வெள்ளி, 26 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : முதல் திருமுறை 120 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழிலாமை கொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான் தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.


பாடல் எண் : 02
கீர்த்தி மிக்கவன் நகர் கிளரொளி உடன் அடப்
பார்த்தவன் பனிமதி படர் சடை வைத்து
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.


பாடல் எண் : 03
வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர்
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.


பாடல் எண் : 04
வாய்ந்த வல் அவுணர் தம் வளநகர் எரியிடை
மாய்ந்து அற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.


பாடல் எண் : 05
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேன்மர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.


பாடல் எண் : 06
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை இணையில இறைவனை எழில் திகழ்
என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.


பாடல் எண் : 07
வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம் அது ஆகி தன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.


பாடல் எண் : 08
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.


பாடல் எண் : 09
விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வளநகர் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
வானகத்தே வாழ்வார் தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.


பாடல் எண் : 10
மருளுடை மனத்து வன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள் தம் அந்தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர் நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.


பாடல் எண் : 11
நலமலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலைமலி புனல் மல்கும் அந்தண் ஐயாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்று வல்லார் மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.

பாடல் விளக்கம்‬:
அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலை நலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக