இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை
திருமுறை : முதல் திருமுறை 93 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.
இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.
பாடல் எண் : 02
அத்தன் முதுகுன்றைப் பத்தியாகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.
நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன் மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.
பாடல் எண் : 03
ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமதாமே.
திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.
பாடல் எண் : 04
ஈசன் முதுகுன்றை நேசமாகி நீர்
வாச மலர்தூவப் பாச வினைபோமே.
திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.
பாடல் எண் : 05
மணியார் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவார் உலகிலே.
அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர்கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.
பாடல் எண் : 06
மொய்யார் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே.
அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.
பாடல் எண் : 07
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படையாயின சூழ உடையார் உலகமே.
திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சி செய்யும் உயர்வை உடையவராவர்.
பாடல் எண் : 08
பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.
பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.
பாடல் எண் : 09
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.
திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.
பாடல் எண் : 10
தேரர் அமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர் நின்று உள்குமே.
புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற திருமுதுகுன்றத்தை அங்கு நின்று நீவீர் நினைந்து தியானிப்பீராக.
பாடல் எண் : 11
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.
திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக