இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி
திருமுறை : நான்காம் திருமுறை 92 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
சிந்திப்ப அரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி
அந்திப் பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்து, பாம்பினைத் தனது திருமேனியில் சுற்றி நடனமாடும் ஐயாறனின் திருவடிகள், சிந்தனை செய்யும் நமது அறிவிற்கு எட்டாதவை: அவன் அருளாலே அவனைத் தியானிக்கும் அடியார்களுக்கு, சிறந்த தேன் போன்று இனிமையான உணர்வினை முந்தி அளித்து, பின்னர் அவர்களது உயிருடன் பிணைத்து நிற்கும் கடுமையான இருள் போன்ற பழவினையை தீர்த்து அவர்களுக்கு முக்தி அளிப்பன.
பாடல் எண் : 02
இழித்தனவே ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன ஆறங்கம் ஆனவை ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், இகழ்வாகக் கருதப்படும் ஏழு வகைப் பிறப்புகளையும் அறுத்து எனக்கு முக்தி அளித்து; எனது மனதினில் இன்பத்தைப் பொழிந்தன; கூற்றினை உதைத்து, சிவபிரானை வழிபட்டுப் போற்றிய சிறுவன் மார்க்கண்டேயனைக் காத்தன; மேன்மையான முறையில் செய்யவேண்டும் என்று தக்கனால் தொடங்கப்பட்ட வேள்வியை அழித்து, அந்த வேள்விக்குத் துணை செய்தவர்களையும் தண்டித்தன. அத்தகைய திருவடிகள், வேதங்களின் ஆறு அங்கங்களாகத் திகழ்கின்றன.
பாடல் எண் : 03
மணிநிறம் ஒப்பன பொன்னிறம் மன்னின மின்னியல்வாய்
கணி நிறம் அன்ன கயிலைப் பொருப்பன காதல் செய்யத்
துணிவன சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், நல்லொழுக்கத்துடன் இறைபணியை விடாது தொடர்ந்து செய்யும் தொண்டர்கள் எளிதில் அடையும் வகையில் திகழ்வன: தேவர்களுக்கு அவர்கள் அடைய முடியாத தொலை தூரத்தில் உள்ளன: மாணிக்கத்தைப் போன்று செம்மையாகவும், அழகில் பொன்னினைப் போன்றும், மின்னலைப் போன்று கண்ணைப் பறிக்கும் ஒளியுடனும் திகழ்வன; வேங்கை மரத்தின் பூவினைப் போன்று விளங்குவன, சிறப்பான தன்மையில் கயிலை மலையைப் போன்று விளங்கும் அந்த திருவடிகள் அடியார்கள் விரும்பி காதலிக்கப்படும் தன்மையில் உள்ளன.
பாடல் எண் : 04
இருள் தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண்ணிழந்து உண் பொருள் நாடிப் புகலிழந்த
குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக்குழி நின்று
அருள் தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
உயிர் மெய்ஞ்ஞானத்தை உணரவிடாமல் ஆணவமலம், கண்ணின் பார்வையை மறக்கும் படலம் போன்று செயல்பட்டு அறிவினை மறைக்கின்றது. அதனால் பார்வையை இழந்த அறிவு எனப்படும் கண், உண்மையான பொருளைத் தேடி அலைகின்றது அல்லது ஆணவம் விளைக்கும் அறியாமையால் மெய்ப்பொருளை உணரும் வழியில் செல்லாமல் வழிதவறி விடுகின்றது. ஐயாறனின் திருவடிகள், தன்னை வழிபடும் அகக் கண் இல்லாத குருடர்கள், தங்களது அறியாமையால் செய்த செயல்களால் நரகக் குழியில் விழுந்தபோது, அவர்களுக்கு கைகொடுத்துத் தூக்கி விடும், மேலும் அவர்களுக்கு முக்தியையும் அளிக்கும்.
பாடல் எண் : 05
எழுவாய் இறுவாய் இலாதன வெங்கண் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன மாநரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், ஆதியும் அந்தமும் இல்லாதன கொடுமையான பிறவிப் பிணியைத் தவறாமல் தவிர்க்கும் மருந்து ஆவன, உயிர்களுடன் பிணைக்கப்பட்டுள்ள வினைத் தொகுதியின் ஒரு பகுதியைக் கழிப்பதற்காக உயிர்களை நரகத்தில் ஆழ்த்தினாலும், உயிர்கள் பால் கொண்டுள்ள கருணை காரணமாக, அவற்றை மீண்டும் தகுதியான உடலுடன் பிணைத்து எஞ்சியுள்ள வினைகளைக் கழிப்பதற்கு வாய்ப்பு அளிக்கின்றன. சிவபிரானின் திருவடிகளில் மிக்க அன்பு கொண்டு அழுபவர்க்கு, அமுதமாக செயல்படுவன ஆகும் என்பதை உணர்வாயாக.
பாடல் எண் : 06
துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்றயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப்பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க அவை ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், அடியார்கள் துன்பக் கடலைக் கடக்க உதவும் தோணியாக செயல்பட்டு இன்பமாகிய கரையில் கொண்டு சேர்ப்பன, பொன்னினை விட அதிகமாக ஒளி வீசுவன. பொன் மற்றுமுள்ள உலகப் பொருட்களை, பொய்யான பொருட்களாகக் கருதி அவற்றில் பற்று ஏதும் வைக்காது மெய்ப்பொருளான சிவபிரானிடத்தில் பற்று வைக்கும் அன்பர்களுக்கு, இந்த திருவடிகள், அணியாகத் திகழ்வன.
பாடல் எண் : 07
களித்துக் கலந்ததொர் காதல் கசிவொடு காவிரி வாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுதூட்டி அமரர்கள் சூழ் இருப்ப
அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், பல அடியார்களுடன் கலந்து மகிழ்ந்து இருந்து, காவிரி நதியினில் நீராடி, மனதினில் கசிந்து எழும் அன்புடன் தொழுது நிற்கும் அன்பர்களை, அவர்கள் மீது குற்றம் ஏதும் இல்லாத தனது அருளாகிய தேனைத் தெளித்து, தனது கருணை என்னும் சுவையான அமுதினை ஊட்டி, பல தேவர்கள் அந்த அடியார்களைச் சூழ்ந்து இருக்கும் நிலையில் நிறுத்தி, செல்வத்துள் பெரும் செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும்.
பாடல் எண் : 08
திருத்திக் கருத்தனைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளொடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், தங்களது உள்ளத்தின் சிந்தனைகளைத் திருத்தம் செய்து, எண்ணங்களை அடக்கி, சிவபிரானைத் தவிர வேறு ஒன்றையும் நினையாமல், உடலினையும் வருத்தி, மணமும் ஒளிரும் நிறமும் கொண்ட பூக்களை உயர்த்தி எடுத்தித் சிவபிரானது திருவடிகளில் தூவி, தங்களது ஆன்மாவின் நிலையை உயர்த்தும் அடியார்களுக்கு, விண்ணுலகத்தில் ஒரு இடத்தினை அவர்களுக்காக பதிவு செய்து தரும் திறன் உடையன.
பாடல் எண் : 09
பாடும் பறண்டையும் ஆந்தையும் ஆர்ப்பப் பரந்து பல் பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடும் குழல் செய்ய வைய நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், கௌதாரி ஆந்தை முதலியன ஆரவாரம் செய்ய, அந்த காட்டினில் நிறைந்து உலவும் பேய்கள் ஒன்று கூடி முழவு வாத்தியத்தின் மீது குவிந்து ஒலி எழுப்ப, குறுநரிகள் குழலில் வரும் ஓசையினைப் போன்று ஊளையிட, இத்தகைய ஆரவாரத்தின் அதிர்ச்சியைத் தாளமுடியாமல் நெளியும் தரையினையும், பிணங்களையும் கொண்ட சுடுகாட்டில் நடமாடுகின்றன.
பாடல் எண் : 10
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்த்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன பாங்கறியா
என் போலிகள் பறித்திட்ட இலையும் முகையுமெல்லாம்
அம்போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், என்னைப் போன்று சைவ சமய நியமங்கள் தெரியாது இறைவனை வழிபடும் அடியார்கள், அறியாமையால் இடும் இலைகளையும் மொக்குகளையும், பெருந்தன்மையுடன் அன்று மலர்ந்த புதிய பூக்களாக ஏற்றுக் கொண்டு அத்தகைய அடியார்களுக்கு நன்மை அளிப்பன: சிவபிரானைப் போன்று தாங்களும் தேவர்கள் என்ற எண்ணத்துடன், உடலளவில் தங்களது தலையினை சாய்த்து சிவபிரானை வணங்கினாலும், மனதினில் பணிவு, பக்தி ஏதும் இன்றி நிமிர்ந்த மனத்துடன் வணங்கும் தேவர்கள், உயர்ந்த மலர்களாகிய கற்பகம் மந்தாரம் கொண்டு, சிவபிரானின் திருப்பாதங்களில் தூவினாலும் அந்த மலர்களை ஏற்றுக் கொள்ளாததால், மலர்களால் மறைக்கப்படாமல், பவள நிறத்துடன் பெருமானின் திருவடிகள் காணப்படும்.
பாடல் எண் : 11
மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்
அலையார் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
அலைகள் மிகுந்த காவிரி நதியால் சூழப்பட்ட திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறனின் திருவடிகள், மலையரசனின் மகளாகிய உமையம்மையின் மனதினில் நிலையாக இருப்பன; இறைவனின் திருவடிகளை எப்போதும் வானவர்கள் வணங்குவதால், அவர்களின் முடிகளில் நிலையாக இருப்பன; சிவபெருமானை வழிபட்டு நிற்கும் அடியார்களால் மதிக்கப்படுவன: இழிந்த நிலையாக மதிக்கப்படும் பிறவிப் பிணியை நீக்கும் தன்மை படைத்தன, மற்றும் அடியார்களுக்கு பொன்னுலகம் அளிப்பன.
பாடல் எண் : 12
பொலம் புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை ஆவன பொன்னனையாள்
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணித் திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள் புதியதாக மலர்ந்த பொற்றாமரைப் பூக்களைப் போல்வன: தம்மை வழிபடும் அடியார்கள் தனித்து வருந்தும் பொழுது, அவர்களது வருத்தத்தைப் போக்கும் துணையாக விளங்குவன; பொன் போன்று ஒளியுடைய பார்வதி தேவியின் சிலம்பு, பாடகம், கிண்கிணி போன்ற அணிகலன்கள் தம்மிடையே ஒலிக்கும் தன்மை உடையன.
பாடல் எண் : 13
உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், தங்களுக்கு உதவும் உற்றார்கள் எவரும் இல்லாதவர்க்கு, உறுதுணையாக இருப்பன: சிவ ஆகமங்களை இடைவிடாமல் ஓதி, நல்ல நூல்களைக் கற்கும் சான்றோர்கள் துதிக்கும் பெருமை படைத்தன, சிவபிரான் மீது அன்பு செலுத்தி அவரை விரும்பும் அடியார்களுக்கு, மேன்மையான வீட்டுலகம் அளிப்பன, பொருளும் செல்வமும் இல்லாதவர்களுக்கு கிடைத்தற்கரிய பொருளாகவும் விளங்குகின்றன.
பாடல் எண் : 14
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே உதிப்பன நங்கையஞ்ச
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள், வானவர் உலகத்தையும் கடந்து அனைத்து உலகங்களிலும் உள்ளவர்களால் மதிக்கப்படுவன. சிவநாமத்தை இடைவிடாது உச்சரிக்கும் அடியார்கள் தங்கள் உடலை நீத்த பின்னர், அவர்கள் உய்யுமாறு வழி வகுத்து அருள் செய்வன. சிவபிரானது அடியார்களாக விளங்கும் சான்றோர்களுக்கு அவர்களது உள்ளத்தில் ஞான ஒளியாய்த் தோன்றுவன, உமையம்மை அஞ்சுமாறு சிவபெருமான் தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்த போது, யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியாய் இருந்தன.
பாடல் எண் : 15
மாதிரம் மாநிலம் ஆவன வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெம் கச்சு வீக்கின வெந்நமனார்
தூதரை ஓடத் துரப்பன துன்பறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள் திசைகளாகவும், வானுலகமாகவும், மண்ணுலகமாகவும், மலையின் உச்சிகளாகவும் விளங்குகின்றன. அந்த திருவடிகளை மென்மையான கழல்கள் மற்றும் கச்சும் அழகு செய்கின்றன. மேலும் அந்த திருவடிகள், இயமனின் தூதுவர்கள் நம்மை இனிமேல் அணுகா வண்ணம், நமக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கின்றன: தமது துன்பங்கள் தீர வேண்டும் என்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்களுக்கு, இந்த திருவடிகள் ஆதாரமாக இருக்கின்ற நிலையை நாம் காணலாம்.
பாடல் எண் : 16
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கருளால்
ஏணிப் படி நெறியிட்டுக் கொடுத்து இமையோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள் வானவர்களின் முடியில் விளங்கும் மாணிக்கம், மரகதம், வைரம் போன்ற அழகான கற்கள் போலவும், தரமான பொன் போலவும் ஒளி வீசுகின்றன. மேலும், அவைகளை விரும்பித் தொழும் அடியார்கள் விண்ணுலகம் பெறுவதற்கு வழி வகுக்கின்றன. அந்த திருவடிகள், அடியார்களின் பக்குவ நெறிக்கேற்ப, வீட்டுலகம் சென்றடைய வழி வகுக்கின்றன.
பாடல் எண் : 17
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணுமண்ணும்
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூமதியோடு
ஆதியும் அந்தமும் ஆனவை ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள் அனைத்துப் பொருட்களுக்கும் பழமையானவை, அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்பவை: சிவபெருமானால் ஓதப்பட்ட வேதங்களிலும் பல சாத்திரங்களிலும் கூறப்படும் ஞானமாகவும், அந்த ஞானத்தின் உட்பொருளாகவும், பிழையற்ற சிறந்த ஒலியுடன் அந்தணர்கள் ஓதும் வேதமாகவும், அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேள்வியாகவும், விண்ணுலகமாகவும், மண்ணுலகாகவும், அக்னியாகவும், சிவந்த ஒளியினை உடைய சூரியனாகவும், தூய ஒளி படைத்த சந்திரனாகவும் திகழ்கின்றன.
பாடல் எண் : 18
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை சுரும்பொடுவண்டு
அணங்கும் குழலி அணியார் வளைக் கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
தேமல் படர்ந்த முன்பகுதியைக் கொண்ட இணையான முலைகளை உடைய அழகிய பெண்களைக் போன்ற பார்வதி தேவி, சுரும்புகளும் வண்டுகளும் அழகு செய்யும் கூந்தலை உடையவளாய், வளையல்கள் அணிந்த தனது கரங்களைக் கூப்பி, பெருமானின் தாமரை போன்று அழகான திருவடிகளை வணங்கி பின்னர் அந்த திருவடிகளை வருடுகின்றாள். இவ்வாறு அழகிய தோற்றத்துடன் காணப்படும் சிவபிரானின் திருவடிகளைத் தொட்டு வணங்கிய பின்னர் அந்த திருப்பாதங்களை உமையம்மை வருடும் போது, கருநீல நிறம் கொண்ட காந்தள் மலர்களால் அழகு செய்யப்பட்ட தாமரை மலர்களை ஒத்து, சிவபிரானின் திருவடிகள் காணப்படுகின்றன.
பாடல் எண் : 19
சுழலார் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்
நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த
அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
ஐயாறனின் திருவடிகள் கடும் கோடையில் வெய்யிலில் வருந்துவோருக்கு நிழல் அளிக்கும் சுகம் போன்று, தன்னைத் தொழும் அடியார்களுக்கு, அவர்களைப் பிணைத்து, வெளியேற முடியாமல் அவர்களை வருத்தும் கொடிய பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கும்: எளிதில் நீக்க முடியாத பிறவிப் பிணியினைத் தீர்த்து, இனிப் பிறவாத தன்மையை அளிக்கும்: நீக்க முடியாமல் பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் வினைகளை அறவே நீக்கிவிடும். இவ்வாறு அடித் தொண்டர்க்கு அருள் புரியும் திருவடிகள், ஊழிக் காலத்து இருளையும் தாண்டி நிறைந்த ஒளியாக ஒளிரும்.
பாடல் எண் : 20
வலியான் தலை பத்தும் வாய் விட்டலற வரையடர்த்து
மெலிய வலி உடைக் கூற்றை உதைத்து விண்ணோர் கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப் பன்னாளும் பலரிகழ
அலியா நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
பாடல் விளக்கம்:
நமது தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள், வலிமையை உடைய அரக்கன் இராவணன் தனது பத்து வாய்களாலும் அலறுமாறு அவனை மலையின் கீழ் அடர்த்தன: மேலும் அந்த திருவடிகள், எவரிடமும் தோல்வி அடைந்து உடல் மெலியும் நிலைக்கு ஆளாகாத வல்லமை பொருந்திய இயமனை உதைத்து வீழ்த்திய திருவடிகள். இத்தகைய வல்லமை பெற்ற சிவபெருமான், தேவர்கள் அனைவரும் காணும்படி, பல் வீடுகளின் வாயிலின் முன்னே நின்று, பலரும் இகழும் விதத்தில் பல நாட்கள், தனது ஆண்மைத் தன்மைக்கு சிறிதும் ஒவ்வாத அலித் தன்மையுடன், பிச்சை கேட்டு இருந்ததன் காரணம் என்னே.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக