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி (ஆன்ம லாபம்) கொள்ள வல்லவராவர்.

பாடல் எண் : 11
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையாற் சொன்ன பத்திவை
கூறு மாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே.

மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேத சிவாகமங்களை யுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப் புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர்.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

2 கருத்துகள்: