சனி, 27 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : இரண்டாம் திருமுறை 32 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
திருத்திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்
உருத்திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே 
விருப்புடைய அற்புதர் இருக்கும் இடம் ஏரார்
மருத்திகழ் பொழில் குலவு வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
அழகிய மலைமகளோடு மிக்க ஒளிவடிவினராய சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலை மலையில் உறைவதற்கு விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.


பாடல் எண் : 02
கந்தமர உந்து புகை உந்தலில் விளக்கேர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் 
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார
வந்தவளி நந்தணவு வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற அச்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும் மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்துள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 03
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் 
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு 
இட்டம் மிக நட்டமவை இட்டவர் இடம் சீர் 
வட்டமதிலுள் திகழும் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும தாளச்சதிக்கும் ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள் விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 04
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர் முனிவர்க்கு அன்று
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த் 
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி 
மண்ணின் மிசை வந்தணவு வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
கல்லால மர நிழலை அடைந்து சனகாதியர் நால்வருக்கு அக்காலத்தில் வேதப்பொருளை விரித்துரைத்த சிவபிரானது இடம்; குளிர்ந்த சந்தனம், அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற பொன்னியாற்றின் கரையின் மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 05
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம் நீடுமலர் மேலால் 
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர் போகுமாறு சினந்து அவனை அழித்த கோபம் மிக்க காளிதேவியின் சினம் அடங்க அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம், பெரிய மலர் மணம் நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 06
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி
பாத முதல் பையரவு கொண்டு அணி பெறுத்தி
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ 
மாதவி மணம் கமழும் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி அடிமுதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக் கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 07
துன்னுகுழன் மங்கை உமைநங்கை சுளிவு எய்த
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்னசதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் 
மன்னு கொடையாளர் பயில் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
செறிந்த கூந்தலையுடைய உமைமங்கை சினம் கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, `உமையே! நீ சினம் கொள்ளக்காரணம் யாதென` வினவி, அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 08
இரக்கமில் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர் 
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத் 
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் 
வரக் கருணையாளர் பயில் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள், தோள்கள் ஆகியன அழியுமாறு கால் விரலால் செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும் திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 09
பருத்துருவதாகி விண் அடைந்தவன் ஒர் பன்றிப் 
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும்
கருத்துரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் 
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
பருந்து உருவமாய் விண்ணிற்சென்று தேடிய பிரமன், பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம், வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 10
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர் புத்தர் 
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால் 
மாக்கமுற நீடுபொழில் வண் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய, சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 11
வாசமலியும் பொழில்கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப் 
பூசுரன் உரைத்த தமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.

பாடல் விளக்கம்‬:
மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர், சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக