புதன், 17 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 04

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 23வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது

பாடல் எண் : 01
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.

பொருள்:
அநாதியான வினையின் நீங்கியவனே! எல்லாருக்கும் முற்பட்டவனே! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே! மேம்பட்டவனே! மேம்பட்ட யோகியே! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன். யாதனால் அடியேன் பத்தி செய்வேன்? அடியேனை நீ இகழவேண்டா. அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன்.


பாடல் எண் : 02
கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருஉரு உடைய சோதீ
திருத்தம் ஆம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.

பொருள்:
மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்தொன்றிப் பாடமாட்டாதேனாகிய அடியேன் வந்துள்ளேன்.


பாடல் எண் : 03
கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் மாறே.

பொருள்:
அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன். இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால், நீர் நிலைகளில் வாளை மீன்கள் பாயும் வளம் மிகுஞ் சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட நீ ஆடுமாற்றால் (ஆடுதலின் பேறாக) உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன் ஆவேன்.


பாடல் எண் : 04
சிந்தையைத் திகைப் பியாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ.

பொருள்:
சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும். அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய். இனி அடியேன் செயற்பாலது யாது உள்ளது?.


பாடல் எண் : 05
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் மாறே.

பொருள்:
அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே, வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன்.


பாடல் எண் : 06
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.

பொருள்:
வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன். ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன். உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தவாறு இதுவாம்.


பாடல் எண் : 07
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐய நீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான் பரமநான் வந்த வாறே.

பொருள்:
அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய, என் தலைவனே! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே! நீ அருள் செய்வாயாக. இவ்வுலகிலே மேம்பட்ட மிகுஞ் சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தவாறு இதுவாம்.


பாடல் எண் : 08
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகண் மேலே
கனைப்பரால் என் செய்கேனோ கறையணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த வாறே.

பொருள்:
விடக்கறையை அணிந்த நீலகண்டனே! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது. அடியேன் யாது செய்வேன். வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில் உன் இருப்பிடத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தவாறு இதுவாம்.


பாடல் எண் : 09
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்செலாள் காண நின்று அழக நீ ஆடும் மாறே.

பொருள்:
தேவர்கள் தலைவனே! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே. மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உடயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதிக்கான நீ ஆடுந்திறம் இருந்தவாறு என்னே!


பாடல் எண் : 10
மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்
விண்ணுண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் மாறே.

பொருள்:
பூமியை உண்ட திருமாலும், மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே, தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை, அதன் மாண்பை (இன்னும்) காணமாட்டாராகின்றனர். (அவர் விதி இருந்தவாறென்னே.!)



"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக