இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வைத்திய நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ தையல் நாயகி
திருமுறை : ஆறாம் திருமுறை 54 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடி அயன் மாலறியா வண்ணம்
நீண்டானை நெடுங்கள மாநகரான் தன்னை
நேமிவான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானைக் கேதாரம் மேவினானைக்
கேடிலியைக் கிளர்பொறி வாள் அரவோடு என்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
மாற்றுச் சமயமாகிய சமண சமயத்தைச் சார்ந்திருந்த அடியேனை, எனது அறியாமையை நீக்கி அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தவனும், தனது அடியையும் முடியையும் திருமாலும் பிரமனும் அறியாத வண்ணம் நெடிய தழலுருவாய் நீண்டவனும், நெடுங்களம் தலத்தில் உறைபவனும், உயர்ந்த சக்கரப்படை கொண்டு அசுரன் சலந்தரனின் உடலினைக் கிழித்தவனும், கேதாரம் தலத்தில் உறைபவனும், எப்போதும் அழிவில்லாமல் இருப்பவனும், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்பு மற்றும் எலும்பினை ஆபரணமாக பூண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 02
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச் சிவன் தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக்
குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப்
பெம்மானைக் கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
அடியேனுடைய உள்ளத்தில் தான் சிறப்பாக பொருந்தி இருக்கும் வாய்ப்பினை எனக்கு அருளியவனும், மங்கலமாக விளங்குபவனும், அனைத்து தேவர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் நுண்ணியனாகத் திகழ்பவனும், கொடிய நீண்ட வேலினை ஏந்தி வந்த கூற்றுவனை, ஒலிக்கும் கழலினை அணிந்த தனது காலால் உதைத்து அழித்து, காலன் தன்னை அணுகியதால் முனிவனாகிய சிறுவன் மார்க்கண்டேயன் அடைந்த அச்சத்தைத் தவிர்த்தவனும், பிறப்பு இல்லாதவனும், இறப்பினைக் கடந்த தலைவனும், துதிக்கையினை உடைய யானையைக் கொன்று அதன் தோலைத் தனது உடலில் போர்த்தவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 03
பத்திமையால் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத்து உள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்கும் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
அடியேன் பக்தியுடன் வணங்கி பல நாட்கள், தன்னைத் தொடர்ந்து தேவாரப் பாடல்கள் பாடுமாறு செய்தவன் சிவபெருமான் தான். அனைத்துத் தெய்வங்களும் புகழ்ந்து போற்றும் தெய்வமாக இருப்பவனும், எனது தலைவனும், எனது உள்ளத்தில் தேன் போன்று இனிய நினைவாக ஊறுபவனும், தேன், பால், அமுதம் மற்றும் இனிய கரும்பு போன்று அனைவருக்கு இனியவனாக. அவர்களது பகைவர்களை அழிப்பவனும், முதற்கடவுளாக இருப்பவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 04
இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி
இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தை தனை தெருட்டித் தன்போல்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதி மாதவத்து உளானை
ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
இருள் நிறைந்து கிடந்த எனது உள்ளத்தின் இருளை நீக்கி, எனது தீயவினைகளின் பயனாக எனக்குற்ற துன்பங்களைக் களைந்து, அறிவினில் ஏழையாக தெளிவற்ற சிந்தனையுடன் திரிந்த எனது சிந்தனையை தெளிவடைய வைத்து நான் உய்யும் வழியினை எனக்கு உணர்த்தியவன் சிவபெருமான். சிவலோகத்தின் நெறியினை தான் அறிந்தவாறு, நானும் அறிவதற்கு கருணை புரிந்தவன் சிவபெருமான். நால் வேதங்கள் மற்றும் வேதங்களின் பகுதியான ஆறு அங்கங்கள் ஆகியவற்றைக் கடந்த பொருளாக இருப்பவன் சிவபெருமான். இத்தகைய பெருமை வாய்ந்த குணங்களை உடைய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 05
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்
தரணி தலத்து அஞ்சாகி எஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
மின்னல் வீசி பிரகாசிக்கும் ஆகாயத்தில் ஒலி எனப்படும் ஒற்றைப் பண்புடனும், வீசும் காற்றினில் ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளாகவும். சிவந்த நிறத்துடன் மிளிரும் தீயினில் ஒலி, ஊறு மற்றும் ஒளி ஆகிய மூன்று பண்புகளாகவும், பள்ளத்தினை நோக்கி ஓடும் இயல்பினைக் கொண்ட நீரினில், ஒலி ஊறு ஒளி மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளாகவும், பூமியில் ஒலி ஊறு ஒளி சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளாகவும் விளங்குபவன் சிவபெருமான். என்றும் அழியாத பொருளாக அனைவர்க்கும் தஞ்சம் அளிக்கும் நிலையான பொருளாக விளங்குபவனும், சிறந்த பவளக் கொழுந்தாக விளங்குபவனும், அரிய முத்தாகவும், வளரும் ஒளியாகவும், வயிரமாகவும், குற்றம் ஒன்றும் இல்லாது பொன்னிறத்துடன் விளங்கும் மேனியை உடையவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 06
அறையார் பொற்கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார் மூவிலை நெடுவேல் கடவுள் தன்னைக்
கடல் நாகைக் காரோணம் கருதினானை
இறையானை என்னுள்ளத்து உள்ளே விள்ளாது
இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
பொன்னால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு, அழகு நிறைந்த தில்லை அம்பலத்துள் நடனம் ஆடும் அழகனும், விடம் பூசப்பட்ட மூவிலை சூலத்தை தனது கையில் ஏந்திய கடவுளாக விளங்குபவனும், கடல் நாகைக் காரோணம் தலத்தை விரும்பித் தனது இருப்பிடமாக ஏற்றுக் கொண்டவனும், அனைவர்க்கும் இறைவனாக விளங்குபவனை, எனது உள்ளத்தில் என்றும் நீங்காது உறைபவனும், ஏழ் உலகங்களின் பாரத்தையும் தாங்குபவனாக உள்ளவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 07
நெருப்பனைய திருமேனி வெண்ணீற்றானை
நீங்காது என் உள்ளத்தின் உள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா
இறையவனை எனையாளும் கயிலை என்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
நெருப்பினை ஒத்து சிவந்த நிறத்து மேனியின் மேல் வெண்ணீறு அணிந்தவனாக காணப்படுபவனும், மிகுந்த விருப்பத்துடன் எனது உள்ளத்தில் நீங்காது நிலை பெற்று இருப்பவனும், வேதம் ஒதுபவனும், வேதத்தை நன்கு உணர்ந்தவனும், திருவெண்காடு அகன்ற காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தி இடைமருது ஈங்கோய்மலை ஆகிய தலங்களில் நீங்காது உறைபவனும், என்னை ஆட்கொண்டவனும், கயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 08
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
எண்ணிக்கையில் அடங்காத பல்லாயிரம் திருநாமங்கள் சொல்லி வானோர்கள் சிவபெருமானை வாழ்த்தி வணங்குகின்றார்கள். எப்போதும் தங்களது சிந்தனையில் பெருமானை நினைத்து வாழும் அடியார்களுக்கு, எளிதில் எவருக்கும் கிடைக்காத முக்திச் செல்வத்தை அளிப்பவன் சிவபெருமான்; மந்திரமாகவும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளாகவும் இருந்து தீராத நோய்களையும் தீர்க்க வல்ல மருந்தாகவும் இருப்பவன் சிவபெருமான். தங்களது விருப்பம் போன்று வானில் பறந்துகொண்டு இருந்த மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியுமாறு, வல்லமை வாய்ந்த வில்லினைக் கையில் ஏந்தி போரில் ஈடுபட்டவன் சிவபெருமான். இத்தகைய பண்புகள் கொண்ட புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 09
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடை மேல் புனல் கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னானானை
நான்மறையின் நற்பொருளை நளிர் வெண்திங்கள்
கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும்
காரணனை நாரணனைக் கமலத்து ஓங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
எல்லாப் பொருட்களையும் ஆக்கியவனும், பசுமையான கொடி போன்று உடல் அமைப்பினைக் கொண்ட பார்வதி தேவியைத் தனது உடலின் ஓர் பாகத்தில் வைத்தவனும் படர்ந்த தனது சடையில் கங்கை நங்கையை மறைத்து வைத்து வஞ்சகர்கள் செய்யும் செயலைச் செய்தவனை, என்னுடன் நெருங்கி நின்று எனக்குத் துணையாக இருந்தவனை, எனது குற்றங்களைக் களைந்து என்னைத் திருத்தி தன்னுடன் நிலையாக அணைத்துக் கொண்டவனும், நான்மறையின் உட்பொருளாக இருப்பவனும், குளிர்ச்சி உடையதும் வெண்மை நிறத்தில் உள்ளதுமாகிய திங்களைத் தனது தலையில் மாலையாக சூடியவனும், விரைந்து நடக்கும் தன்மை கொண்ட இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குபவனும், நாராயணனாகவும், பிரமனாகவும் இருப்பவனும், புண்ணியமே வடிவமாக உள்ளவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
பாடல் எண் : 10
இறுத்தானை இலங்கையோர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக் கண் அழலால் காமன் ஆகம்
காய்ந்தானைக் கனல் மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
பாடல் விளக்கம்:
கயிலாய மலையினை தகர்ப்பதற்கு முயற்சி செய்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் மலையின் அடியில் நசுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், பின்னர் அரக்கன் இராவணன் தனது கை நரம்புகளை வீணை நரம்புகள் போல் மீட்டி சாம வேதம் இசைக்க, அந்த இன்னிசை கேட்டு இன்பமடைந்து, அரக்கனின் துயர் தீர்த்தவனும், அடியார்களின் கொடிய நோய்களையும், தீய வினைகளையும் தீர்த்தவனை, பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி, நீலகண்டனாக விளங்குபவனும், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு விழித்தவனும், தீப்பொறி கக்கும் மழுப் படையினையும் கலைமான் கன்றினையும் தனது கையினில் ஏந்தியவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு
|| --- திருப்புள்ளிருக்குவேளூர் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக