வியாழன், 25 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : முதல் திருமுறை 36 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
கலையார் மதியோடு உர நீரும்
நிலையார் சடையார் இடம் ஆகும் 
மலை ஆரமும் மாமணி சந்தோடு
அலையார் புனல் சேரும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
ஒரு கலைப் பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரி பாயும் திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 02
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடிமாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்க யாகத்தில் வீரபத்திரரை ஏவிச் சந்திரனைக் காலால் பொருந்த உதைத்தவனுமான சிவபெருமான் வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாட வீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 03
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடமாகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.


பாடல் எண் : 04
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய்கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 05
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடமாகும்
அமையார் உடல் சோர் தர முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மை ஒரு பாகத்தே விளங்கப்பொருந் தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த திருவையாறாகும்.


பாடல் எண் : 06
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வாம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.


பாடல் எண் : 07
வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வாம்
வரை நின்று இழிவார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலையினின்று இழிந்து பெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 08
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வாம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிற அங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.


பாடல் எண் : 09
சங்கக் கயனும் அறியாமை 
பொங்கும் சுடரானவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.


பாடல் எண் : 10
துவராடையர் தோல் உடையார்கள்
கவர் வாய்மொழி காதல் செய்யாதே
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:
துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.


பாடல் எண் : 11
கலையார் கலிக்காழியர் மன்னன்
நலமார் தரு ஞான சம்பந்தன்
அலையார் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

பாடல் விளக்கம்‬:
கலை வல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப்பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக