சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : ஏழாம் திருமுறை 43 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் அடிகேள் சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சியிடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர் "நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும்" என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்து விட்டால், அதன் பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? விரைந்து அருள்புரியீர்.


பாடல் எண் : 02
ஏரிக் கனகக் கமலம் மலரன்ன சேவடி 
ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ
வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்கறா முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
பெரிய களிற்றி யானை, வெள்ளத்தினிடத்திற் சென்று அதனால் வளைத்துக் கொள்ளப்பட்டு மீளமாட்டாது வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, உமது அழகு பொருந்திய பொற்றாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள், இத்தனை ஊரிலும் திரிந்தால் அவை வருந்துமோ! வருந்தாவோ.


பாடல் எண் : 03
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்
பண்டகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் 
மொண்டகை வேள்வி முழக்கறா முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படுகின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ.


பாடல் எண் : 04
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்
விளைப்பு அறியாத வெங்காலனை உயிர் வீட்டினீர்
அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் 
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய இயமனை உயிர் போக்கியவரே, புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளைய பிறையையுடைய, தலைக்கண் உள்ள சடைமுடியையுடைய, திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர்; வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது.


பாடல் எண் : 05
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் 
பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ 
மாடம் மதிலணி கோபுரம் மணி மண்டபம் 
மூடி முகில் தவழ் சோலைசூழ் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
மாடங்கள் மேலும், மதில் மேலும், அழகிய கோபுரங்கள் மேலும், மணிமண்டபங்கள் மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில் தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?.


பாடல் எண் : 06
இழை வளர் நுண்ணிடை மங்கையொடு இடுகாட்டிடைக் 
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே 
மழை வளரும் நெடுங்கோட்டிடை மதயானைகள்
முழை வளர் ஆளி முழக்கறா முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தையுடைய யானைகளும், குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், நூல் தங்கியுள்ளது போலும், நுட்பமான இடையினையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண், குழை பொருந்திய காதுகள் பக்கங்களில் மோதும்படி முற்பட்டு நின்று நடனமாடுவதோ?.


பாடல் எண் : 07
சென்றில் இடைச் செடி நாய் குரைக்க செடிச்சிகள் 
மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றில் இடைக் களிறாளி கொள்ள குறத்திகள் 
முன்றில் இடைப் பிடி கன்றிடும் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
குன்றில் களிற்றி யானையைச் சிங்கம் உண்டுவிட, அதன் பிடியானையையும், கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின் முன் கட்டி வைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், பல இல்லங்களிலும் சென்று, அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க, தொழுத்திகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது, மேற்கொள்ளத் தக்க வாழ்க்கையோ?.


பாடல் எண் : 08
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகந்தொறும் 
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் 
முந்தி அடிதொழ நின்ற சீர் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
பெண் குரங்கிற்கும், ஆண் குரங்கிற்கும் உண்ணுதற் குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?.


பாடல் எண் : 09
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய 
அட்டுமின் சில்பலிக்கு என்று அகம் கடை நிற்பதே
பட்டி வெள்ளேறு உகந்து ஏறுவீர் பரிசு என்கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
யாவரும் எதிர் வந்து அடிவணங்க நிற்கின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள் தோறும், அறம் வளர்க்க, நீர், இல்லங்களின் வாயில் தோறும் சென்று "இடுமின்" என்று இரந்து, சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மைதான் என்னோ?.


பாடல் எண் : 10
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என்சொலார்
பத்தியினால் இடுவார் இடைப்பலி கொள்மினோ
எத்திசையும் திரையேற மோதிக் கரைகள் மேல் 
முத்தி முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றரே.

பாடல் விளக்கம்‬:
எப்பக்கங்களிலும் அலைபுரண்டு செல்லும்படி இரு கரைகளின்மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற முத்தாறு வலம் சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே, ஒன்றையும் நீக்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்லமாட்டார்கள்? ஆகையால், அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்.


பாடல் எண் : 11
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப் 
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்றிவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார் 
எத்தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவ ஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக