சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : முதல் திருமுறை 12 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்து அவ்விடம் உண்ட
தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணனது இடமாம்
கொத்தார்ர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.


பாடல் எண் : 02
தழையார்வட வியவீதனில் தவமே புரி சைவன்
இழையார் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடமாம்
மழைவானிடை முழவ எழில்வளை வாள் உகிர் எரி கண்
முழைவாளரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.


பாடல் எண் : 03
விளையாததொர் பரிசில் வருபசு பாசவேதனை ஒண்
தளையாயின தவிர அருள் தலைவனது சார்பாம்
களையார்தரு கதிர் ஆயிரம் உடையவனோடு
முளைமாமதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.


பாடல் எண் : 04
சுரர் மாதவர் தொகு கின்னரர் அவரோ தொலைவில்லா
நரரானபன் முனிவர் தொழ இருந்தானிட நலமார்
அரசார் வர அணி பொற்கலன் அவை கொண்டு பன்னாளும்
முரசார் வரு மண மொய்ம்புடை முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்களும், சிறந்த தவத்தை மேற்கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங் குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்டு வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.


பாடல் எண் : 05
அறையார் கழல் அந்தன்தனை அயின் மூவிலை அழகார்
கறையார் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்
மறையாயின பலசொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு
முறையான் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.


பாடல் எண் : 06
ஏவார் சிலை எயினன் உருவாகி எழில் விசயற்கு
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார்
மூவாதபன் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 07
தழல் சேர்தரு திருமேனியர் சசிசேர் சடை முடியர்
மழமால் விடைமிக ஏறிய மறையோன் உறை கோயில் 
விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை
முழவோடு இசை நடமுன் செயும் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடன சாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.


பாடல் எண் : 08
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கது வாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவில்லா
முதுவேய்கண் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால் விரலால் ஊன்றி அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.


பாடல் எண் : 09
இயலாடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய
செயலாடிய தீயார் உருவாகி எழு செல்வன்
புயலாடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல் மீன்கள் துள்ளிப்பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.


பாடல் எண் : 10
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்
மருகன் வரும் இடபக்கொடி உடையான் இடம் மலரார்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

பாடல் விளக்கம்‬:
சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரிய கூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப்பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.


பாடல் எண் : 11
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த
நிகரில்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே.

பாடல் விளக்கம்‬:
மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலிநகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக