ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 91 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரைதவழ் முத்தம் 
கங்குலார் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார் தாம் 
திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழலது இகழ் பழியிலரே.

பாடல் விளக்கம்‬:
பொங்கியது போன்ற வெண்மையான மணற் பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை.


பாடல் எண் : 02
கூனி இளம்பிறை சூடி கொடுவரித் தோலுடை ஆடை
ஆனிலம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம் 
கானலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலம் கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே.

பாடல் விளக்கம்‬:
கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும்.


பாடல் எண் : 03
நுண்ணிதாய் வெளிதாகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில்
பண்ணியாழென முரலும் பணிமொழி உமையொரு பாகன்
தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரை மணி ததும்பக் 
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே.

பாடல் விளக்கம்‬:
ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார்பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மை யான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்ட தோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார்.


பாடல் எண் : 04
ஏழை வெண் குருகு அயலே இளம்பெடை தனதெனக் கருதித் 
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம்
மாழையங் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது அடியின் 
நீழலே சரணாக நினைபவர் வினை நலிவு இலரே.

பாடல் விளக்கம்‬:
அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர்.


பாடல் எண் : 05
அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாம் செய்த பவம் பறைதர அருளுவர் பதிதான் 
மரவ நீடுயர் சோலை மழலை வண்டு யாழ் செயும் மறைக்காட்டு 
இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெனலாமே.

பாடல் விளக்கம்‬:
பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும்.


பாடல் எண் : 06
பல்லில் ஓடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் 
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம்மடிகள்
புல்லம் ஏறுவர் பூதம் புடைசெல உழிதர்வர்க்கு இடமாம் 
மல்கு வெண்திரை ஓத மா மறைக்காடு அதுதானே.

பாடல் விளக்கம்‬:
பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகே புடை சூழ்ந்து வரத் திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும்.


பாடல் எண் : 07
நாகம் தான் கயிறாக நளிர் வரை அதற்கு மத்தாகப்
பாகம் தேவரொடு அசுரர் படுகடல் அளறு எழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலை வால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும்.


பாடல் எண் : 08
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலால் ஊன்றலும் நடு நடுத்து அரக்கன் 
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன் பதி மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.


பாடல் எண் : 09
விண்ட மா மலரோனும் விளங்கொளி அரவு அணையானும்
பண்டும் காண்பரிதாய பரிசினன் அவனுறை பதிதான் 
கண்டலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்டலம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழை மரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும்.


பாடல் எண் : 10
பெரியவாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டை கையேந்தி கல்லென உழிதரும் கழுக்கள்
அரியவாக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம்மடிகள் 
பெரிய சீர் மறைக்காடே பேணுமின் மனம் உடையீரே.

பாடல் விளக்கம்‬:
பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆர வாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 11
மையுலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரைக் 
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்ப்
பொய்யில் வானவரோடும் புகவலர் கொளவலர் புகழே.

பாடல் விளக்கம்‬:
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக