ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 33 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரமானார் போலும் துதிக்கலாம் சோதி போலும்
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரமானார் போலும் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.


பாடல் எண் : 02
தேயன நாடராகித் தேவர்கள் தேவர் போலும்
பாயன நாடறுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டம் கதனுளார் காளகண்டர்
மாயன நாடர் போலும் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
தெய்வத் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.


பாடல் எண் : 03
அறுமை இவ்வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே
சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.


பாடல் எண் : 04
கால் கொடுத்து இருகையேற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து உதிர நீரால் சுவரெடுத்து இரண்டு வாசல்
ஏல்வுடைத்தா அமைத்து அங்கு ஏழுசாலேகம் பண்ணி
மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதி நீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.


பாடல் எண் : 05
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.


பாடல் எண் : 06
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.


பாடல் எண் : 07
கீதராய்க் கீதம் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்டமாடி இட்டமாய்க் கங்கையோடு
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கையிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேத வடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞானஒளியை வழங்குபவராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவராய் உள்ளார்.


பாடல் எண் : 08
கனத்தினார் வலியுடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலும்
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.


பாடல் எண் : 09
தேசனைத் தேசன் தன்னைத் தேவர்கள் போற்றிசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.


பாடல் எண் : 10
பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே
துணியுடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்து இறுத்தார் மாமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
கயிலையைப் பெயர்த்து அப்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அவன் தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக்களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப்படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக் காடனாரை வழிபடுங்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக