செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 18

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஏழாம் திருமுறை 77 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்; இரவும் பகலும் உம்மையே நினைவேன்; என்றாலும், அழுந்த நினையமாட்டேன்.


பாடல் எண் : 02
எங்கே போவேன் ஆயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய்
சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
அடியேன் எங்கே செல்வேனாயினும், முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக, சிறிதும் ஐயம் இன்றி, அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய், சடைமேற் கங்கையும், கையில் மானின் ஆண் கன்றும், சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற, அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம்!.


பாடல் எண் : 03
மருவிப் பிரிய மாட்டேன் நான் வழி நின்றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரல் பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டோட்டம்
தரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
நீர், பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு, யானைகளைப் புரட்டி, புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும், காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான், சிலர்போல, உறுவது சீர் தூக்கி, உற்ற வழிக்கூடி, உறாதவழிப் பிரியமாட்டேன்; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன்; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன்; ஓலம்!


பாடல் எண் : 04
பழகா நின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே
அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
வாழைக் குலைகளையும், தென்னங் குலைகளையும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே, நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்த உடுத்து நிற்றலால், உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்பவர், அதனால் பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன்; ஓலம்!.


பாடல் எண் : 05
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனும் கொள்ளாமை
கழைக்கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டிக் கையேறி
அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று, வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்; ஓலம்!.


பாடல் எண் : 06
கார்க்கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய் விடையாய் கையினான்
மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ
வார்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
கார் காலத்தைக் கொண்ட கொன்றை மலரின் மாலையொன்றைச் சடைமேல் உடையவனே, விடையை ஏறுபவனே, அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே, ஒழுகு தலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், எல்லாவற்றுக்கும் முன்னுள்ள வனும் நீயே; பின்னுள்ளவனும் நீயே; எப்பொருட்கும் முதல்வனும் நீயே; ஓலம்!.


பாடல் எண் : 07
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ
மலைக்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு, உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே, வில்லிடத்துக் கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த, சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே, மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக் களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், இறைவனாவான் நீயே; ஓலம்!.


பாடல் எண் : 08
போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!.


பாடல் எண் : 09
கதிர்க்கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி
அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
என் தந்தை தந்தைக்கும் பெருமானே, மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், நான் உம்மை, பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன்; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனாயினேன்; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன்; ஓலம்!.


பாடல் எண் : 10
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனும் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு, தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும், நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர்; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; உம்மை, உலகிற்குத் தலைவனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர்; பிறர் எங்ஙனங் காண்பார்! ஓலம்!.


பாடல் எண் : 11
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன் திருவாரூரே சிந்திப்பன்
ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மை விட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள் பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், `அருள் பண்ணுதல் வேண்டும்` என்னும் எண்ணமும் இல்லீர்; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன்; உம் அடியேனும், `நம்பியாரூரன்` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன்; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன்; ஓலம்!.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவையாறு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக