திங்கள், 29 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 09

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி ஆகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திருவையாறு அமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத் தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.


பாடல் எண் : 02
பீலிகை இடுக்கி நாளும் பெரியதோர் தவம் என்று எண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே
வாலியார் வணங்கி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த வாறே.

பாடல் விளக்கம்‬:
மயிற்பீலியைக் கையில் வைத்துக் கொண்டு அச்செயலையே பெரிய தவமாகக் கருதி, மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள் போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள்? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித் துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது.


பாடல் எண் : 03
தட்டிடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி
ஒட்டிடு மனத்தினீரே உம்மையான் செய்வது என்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே.

பாடல் விளக்கம்‬:
உணவுக்குரிய உண் கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச்செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன்? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும், மானிடர் ஆக்காத நீர் நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன்.


பாடல் எண் : 04
பாசிப்பன் மாசு மெய்யர் பலமிலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்குமாறு அறியமாட்டேன்
தேசத்தார் பரவி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

பாடல் விளக்கம்‬:
பல் துலக்காததனால் பசிய நிறம் படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடி வாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன். உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன்.


பாடல் எண் : 05
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதியோர் தவம் என்று எண்ணி
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலீ பட்டது என்னே
மடுக்களில் வாளை பாயும் திருவையாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அருந்தவம் செய்த ஆறே.

பாடல் விளக்கம்‬:
கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக் கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன் தான் யாது? நீர்த் தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய்.


பாடல் எண் : 06
துறவி என்று அவம் அது ஓரேன் சொல்லிய செலவு செய்து
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை
மறவிலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்தவாறே.

பாடல் விளக்கம்‬:
வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல் பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன். தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே.


பாடல் எண் : 07
பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது
மல்லிகை மலரும் சோலைத் திருவையாறு அமர்ந்த தேனை
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியவாறே.

பாடல் விளக்கம்‬:
வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன். மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே.


பாடல் எண் : 08
மண்ணுளார் விண்ணுளாரும் வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்கும் சென்னித் திருவையாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தவாறே.

பாடல் விளக்கம்‬:
அறிவில்லாத மனமே! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தெளிந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக, நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே. அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று.


பாடல் எண் : 09
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும்
திருந்து நல் திருவடியும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும் அன்றே.

பாடல் விளக்கம்‬:
இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்த மரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும், மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக, மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தெளிவு.


பாடல் எண் : 10
அறிவிலா அரக்கன் ஓடி அருவரை எடுக்கல் உற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவிரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான் திருவையாறு அமர்ந்த தேனே.

பாடல் விளக்கம்‬:
இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு, உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன் போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாம வேதகீதம் பாட, அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக