சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : ஆறாம் திருமுறை 68 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானைக்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவு ஒன்று ஆட்டுவானைக்
கொல்வேங்கை அதளானைக் கோவணன்னை
அருமணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை
ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
கண்ணின் கருமணியைப் போன்று நமக்கு அருமையாக இருப்பவனும், பொற்குன்றினை ஒத்து இருப்பவனும், தன்னை தியானிக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருப்பவனும், ஞானத்தை வழங்கும் சிறந்த ஆசிரியனாக விளங்குபவனும், கொடிய பாம்பினைத் தனது விருப்பம் போல் ஆட்டும் வல்லமை படைத்தவனும், கொல்லும் குணத்தினை உடைய புலியினை உரித்து அதன் தோலினை உடையாக அணிந்தவனும், இடுப்பில் கோவணத்தை அணிந்து காட்சி தருபவனும், விலையுயர்ந்த மணி போன்று அருமையானவனும், தன்னைச் சரணம் புகுந்த அடியார்களுக்கு அமுதம் போன்று இனிப்பவனும், பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை விரும்பி நீராடுபவனும், அடியேனை சரணாக ஏற்றுக் கொண்டவனும், வீடுபேறு எனப்படும் செல்வத்தை அருளும் மணியாக விளங்குபவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை. நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 02
காரொளிய கண்டத்து எம் கடவுள் தன்னைக் 
காபாலி கட்டங்கம் ஏந்தினானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியம் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீரொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
கருமையான ஒளியுடன் மிளிரும் கழுத்தினை உடைய கடவுளை, காபாலியாக பிரமனின் தலையைக் கையில் ஏந்தி பலிக்குச் செல்பவனை, மழு ஆயுதத்தை ஏந்தியவனை, உலகத்திற்கு ஒளி தரும் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்குபவனை, ஆகாயத்தில் ஒளியாக மிளிர்பவனை, பாதாளத்தின் இருளாகத் திகழ்பவனை, பால் போன்ற நிலவினைத் தனது சடையில் சூடி தன்னைச் சரண் அடைந்தாரை காக்கும் நற்பண்பு உடையவனை, ஒப்புமை இல்லாத முறையில் ஞான ஒளியாகத் திகழ்பவனை, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனை, தன்னைப் போற்றி வணங்கும் அடியார்களின் தீவினைகள் அவர்களைத் தாக்காத வண்ணம் அந்த தீவினைகளைத் தான் வாங்கிக் கொள்பவனை, சிறப்பான ஒளியாகத் திகழ்பவனை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமான் ஆகிய சிவபெருமானை நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 03
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை 
ஏறூர்ந்த பெம்மானை எம்மான் என்று    
பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில் வித்தானை    
முத்தினை என் மணியை மாணிக்கத்தை 
முளைத்து எழுந்த செழும்பவளக் கொழுந்து ஒப்பானைச்
சித்தனை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
அனைத்து திசைகளிலும் உள்ள தேவர்கள் தொழ நின்றவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவனும், எனது தலைவன் என்று அடியேன் சொல்லி பணிந்த போது பல நாட்கள் என்னை பாமாலைகள் பாட வைத்தவனும், முத்து, மாணிக்கம், மணி, முளைத்து எழுந்த செழும்பவளம் போன்று நமது கண்களுக்கு இனிமையாக இருப்பவனும், எல்லாம் செய்ய வல்லவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 04
ஊன்கருவின் உள்நின்ற சோதியானை 
உத்தமனைப் பத்தர் மனம் குடி கொண்டானைக்
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானைக் 
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு
தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
உடலின் கருவாக உள்ள உயிரின் உள்ளே கலந்திருக்கும் சோதியானை, உத்தமனை, அடியார்கள் மனதினில் குடி கொண்டிருப்பவனை, அர்ஜுனனுக்கு அருள் செய்வதற்காக கானகத்தில் திரிந்து காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனை, கருமையான மேகம் போன்ற நிறமுடைய கழுத்தினை உடையவனை, தீயாகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் நிலமாகவும் நீராகவும் ஐம்பெரும் பூதங்களாக இருப்பவனும், சமண சமயம் சார்ந்திருந்த அடியேன் சைவ சமயத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதை தானே உணர்ந்து சூலை நோய் கொடுத்து என்னை ஆட்கொண்டவனும், என்னை ஆட்கொண்ட பின்னர் எனக்கு குருவாக இருந்து என்னை பல பாடல்கள் பாட வைத்தவனும், எனக்கு கரும்பு போன்று இனிப்பவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 05
தக்கனது பெருவேள்வி தகர்த்தானாகித் 
தாமரையான் நான்முகனும் தானேயாகி
மிக்கதொரு தீ வளி நீர் ஆகாசமாய் 
மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலானை
அக்கினோடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு
அங்கங்கே அறு சமயமாகி நின்ற
திக்கினை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
மிகவும் பெருமைக்குரிய முறையில், அதே சமயத்தில் தன்னைப் புறக்கணித்து தக்கன் செய்த வேள்வியை முற்றுப் பெறாதவாறு தகர்த்தவனும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனாக இருப்பவனும், ஐம்பூதங்களாக இருப்பவனும், மேலுலகமாகவும் அதற்கு அப்பாலாகவும் இப்பாலாகவும் எங்கும் பரந்து இருப்பவனும், சங்கு மணியையும் முத்தினையும் ஒன்று போல் கருதி அணிபவனும், தொண்டர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வகையான வைதீக சமயங்களாக வழியாக இருப்பவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 06
புகழொளியை புரமெரித்த புனிதன் தன்னைப் 
பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் 
கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன் நிறம் பொதிந்த மேனியினை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும், ஆகாயத்தின் பண்பாகிய ஒலியாகவும் திருவிழாக் காலங்களில் எழும் ஒலியாகவும் இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறையும் விகிர்தனும், காலில் அணிந்துள்ள வீரக் கழல்களின் ஒலியும் கையில் அணிந்துள்ள வளையல்களின் ஒலியும் கலந்து ஒலிக்க பல இல்லங்களுக்கும் பிச்சை கேட்டுச் செல்பவனும், மேன்மையான ஒளியுடன் திகழ்பவனும் ஆகிய மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 07
போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையும் குரை கழலால் காய்ந்தான் தன்னை
மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் 
வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், கொல்ல வந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாத வண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 08
துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச் 
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்கும் தானேயாகிப் 
பெண்ணினோடு ஆணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
துறவு கொள்ளாமலே, இயல்பாக பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவனும், சோதி வடிவாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களுக்கும் முழுமுதல் பொருளாக இருப்பவனும், பிறப்பு எடுக்காமலே எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனும், பெண்ணும் ஆணும் கலந்த உருவத்தினை உடையவனும், தனது புகழினை மறவாது வாழ்த்திப் பாடும் தொண்டர்களின் மனதினில் எப்போதும் நிலைத்து நிற்கும் பண்பினை உடையவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 09
பொற்றூணைப் புலால் நாறு கபாலம் ஏந்திப்
புவலோகம் எல்லாம் உழி தந்தானை
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை 
முழுமுதலாய் மூவுலகும் முடிவு ஒன்றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக்
கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
பொன் மயமான தூண் போன்று விளங்குபவனை, புலால் நாற்றம் வீசும் கபாலத்தினை ஏந்தி அனைத்து உலகங்களிலும் பலி கொள்வதற்காகத் திரிபவனும், இளம்பிறையாக தன்னிடம் சரண் அடைந்த சந்திரனைத் தனது சடையில் மாலையாக அணிந்தவனும், அனைத்துப் பொருட்களுக்கும் முழுமுதற் பொருளாக விளங்குபவனும், நிலவுலகம், மேலுலகம் மற்றும் பாதாளம் ஆகிய மூன்று உலகங்களிலும் கலந்து இருப்பவனும், முடிவேதும் இன்றி நிலையான கல் தூணாக இருப்பவனும், காளத்தி மலையில் உறைபவனும், தன்னை நினைக்காத திரிபுரத்து அரக்கர்கள் மூவரின் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அவர்களை வெற்றி கொண்டவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.


பாடல் எண் : 10
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய ஊன்றி 
எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியம் தன்னை            
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து 
வளர் மதியம் சடை வைத்து மாலோர் பாகம்
திகழ்ந்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையின் பெருமையை அறியாது அதனை இகழ்ந்து பின்னர் அதனை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், தனது வலிமை அடக்கப்பட்ட பின்னர் உண்மை நிலையினை உணர்த்த அரக்கன் தனது உடலின் ஏழு நரம்புகளைக் கொண்டு பாடிய இன்னிசையைக் கேட்டு அரக்கனைப் புகழ்ந்தவனும், பூந்துருத்தி தலத்தில் உறைபவனும், புண்ணியனும், விண்ணவர்களால் பெரிய செல்வமாக கருதப் படுபவனும், உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனும், தன்னிடம் சரணடைந்த பின்னர் வளரும் தன்மையினைப் பெற்ற சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துத் திகழ்பவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக