இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி
திருமுறை : நான்காம் திருமுறை 34 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
யாரையும் மேலுணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்சல் என்பார் கலிமறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
செழிப்பு மிக்க மறைக்காடனார், யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார்.
பாடல் எண் : 02
முக்கி முன் வெகுண்டெடுத்த முடியுடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திருமறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக் காடனார், தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த, முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய், பிறைசூடிய எம் தலைவராய், எலும்பு, பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
பாடல் எண் : 03
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கொரு தேர் கடாவி
அகப்படுத்து என்று தானும் ஆண்மையான் மிக்கு அரக்கன்
உகைத்தெடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக் காடுதானே.
பாடல் விளக்கம்:
மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி, மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க, அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும்.
பாடல் எண் : 04
அந்தரம் தேர் கடாவி யார் இவன் என்று சொல்லி
உந்தினான் மாமலையை ஊன்றலும் ஒள் அரக்கன்
பந்தமாம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில், அவன் உடம்பில் இணைந்த பத்துத் தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார்.
பாடல் எண் : 05
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன்வலி உடையனாகிக்
கடுக்கவோர் தேர் கடாவி கை இருபதுகளாலும்
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லனூராம் அணிமறைக் காடுதானே.
பாடல் விளக்கம்:
விரைவாகப் புட்பக விமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி, "இதுவும் ஒரு பண்டமா? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன்." என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும்.
பாடல் எண் : 06
நாண் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியான் மா வலியன் என்று
நீண் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கலுற்றான்
தோண் முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
ஒவ்வொரு நாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக் கொண்டு இலங்கையின் மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார்.
பாடல் எண் : 07
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன் மா வலியன் என்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோனைக்
கத்திவாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான், பத்து வாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார்.
பாடல் எண் : 08
பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியனாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமாறு அறியமாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே
நக்கன பூதமெல்லாம் நான்மறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.
பாடல் எண் : 09
நாணஞ்சு கையனாகி நன்முடி பத்தினோடு
பாணஞ்சு முன்னிழந்து பாங்கிலா மதியனாகி
நீணஞ்சு தானுணரா நின்று எடுத்தானை அன்று
ஏண்ஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காடனாரே.
பாடல் விளக்கம்:
இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன், நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து. தனக்குத் துணையாக உதவாத அறிவினால், பெரும்பயன் தரும் திருவைந்தெழுத்தைத் தியானம் செய்யாது, கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக, இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார்.
பாடல் எண் : 10
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன்னிருக்கு இசைகள் பாட
அங்கைவாள் அருளினான் ஊர் அணிமறைக் காடுதானே.
பாடல் விளக்கம்:
கங்கா தேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில், தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக, பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க, அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார். அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக