இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி
திருமுறை : இரண்டாம் திருமுறை 37 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
கதவு அடைக்கப் பாடிய பதிகம்
பாடல் எண் : 01
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே.
பாடல் விளக்கம்:
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக.
பாடல் எண் : 02
சங்கம் தரளம் அவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
மங்கையுமை பாகமுமாக இது என்கொல்
கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே.
பாடல் விளக்கம்:
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?.
பாடல் எண் : 03
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே.
பாடல் விளக்கம்:
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக் கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ?.
பாடல் எண் : 04
படர் செம்பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
உடலம் உமைபங்கம் அது ஆகியும் என்கொல்
கடல் நஞ்சு அமுதா அதுவுண்ட கருத்தே.
பாடல் விளக்கம்:
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?.
பாடல் எண் : 05
வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட்டுறை செல்வா
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்கொல்
கானார் கடு வேடுவன் ஆன கருத்தே.
பாடல் விளக்கம்:
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?.
பாடல் எண் : 06
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மாமறைக்காடா
உலகேழுடையாய் கடைதோறும் முன் என்கொல்
தலைசேர் பலிகொண்டு அதில் உண்டது தானே.
பாடல் விளக்கம்:
பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.
பாடல் எண் : 07
வேலா வலயத்தயலே மிளிர்வு எய்தும்
சேலார் திருமா மறைக்காட்டுறை செல்வா
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்கொல்
காலார் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே.
பாடல் விளக்கம்:
விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமாமறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?.
பாடல் எண் : 08
கலங்கொள் கடலோதம் உலாவும் கரைமேல்
வலங்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த
அலங்கல் விரலூன்றி அருள் செய்தவாறே.
பாடல் விளக்கம்:
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?.
பாடல் எண் : 09
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றும்
தேன்ம் பொழில்சூழ் மறைக்காட்டுறை செல்வா
ஏனம் கழுகானவர் உன்னை முன் என்கொல்
வானம் தலம் மண்டியும் கண்டிலாவாறே.
பாடல் விளக்கம்:
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?.
பாடல் எண் : 10
வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்
ஏதில் சமண் சாக்கியர் வாக்கிவை என்கொல்
ஆதரொடு தாம் அலர் தூற்றியவாறே.
பாடல் விளக்கம்:
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல் நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?.
பாடல் எண் : 11
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழின் இசைமாலை ஈர் ஐந்திவை வல்லார்
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே.
பாடல் விளக்கம்:
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழ வான்அடைவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
பாடல் எண் 9 ல் தேனம் என்பதற்கு பதில் தேன்ம் என்று உள்ளது. மற்றபடி அருமையான விளக்கம்.
பதிலளிநீக்கு