செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 14

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 27 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றின் கண் எழுந்தருளியுள்ள இறைவர், அன்பர்களின் சிந்தையின்கண் வந்து பொருந்துதல் உடையவர்; சீர்மை உடையவர்; பொந்துகளை உடைய நீண்ட புலால் உடைய வெண் தலையைக் கையில் ஏந்தியவர்; முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலைவேல் பிடித்து, அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர்.


பாடல் எண் : 02
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையி னீருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெயஞ் சாடுமை யாறரே.

பாடல் விளக்கம்‬:
ஒருபாகத்தே திருமாலை உடையவர். பால்மதியை மகிழ்ந்தளித்தவர். இடர்கள்போக ஆனையின் உரியைப் போர்த்தவர், தோள்களில் கொன்றைமலர் சூடியவர். ஆனைந்து ஆடுபவர்.


பாடல் எண் : 03
நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத்
தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவரே! நெஞ்சமாகிய ஆழமுடைய நீர் நிலைக்குள்ளே வஞ்சம் என்கின்ற தப்பவியலாத சுழியிலே நான்பட்டு இறக்கும் போது. தேவரீர் திருநாமமாகிய திருவைந்தெழுத்தும் தோன்ற அருள்வீராக.


பாடல் எண் : 04
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாருமை யாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் தம்மை நினைக்கின்றவர்தம் நெஞ்சில் உள்ளவர். நீண்ட முப்புரங்கள் மூன்றையும் சுடர்விடுகின்ற அழல் உண்ணுமாறு எரி யூட்டியவர். பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துத் தம்திருமேனியிற் போர்த்தவர், எல்லாப் பொருள்களினுள்ளும் கலந்து நிற்கும் இயல்பினர்.


பாடல் எண் : 05
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடல ராடல ரன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியரை யாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றில் எழுந்தருளும் இறைவர், பருப் பொருளாயவர். நுண்பொருளாயவர். பார்த்தற்கு அரியவர். அரிய பாடலையும் ஆடலையும் உடையவர். கரிய கழுத்தினர் (திருநீல கண்டர்). பிறர்க்கெலாம் காண்டற்கு அரியவர். தொண்டருக்கோ எளியவர்.


பாடல் எண் : 06
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போது மிலாதது மன்றியும்
அலரும் போதும் அணியுமை யாறரே.

பாடல் விளக்கம்‬:
இருள்புலரும் காலைப் பொழுதிலும் சூரியன் மறையும் அந்திப்பொழுதிலும் இதழ்விரியும் மலர்களால் விதிமுறை தெரிந்தோர் சிலர் பணிய அங்ஙனம் ஆகமவிதி அறியாதார் இறைவன் சூடும் மலரல்லாத மலர்களையும், இலைகளையும் கொண்டு அருச்சிக்க அவற்றையும் அணிவன் ஐயாறன்.


பாடல் எண் : 07
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடுமை யாறரே.

பாடல் விளக்கம்‬:
இம் மங்கையைக் காதன்மை செய்தவர் இடப் பாகத்தே அழகிய மாலையணிந்த கூந்தலையுடைய பார்வதியைக் கொண்ட கங்கை மாலையர், அங்கமாலை முதலியவற்றைச் சூடும் ஐயாறர்.


பாடல் எண் : 08
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.

பாடல் விளக்கம்‬:
முன் துன்ப நெறியின்கண் முயன்றொழுகுவீர் எல்லோரும் பின் அத்துன்ப நெறியினின்று பிரித்தருளுவீராக என்று வேண்டும் அறியாமையுடையவர்களே! நிலைத்த ஐயாற்றில் எழுந்தருளிய மாதவனை முறையே தொழத்தவமாகும்.


பாடல் எண் : 09
ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவ னின்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.

பாடல் விளக்கம்‬:
பஞ்சகவ்வியங்களைத் திருவபிடேகம் கொண்டு ஆடுகின்றவனாகிய பெருமான் திருமுடியில் வானையளாவிய கங்கை பாய்வதைக் காண்பீராக; ஐயாறு புகுந்த அடியேனுக்கு அவன் இன்னருள் தேன் ஆறு திறந்து பாய்ந்தாற் போன்று தித்தித்திருக்கும்.


பாடல் எண் : 10
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்க னீரைந்து வாயு மலறவே
அரக்கி னானடி யாலுமை யாறனே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செவ்வரக்கினைப் போன்று சிவந்த மேனியனும், அழகிய தளிர் போன்று விளங்கும் மேனியனும் ஆவன்; செவ்வரக் கனைய சிவந்த அடி உடைய உமாதேவி அஞ்சுதலும், `அஞ்சேல்` என்று கூறி இராவணனது பத்து வாய்களும் அலறுமாறு தன் திருவடி விரலால் அரக்கியவன் ஆவன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக