செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 15

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 28 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வதோர்
அந்திவண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், அடியவர்களின் சிந்தை வண்ணமும்; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும், முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும், தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர்.


பாடல் எண் : 02
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராகி நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும், முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும், வளமையான சுடர் விடுகின்ற நீலநிறமும் நீண்ட பளிங்கனைய தம் திருவுருவத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர்.


பாடல் எண் : 03
சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போது அழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும், தீயின் வண்ணமும், அழகாகிய அந்திப்போதின் வண்ணமும், தானும், கடாவும், பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர்.


பாடல் எண் : 04
இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர். இருளின் வண்ணமும், ஏழிசைகளின் வண்ணவேற்றுமைகளும், சுருண்ட சடையின் வண்ணமும், ஒளியின் வண்ணமும், நான்முகனும் திருமாலும் விண் பறந்தும் மண் புகுந்தும் காண்டற் கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர்.


பாடல் எண் : 05
இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்களாகியும் கூடியும்
மழைக்கண் மாமுகிலாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணை வண்ணமும், மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும், தம்மடியார்களை அழைத்து அருள் வழங்கும் வண்ணமும் உடையவர்.


பாடல் எண் : 06
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும், ஏழிசை வடிவாகிய இயல்பும், தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும், ஒளி இயல்பும், கண்ட வண்ணங்கள் அனைத்தும், கனல் போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்க வண்ணமும், அண்டங்களின் வண்ணமும் ஆகியவர்.


பாடல் எண் : 07
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும், வேதத்தின் இயல்பும், கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும், தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும், அரும்பின் இயல்பும் உடையராவர்.


பாடல் எண் : 08
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ் ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுருவாகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஒளிரும் இயல்பும், ஒளிச்சுடர் இயல்பும், யானையின் பச்சைத் தோலைப் போர்த்தருளிய இயல்பும், ஊழித் தீ உருவாகிய இயல்பும், கடல் வண்ணமும் உடையவராவர்.


பாடல் எண் : 09
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்கரிதாகிய வண்ணமும்
கைது காட்சி அரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன், ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன். காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன், மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன். மென்மை தழுவிய அழகினன்.


பாடல் எண் : 10
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல் பெரிதாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல், துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும், மிகுந்த தன் கை நரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக