ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 09 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஓத மால்கடல் பரவி உலகெலாம் 
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக் 
காதல் செய்து கருதப்படுமவர் 
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே.

பாடல் விளக்கம்‬:
அலைகளை உடைய பெருங்கடல் பரவிய சிறப்பினதும், உலகெலாம் உள்ள நற்குணம் வாய்ந்த பெண்கள் வலங்கொள்ளும் மாண்பினதுமாகிய மறைக்காட்டில் உறையும் பெருமானை விரும்பி, எல்லோராலும் தியானிக்கப்படும் அவர் திருவடிகளை வாழ்த்த நம் பாவங்கள் கெடும்.


பாடல் எண் : 02
பூக்கும் தாழை புறணி அருகெலாம் 
ஆக்கம் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார் தம்மை 
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.

பாடல் விளக்கம்‬:
ஊர்க்குப் புறத்தே உள்ள நீரிலெல்லாம் தாழை பூப்பதும், ஆக்கம் பெருகியதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்கும் காண்டற்கரியீர்! உம் பணி செய்யிலன்றோ அடியார்களைத் தேவரீர் திருவருள் செய்தற்குத் திருவருள் நோக்கம் புரிந்தருள்வது! (பணிந்து பணிசெய்வார்க்கன்றி முதல்வன் அருள் கைகூடாது என்பது கருத்து)


பாடல் எண் : 03
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலங்கொள் மறைக் காடரோ
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச் 
சின்ன வேடம் உகப்பது செல்வமே.

பாடல் விளக்கம்‬:
ஊர்க்குப் புறத்தே உள்ள நீரின் அருகெல்லாம் புன்னையும் ஞாழலும் பொருந்தியதும், மன்னுதலுற்ற நல்லடியார் வலங்கொள்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! அன்ன மென்னடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்கொண்டு நீர் உகப்பதாகிய செல்வம் சின்னமாகிய உமது வேடமே.


பாடல் எண் : 04
அட்ட மாமலர் சூடி அடும்பொடு 
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்டமாடியும் நான்மறை பாடியும்
இட்டமாக இருக்கும் இடம் இதே.

பாடல் விளக்கம்‬:
எட்டு வகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய புன்சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நட்டம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமோ?.


பாடல் எண் : 05
நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யினார் வலங்கொள் மறைக் காடரோ
தையல் பாகம் கொண்டீர் கவர் புன்சடைப் 
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.

பாடல் விளக்கம்‬:
நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ? (நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் முதல்வனைச் சாரும் போது நலிவும் மெலிவும் இல்லையாகும் என்பது கருத்து).


பாடல் எண் : 06
துஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார் 
வஞ்சின்றி வலங்கொள் மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலி கொணர்ந்து 
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

பாடல் விளக்கம்‬:
உறங்கும் போதும் உறங்காது உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலஞ்செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! பஞ்சனைய மெல்லடி உடைய இப்பாவை பலி கொணர்ந்து தேவரீர் பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?.


பாடல் எண் : 07
திருவினார் செல்வம் மல்கு விழாவணி
மருவினார் வலங்கொள் மறைக் காடரோ
உருவினாள் உமை மங்கையோர் பாகமாய்
மருவினாய் கங்கையைச் சென்னி தன்னிலே.

பாடல் விளக்கம்‬:
அருள் திருவுடையாரின் செல்வம் நிறைந்து விளங்கித் தோன்றும் விழாக்களால் அழகு பெற்றதும், நெஞ்சு நும்பால் மருவினார் வலம் செய்வதும் ஆகிய மறைக் காட்டுறையும் பெருமானே! நல்ல அழகிய உருவமுடைய உமை மங்கையை ஒரு பாகமாக மருவியதோடு, கங்கையைச் சடையிற் சூடியுள்ளது என்னையோ?.


பாடல் எண் : 08
சங்கு வந்தலைக்கும் தடங் கானல்வாய் 
வங்கமார் வலங்கொள் மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே 
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே.

பாடல் விளக்கம்‬:
சங்குகளை அலைகள் கரையிலே கொண்டு வந்து உலவவிடும் கடற்கரைச் சோலையிடத்துக் கப்பல்கள் வந்து வலங்கொள்வன போன்று வரிசைகொள்ளும் மறைக்காட்டுறையும் பெருமானே! தேவரீர் கங்கையைச் செஞ்சடையில் வைப்பதும் அன்றி, அகங்கையில் அனலையும் ஏந்தல் அழகியதேயோ?.


பாடல் எண் : 09
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக் காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக.


பாடல் எண் : 10
குறைக் காட்டான் விட்ட தேர் குத்த மாமலை 
இறைக் காட்டி எடுத்தான் தலை ஈரைந்தும் 
மறைக் காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக் காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே.

பாடல் விளக்கம்‬:
தன்பாலுள்ள குறையைக் காட்டாதவனாகிய இராவணன் ஏறிவந்த தேர் வழிச்செல்லுதலைத் தடுத்த திருக்கயிலாய மலையைச் சிறுபோது தன்வலிகாட்டி எடுக்கலுற, அவன் பத்துத் தலைகளும், மறைக்காட்டுப் பெருமானே! நீ சிறிது திருவிரல் ஊன்றுதலும், வாய்விட்டரற்றினன். எம்பெருமானே! நீ அடியேன் உனை ஏத்துதலால் எனக்கு இறப்பைக் காட்ட மாட்டாய்; இறவாத இன்ப அன்பே காட்டுவாய் என்றபடி.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக