செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 13

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 98 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

பாடல் விளக்கம்‬:
வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த, நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய், மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ.


பாடல் எண் : 02
பாடகக் கால் கழல்கால் பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால் நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடகக் கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால்
ஆடகக்கால் அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.

பாடல் விளக்கம்‬:
பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக