திங்கள், 29 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 38 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
நம் தலைவனாராகிய ஐயாறனார், சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய், மான் குட்டியையும், மழுப்படையையும், உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார்.


பாடல் எண் : 02
பொடிதனைப் பூச வைத்தார் பொங்கு வெண்ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால் அவைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
ஒளி விளங்கும் பூணூலை அணிந்து, கொடிய நாகத்தைப் பூண்டு, கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து, அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார்.


பாடல் எண் : 03
உடைதரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய் புலித்தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
கீளொடு கோவணம் அணிந்து, உலகங்களை நிலை நிறுத்தி, மழுப்படை ஏந்தி, பாய்கின்ற புலியின் தோலை உடுத்து, காளை எழுதிய கொடியை உயர்த்தி, வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார்.


பாடல் எண் : 04
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலினாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார், சடையில் தூய பிறையைச் சூடி, முடி மாலையை விளங்க வைத்து, வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய், அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார்.


பாடல் எண் : 05
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய், அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய், சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய், மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து, பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து, யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவராவார்.


பாடல் எண் : 06
சங்கணி குழையும் வைத்தார் சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய், அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய், சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய், எல்லா உலகங்களும் படைத்தவராய், இரவையும், பகலையும் தோற்றுவித்தவராய், கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய், வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணர வைத்தவராய் உள்ளார்.


பாடல் எண் : 07
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய், காளையை ஏறியூர்பவராய், அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய், அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய், அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய், அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய், யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார்.


பாடல் எண் : 08
ஏறு உகந்து ஏற வைத்தார் இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக் காளை வாகனத்தை உடையவராய், இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய், நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய், இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய், பார்வதி பாகராய், கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார்.


பாடல் எண் : 09
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய், ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய், இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய், இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய், தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய், தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவராய் உள்ளார்.


பாடல் எண் : 10
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.

பாடல் விளக்கம்‬:
தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக