சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : முதல் திருமுறை 53 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
தேவராயும் அசுரராயும் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.


பாடல் எண் : 02
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர் தீக் காலுமேலை விண் இயமானனோடு
மற்று மாதோர் பல்லுயிராய் மால் அயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 03
வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி
நாரி பாகம் நயந்து பூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிதாகப் பலிகொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந்திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 04
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 05
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவிச்
செழுங்கல் வேந்தன் செல்வி காணத் தேவர் திசை வணங்கத்
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய்க்கணம் பூதம் சூழ
முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
வானத்தில் சஞ்சரிக்கும் திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு, ஆகியவற்றைத் திருமுடி மீது நெருக்கமாகச் சூடி, இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை, தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள் பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக் கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம் திரு முதுகுன்றமாகும்.


பாடல் எண் : 06
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல் இதழி
சழிந்த சென்னி சைவவேடந் தான் நினைத்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
சுழிகளோடு கூடிய கங்கை, அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்கட்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். 


பாடல் எண் : 07
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
மயங்கு மாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனாய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்கு மார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 09
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாமமந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 10
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலும் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்க முந்நீர்ப் பொங்கு விடத்தை உண்ட
முறிகொள்மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள்தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.


பாடல் எண் : 11
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
--- --- --- --- --- --- --- --- --- --- 
(இப்பதிகத்தின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயிற்று.)

பாடல் விளக்கம்‬:
தேவர் கணங்கள் பலவும் நிறைந்து செறிந்து வணங்கும் திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன் வயம் இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத் தலைவனான ஞானசம்பந்தன்......

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக