சனி, 4 ஜூலை, 2015

திருக்கலிக்காமூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : சுந்தராம்பாள், அழகம்மை

திருமுறை : மூன்றாம் திருமுறை 105 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தல வரலாறு:
உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

வலம் முடித்து உட்சென்றால் நேரே மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இத்தலத்தின் அம்பாள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவள். சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும் போது இறைவன் கடற்கரை அல்லது நதிக்கரைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில் அம்பாள் அழகம்மை மாசி மாத பெளர்ணமி அன்று கடலில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறாள். இது தவிர மாத பிரதோஷம், சிவராத்திர், ஆருத்ரா போன்ற விசேஷங்களும் இத்தலத்தில் விமரிசையாக தடைபெறுகின்றன.

பராசர முனிவர் அசுரன் உதிரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். அவனூடைய வயிற்று வலியை தீக்காது வேறொரு தலத்திற்கு அவனுக்கு வழிகாட்டினார் இறைவன். கடற்கரை ஓரமாகவே நடந்து வந்த அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதை எடுத்து வந்து வழிபட அவனது தீராத வயிற்று வலி மறைந்தது. பின் இறைவன் ஆணைப்படி இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இத்தல ஈசனுக்கு அருகில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இந்தப் புராண வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு இன்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வணங்கி வழிபட்ட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும்,. அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள், மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாக் போற்றிப் பாடியுள்ளார்.

தற்போது அன்னப்பன்பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது. சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது. ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தென்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
மடல்வரையின் மது விம்மு சோலை வயல் சூழ்ந்த அழகாரும்
கடல்வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
உடல்வரையின் உயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர்தொடரா வினையான சிந்தும் இறைவன் அருளாமே. 

பாடல் விளக்கம்‬:
பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும், வயல்களும் சூழ, மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும், உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா. அத்துன்பங்கட்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்து போகும். இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர்.


பாடல் எண் : 02
மைவரை போற்றிரையோடு கூடிப் புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
மெய் வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப உடல் வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே.

பாடல் விளக்கம்‬:
மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல், கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய, அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர். அஃது உண்மையேயாம்.


பாடல் எண் : 03
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

பாடல் விளக்கம்‬:
அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும், பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும், நீலோற்பல மலர் போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற, என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால், ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான்.


பாடல் எண் : 04
குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியாயம் மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன்றமரே.

பாடல் விளக்கம்‬:
குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும், எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர். அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர்.


பாடல் எண் : 05
வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடல் ஓதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த
நான்டைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே. 

பாடல் விளக்கம்‬:
வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும், பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங்கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர். இத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக.


பாடல் எண் : 06
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலிதென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
மறை வளரும் பொருளாயினானை மனத்தால் நினைந்து ஏத்த
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினைபோமே.

பாடல் விளக்கம்‬:
கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு, மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நால்வேதங்களின் உட்பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது. அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும்.


பாடல் எண் : 07
கோலநன் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீ வளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.

பாடல் விளக்கம்‬:
அழகிய நல்ல மேனியுடைய மகளிரும், ஆடவரும், காலமழை பொய்த்தாலும், பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டு வந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும். அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள் ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர்.


பாடல் எண் : 08
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்
தேர் அரவு அல்குலம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே.

பாடல் விளக்கம்‬:
ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து, ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு, கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம். அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன் கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும்.


பாடல் எண் : 09
அருவரை ஏந்திய மாலும் மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரையான் மகள் பாகன் தன்னை உணர்வால் தொழுதேத்தத்
திருமருவும் சிதைவு இல்லை செம்மைத் தேசு உண்டு அவர்பாலே. 

பாடல் விளக்கம்‬:
கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும், திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும். அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை. மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும். அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு.


பாடல் எண் : 10
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.

பாடல் விளக்கம்‬:
நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும், மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள். எனவே அவர்களைப் பின்பற்றாது இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம்தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம்.


பாடல் எண் : 11
ஆழியுள் நஞ்சமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுதுண்ண
ஊழிதொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.

பாடல் விளக்கம்‬:
பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான். இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால், திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற, அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கலிக்காமூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக