இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி
திருமுறை : நான்காம் திருமுறை 91 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
குறுவித்தவா குற்றநோய் வினை காட்டிக் குறுவித்த நோய்
உறுவித்தவா உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
எனது முந்தைய வினைப்பயன்களின் காரணமாக, எனக்கு கொடிய சூலை நோய் வாய்த்தது: அந்த நோயின் கொடுமை தாங்க முடியாமல் நான் மனவலிமையும் உடல் வலிமையையும் குறைந்து குன்றிப் போனேன். இவ்வாறு என்னைக் குன்றச் செய்தவன் சிவபிரான் தான்: பின்னர், எனது சூலை நோயினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு, திருத்தொண்டுகள் செய்து அந்த நோயினைத் தீர்க்கலாம் என்ற வழியினையும், எனது தமக்கையார் மூலம் எனக்கு அறிவித்தவனும் அவனே: பலவகையான தொண்டுகள் செய்து அவனது திருவடிகளில் எனது எண்ணங்கள் பொருந்தி இருக்கும் நிலை ஏற்பட்டது அவனது கருணையால் தான்.
பாடல் எண் : 02
கூர்வித்தவா குற்ற நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய்
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சேர்வித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
எனது முந்தைய வினைகளின் பயனை அதிகப்படுத்தி, எனக்கு கொடிய சூலை நோய் கொடுத்தது சிவபிரான் தான்: அந்த கொடிய நோயின் கொடுமையை அனுபவிக்கச் செய்து, எனது வினைகளைக் கழித்த பின்னர், என்னை அடைந்த நோயினையும், மிகவும் மகிழ்ந்து தீர்த்து அருளியவன் சிவபிரான். சிவபிரானின் இந்த செயல்களால், எனக்கு அவன் பால் மேலும் மேலும் அன்பு பெருகியது: அந்த அன்பு என்னை பல வகையான தொண்டுகளில் ஈடுபடச் செய்தது. அடித் தொண்டனாகிய என்னை சிவபிரான் ஆட்கொண்டு, தனது திருவடிக்கீழ் சேர்த்துக் கொண்டது அவன் கருணையால் தான் நிகழ்ந்தது.
பாடல் எண் : 03
தாக்கினவா சலமே வினை காட்டியும் தண்டித்த நோய்
நீக்கினவா நெடு நீரினின்று ஏற நினைந்தருளி
ஆக்கினவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
நோக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
சிறு வயதில் நான் அடைந்த சஞ்சலத்தின் காரணமாக, சைவ சமயத்தை விட்டு சமண சமயத்தைச் சார்ந்து பல தவறுகள் செய்த தனக்கு, அந்த வினைகளின் பயன் தான் சூலை நோய் என்று எனக்குக் காட்டி, தண்டித்தவன் சிவபெருமான். எனக்கு தண்டனையாக வந்த நோயினை நீக்கி அருள் புரிந்து, சமண சமயம் என்ற கடலிலிருந்து என்னைக் கரையேற்ற வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, எனக்கு அருள் புரிந்து, என்னை பலவகையான தொண்டுகள் செய்ய வைத்தவனும் சிவபிரான் தான். மேலும், தனது திருவடிக்கீழ் என்னை நிலை நிறுத்தி பார்ப்பது அவனது கருணைச் செயல்.
பாடல் எண் : 04
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலமதனால்
நெருக்கினவா நெடுநீரினின்று ஏற நினைந்தருளி
உருக்கினவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பெருக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
சிவநெறியிலிருந்து விலகி ஓடி, சமண சமயத்தைச் சார்ந்த நான் செருக்கு கொண்டு அலைந்தேன்: அதனால் சிவபெருமானின் கருணை பெறுவதற்கு தகுதி ஏதும் இல்லாதவனாகத் திரிந்தேன்: இவ்வாறு தகுதி ஏதும் இல்லாத என்னை, சஞ்சலம் அடைந்து சமண சமயம் சார்ந்ததன் பயனாக நான் செய்த தீய செயல்களால் விளைந்த வினைகளைக் கழிக்கும் பொருட்டு எனக்கு சூலை நோய் கொடுத்து துன்பம் அளித்தவன் சிவபெருமான். அந்த துன்பத்தைத் தாங்கும் சக்தி இல்லாமல் தவித்த என்னை, அந்த துன்பக் கடலிலிருந்து கரையேற்ற திருவுள்ளம் கொண்டு, நான் அவனை நினைத்து உருகுமாறு செய்தவன் சிவபெருமான். மேலும் மேலும் பல வகையான தொண்டுகளை செய்ய வைத்து மேம்படச் செய்தவன் சிவபெருமான். அடியேனை, தொண்டனாக மாற்றி தனது திருவடியின் கீழ் இருக்குமாறு செய்தது சிவபெருமானின் கருணையின் விளைவே ஆகும்.
பாடல் எண் : 05
இழிவித்தவாறு இட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து
கழிவித்தவா கட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொழுவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
எனது தகுதியிலிருந்து இழிந்து நான் இரவோடு இரவாக திருவதிகைக்கு செல்லுமாறு என்னை வருத்தும் அளவுக்கு சூலை நோய் கொடுத்து வருத்தியவன் சிவபிரான். இவ்வாறு இந்த சூலை நோயைக் கொடுத்து எனது வினைகளைக் கழித்தவனும் அவனே; எனக்கு மிகுந்த கட்டத்தைக் கொடுத்த அந்த சூலை நோயினை நீக்கத் திருவுள்ளம் கொண்டு அதனை அழித்து அருள் புரிந்தவனும் அவனே: என்னை பலவிதமான தொண்டுகள் தொடர்ந்து புரியவைத்து, தனது திருவடிகளின் கீழே நிலை நிறுத்தி தொழச் செய்தவனும் சிவபெருமான் தான். என்பால் அவன் நிகழ்த்திய அனைத்துச் செயல்களும் அவனது கருணையால் விளைந்தவை.
பாடல் எண் : 06
இடைவித்தவாறு இட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்தவாறு உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்தாவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடர்வித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
சமண சமயத்தைச் சார்ந்திருந்த என்னை, சூலை நோய் கொடுத்து நான் செய்து கொண்டிருந்த சமண சமயப் பணிகளிலிருந்து ஒதுங்கிப் போகுமாறு செய்தவன் சிவபெருமான் தான். அந்த சூலை நோயினால் நான் மிகவும் துன்பமுற்று மனமுடைந்து வருந்தினேன். அவ்வாறு வருத்தமுற்ற நிலையில், எனது சூலை நோயினைத் தீர்க்கும் பொருட்டு, மிகவும் மகிழ்ந்து, தான் இருக்கும் இடமாகிய அதிகையினை நான் சென்று அடையுமாறு அருள் புரிந்தவன் சிவபெருமான். இவ்வாறு அடியேனை தொடர்ந்து பலவகையான தொண்டுகள் புரியச் செய்து, தந்து பொன்னடிகளின் கீழ் சேர்த்துக் கொண்டது சிவபிரானது கருணையால் தான் நிகழ்ந்தது.
பாடல் எண் : 07
படக்கினவா படநின்று பன்னாளும் படக்கினநோய்
அடக்கினவாறது அன்றியும் தீவினை பாவமெல்லாம்
அடக்கினவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
எனது முந்தைய வினைகளின் விளைவுகளை நான் அனுபவிக்கும் விதமாக, பல நாட்கள் சூலை நோயினால் நான் வருந்தி செயலற்று துயருறச் செய்தவன் சிவபெருமான் தான். அவ்வாறு என்னைப் படுத்திய நோயும், வினைகளும், பாவங்களும் முற்றிலும் செயலற்று அழியுமாறு நீக்கியவனும் சிவபெருமான் தான். தனக்கு பல விதங்களிலும் அடிமைத் தொண்டுகள் நான் செய்யத் தொடங்குமாறு செய்தவனும் சிவபெருமான் தான். இவ்வாறு அவனது பொன்னார் திருவடிகளின் கீழ் நான் நின்று தொண்டு புரிய வைத்தது அவனது கருணைச் செயலால் தான்.
பாடல் எண் : 08
மறப்பித்தவா வல்லை நோய்வினை காட்டி மறப்பித்த நோய்
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சிறப்பித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
சமண சமயத்தைச் சார்ந்திருந்த நாட்களில் முந்தைய வினையின் காரணமாக சிவபெருமானை நான் மறந்து வாழ்ந்ததற்கும் சிவபிரானே காரணம். அங்ஙனம் மறந்து வாழ்ந்ததால் எனது தீயவினைகள் மேலும் அதிகரிக்க, அதன் விளைவாக கடுமையான சூலை நோய் எனது உயிரினை குடிக்கவிருந்த சமயத்தில், எனது நோயினையும் வினையினையும் தீர்ப்பதற்கு திருவுள்ளம் கொண்டவனும் சிவபெருமான் தான். எனது வினைகளைக் கடக்கச் செய்து, பல வகையான அடிமைத் தொண்டுகள் புரியச் செய்தவனும் சிவபெருமான் தான். தனது திருவடிக் கீழ் பல தொண்டுகள் செய்யும் தொண்டனாக மாற்றி தனக்கு சிறப்பு சேர்த்தது சிவபிரானின் கருணையின் வெளிப்பாடாகும்.
பாடல் எண் : 09
துயக்கினவா துக்க நோய்வினை காட்டித் துயக்கின நோய்
இயக்கினவாறு இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கினவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
மயக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
எனது பழவினையைத் தீர்க்கும் பொருட்டு, துன்பம் அடையச் செய்த சூலை நோயினைக் கொடுத்து, பின்னர் அந்த நோய் என்னை வருத்தியபோது, அந்த நோயினையும் அதற்கு காரணமான வினையையும் தீர்ப்பதற்கு திருவுள்ளம் கொண்டு, எனது சூலை நோயினைத் தீர்த்தவனே, நோய் இல்லாதவனாக மாற்றி என்னை பலவிதமான அடிமைத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்தவனே, உனது பொன்னார் திருவடிக்கீழ் நான் இப்போது தொண்டுகள் செய்யும் நிலை உனது கருணையினால் தான்.
பாடல் எண் : 10
கறுத்தும் இட்டார் கண்டம் கங்கை சடைமேல் கரந்தருளி
இறுத்தும் இட்டார் இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்தும் இட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பொறுத்தும் இட்டார் தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.
பாடல் விளக்கம்:
தேவர்களைக் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விடத்தைத் தான் உட்கொண்டு கழுத்தில் அடக்கியதால், கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவர் சிவபிரான். அவர் பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாய்ந்து வந்த கங்கை நதியைத் தனது சடையில் தாங்கி அருள் புரிந்தார்: இலங்கைக்கு அரசனாகிய அரக்கன் இராவணனின் இருபது தோள்களையும், அவன் கயிலை மலையை பேர்த்தேடுக்க முயற்சி செய்தபோது, நெருக்கினார்: எனது மற்ற பற்றுக்களை அறுத்து, தனக்கு பல வகையான தொண்டுகள் புரியுமாறு என்னை ஆட்கொண்டவர் சிவபெருமான்: அவரது கருணையின் விளைவாக அவரது பொன்னார் திருவடியின் கீழ் இருக்கின்றேன்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக