செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 16

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஆறாம் திருமுறை 37 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் 
அனலாடி ஆரமுதே என்றேன் நானே
கூரார் மழுவாள் படை ஒன்று ஏந்திக் 
குறள் பூதப்பல் படையாய் என்றேன் நானே
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே
பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆரா அமுதே என் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே! தீயில் கூத்து நிகழ்த்துபவனே! கிட்டுதற்கு அரிய அமுதமே! கூரிய மழுப்படையை ஏந்துபவனே! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே! ஆயிரம் பெயர் உடையவனே! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன்.


பாடல் எண் : 02
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் 
தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே 
முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏவார் சிலையானே என்றேன் நானே
இடும்பைக் கடல் நின்றும் ஏற வாங்கி
ஆவா என்று அருள்புரியும் ஐயாறன்னே
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே! பழையோய்! பிறைசூடி! முதல்வா! முக்கண்ணா! அம்பு பூட்டிய வில்லினனே! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ! என்று இரங்கி அருள் புரியும் ஐயாறனே! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன்.


பாடல் எண் : 03
அஞ்சுண்ண வண்ணனே என்றேன் நானே
அடியார்கட்கு ஆர் அமுதே என்றேன் நானே
நஞ்சணி கண்டனே என்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர உள்புக்கு இருந்த போது 
நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
அழகிய நறுமணப் பொடி பூசியவனே! அடியவர்களுக்கு ஆரமுதே! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 04
தொல்லைத் தொடு கடலே என்றேன் நானே
துலங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எல்லை நிறைந்தானே என்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா என்றேன் நானே
அல்லல் கடல் புக்கு அழுந்து வேனை 
வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பழைய மேல் கடலே! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே! விளங்கும் இளம் பிறை சூடீ! உலகம் முழுதும் நிறைந்தவனே! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 05
இண்டைச் சடைமுடியாய் என்றேன் நானே
இருசுடர் வானத்தாய் என்றேன் நானே
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே
துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே
கண்டம் கறுத்தானே என்றேன் நானே 
கனலாகும் கண்ணானே என்றேன் நானே
அண்டத்துக்கு அப்பாலாம் ஐயாறன்னே
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
சடையில் முடி மாலை அணிந்தவனே! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே! அடியவரால் வணங்கப் படுபவனே! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே! நீல கண்டனே! தீக் கண்ணனே! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 06
பற்றார் புரமெரித்தாய் என்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே 
கடுவிடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளாய் என்றேன் நானே
பார்த்தற்கு அருள் செய்தாய் என்றேன் நானே
அற்றார்க்கு அருள் செய்யும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பகைவர் திரிபுரத்தை எரித்தவனே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே! விரைந்து செல்லும் காளை வாகனனே! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 07
விண்ணோர் தலைவனே என்றேன் நானே
விளங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே
ஏகம்பம் மேயானே என்றேன் நானே
பண்ணார் மறை பாடி என்றேன் நானே
பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே
அண்ணா ஐயாறனே என்றேன் நானே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
தேவர் தலைவனே! விளங்கும் பிறை சூடியே! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே! ஏகம்பத்தில் உறைபவனே! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே! ஆன்மாக்களின் தலைவனே! வெள்ளிய நீறணிந்தவனே! அண்ணால்! ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 08
அவனென்று நானுன்னை அஞ்சாதேனை
அல்லல் அறுப்பானே என்றேன் நானே
சிவனென்று நானுன்னை எல்லாம் சொல்லச்
செல்வம் தருவானே என்றேன் நானே
பவனாகி என் உள்ளத்துள்ளே நின்று
பண்டை வினை அறுப்பாய் என்றேன் நானே
அவன் என்றே ஆதியே ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
வீணன் என்று சொல்லுமாறு, உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே! ஆதியே! ஐயாற்றுப் பெருமானே! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 09
கச்சி ஏகம்பனே என்றேன் நானே 
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சல் மணாளனே என்றேன் நானே 
நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே
உச்சம் போது ஏறு ஏறீ என்றேன் நானே
உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
கச்சியில் ஏகம்பத்து உறைபவனே! கயிலாயனே! குடந்தை நாகைக் காரோணனே! நித்திய கல்யாணனே! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே! அச்சம், நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 10
வில்லாடி வேடனே என்றேன் நானே 
வெண்ணீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே
சொல்லாய சூழலாய் என்றேன் நானே 
சுலாவாய தொல்நெறியே என்றேன் நானே
எல்லாமாய் என்னுயிரே என்றேன் நானே
இலங்கையர்கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே;
அல்லா வினை தீர்க்கும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக