செவ்வாய், 16 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 03

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 22வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சடை கண்டனாரைக் காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே.

பொருள்:
சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.


பாடல் எண் : 02
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார் ஆறு சூடி ஆயிழையாள் ஓர் பாகம்
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே.

பொருள்:
காளையை வாகனமாகவுடையவராய், பிறை ஒளிவீசும் தலையிலே கங்கையாற்றை உடையவராய், கங்கையைச் சூடிக்கொண்டு, பார்வதி ஒருபாகமாக, நறுமணம் கமழும் சோலைகளை உடைய தில்லை நகரிலே தாம் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே உடலில் திருநீறு பூசிக்கொண்டு பலகாலம் ஞானத்தீயிடைக் கூத்தாடுமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 03
சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று
கடிகொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடிகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
சடையை உடையவராய்த் திருநீற்றையே சந்தனமாகப் பூசியவராய், ஒரேபிறை ஒளிவீசும் தலையை உடையவராய், மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்பதனை உடையவராய், நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரில் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே, திருவடிகளிலே வீரக்கழல் ஆரவாரம் செய்ய நின்று, ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 04
பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னி
மையரிக் கண்ணினாளும் மாலுமோர் பாகம் ஆகி
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
குளிர்ந்த பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய அல்குலை உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 05
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னிப்
பூதனார் பூதம் சூழப் புலியுரி அதளனார் தாம்
நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில்வெண் குழைகள் தாழக் கனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
ஐம்பூதங்களாக இருக்கும் பெருமான், தம் வாயால் வேதம் ஓதினராய்ப் பிறை ஒளிவீசும் சென்னியராய்ப் புலித்தோலை அணிந்தவராய்த் தாம் எல்லோருக்கும் தலைவராய்ப் பூதங்கள் சூழத் தில்லையம்பதியில் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே காதிலணிந்த வெண்குழைகள் தொங்குமாறு ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 06
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி
பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே.

பொருள்:
ஒரே உடம்பில்தாமும் பார்வதியுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய், பூதக்கூட்டங்கள் தாளம் போட, கூத்தாடுதலில் பழகிய எம் மேம்பட்ட பெருமான், மேகங்கள் தங்கும் தில்லையிலே சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே அகண்டமாய் வளருமாறு நின்று, விளங்குகின்ற ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 07
முதல்தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி
மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்;
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
முதன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடைய சடைமுழுதும் பிறை தன் ஒளியைப் பரப்பும் சென்னியை உடையவராய், மதம் பொருந்திய யானையை கொன்று அதன் தோலைப் போர்த்திய வலிமை உடையவராய், தேன் உண்டு களித்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நிறைந்த சிற்றம்பலத்தில் கோபம் கொண்ட பாம்பு படமெடுத்து ஆடச் சிவபெருமான் ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 08
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணிநிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
வேதம் ஓதுபவராய், மழுப்படை ஒன்றை ஏந்தியவராய், அழகிய பிறை நிலவொளி வீசும் சென்னியராய், எல்லோர் உள்ளத்தும் தங்கியிருப்பவராய், எங்கள் தலைவராய், தம்மைத் துதிப்பவர்களுடைய துயரங்களை நீக்குபவராய், நீர்ப் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே விளங்குகின்ற சிற்றம்பலத்திலே, சிவபெருமான் தம் கழல் ஒலி செய்ய நின்று ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.


பாடல் எண் : 09
விருத்தனாய் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம் பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.


பாடல் எண் : 10
பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னி
காலனைக் காலால் காய்ந்த கடவுளார்; விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலஞ்சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடும் ஆறே.

பொருள்:
பாலனாகவும் மூத்தோனாகவும் காட்சி வழங்கிக் குளிர்ந்த பிறை ஒளிவீசும் சென்னியராய்க் காலனை காலால் வெகுண்ட பெருமானார் காளையை இவர்ந்து உலகவர் கூடி வணங்கும் தில்லையம்பதியில் சிறப்பாகப் போற்றப்படும் சிற்றம்பலத்திலே நீலகண்டராய் விரிவாக ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.


பாடல் எண் : 11
மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே.

பொருள்:
அறிவற்ற அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.



"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக