வெள்ளி, 4 மார்ச், 2016

திருக்குருகாவூர் வெள்ளடை திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுவேத ரிஷபேஸ்வரர், ஸ்ரீ வெள்விடை நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ நீலோத்பவ விசாலாட்சி, ஸ்ரீ காவியங்கன்னி அம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 29 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே என்று உன்னைப் பேசுவார் பிறர் எல்லாம்
முத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட்செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன்; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை "பித்தன்" என்று இகழ்ந்து பேசுவர், அஃது அவ்வாறாக நீ முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்தவித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ.


பாடல் எண் : 02
ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்
வாவியில் கயல் பாயக் குளத்திடை மடைதோறும் 
காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் 
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
வாவிகளில் கயல் மீன்கள் துள்ள, குளத்திலும், நீர் மடைகளிலும், கருங்குவளையும், செங்குவளையும், தாமரையும், செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய்!.


பாடல் எண் : 03
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்
ஓடு நன் கலனாக உண் பலிக்கு உழல்வானே
காடு நல் இடமாகக் கடு இருள் நடமாடும் 
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க, உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே, காடே சிறந்த அரங்காய் இருக்க, செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும், பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து, நோயைப் பற்றறுப் பாயன்றோ.


பாடல் எண் : 04
வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டாய் 
ஒப்புடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை 
அப்படி அழகாய அணி நடை மட அன்னம் 
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற, மலர்களையுடைய பொய்கைகளில், மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற, அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ, என்னை வெப்பு நோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய்.


பாடல் எண் : 05
வரும் பழி வாராமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும் 
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும், பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே, அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே, நீயன்றோ, எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து, என்னை ஆட்கொண்டாய்.


பாடல் எண் : 06
பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, பரவெளியின்கண் உள்ள நீ, இம்மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு, பண்ணின்கண் இனிமையைப் போன்றும், பழத்தின்கண் சுவையைப் போன்றும், கண்ணின்கண் மணியைப் போன்றும், மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ.


பாடல் எண் : 07
போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை 
நோந்தன செய்தாலும் நுன்னலது அறியேன் நான்
சாந்தனை வருமேலும் தவிர்த்து என்னை ஆட்கொண்ட 
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ! ஆதலின், இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.


பாடல் எண் : 08
மலக்கில் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக் 
கலக்குவான் வந்தாலும் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும், மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும், அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ.


பாடல் எண் : 09
படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க் கேடுலாப் பொன்னடிக்கே 
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

பாடல் விளக்கம்‬:
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும், நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும், முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும், நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ.


பாடல் எண் : 10
வளங்கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகுகாய 
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன்
உளங்குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரையாமே.

பாடல் விளக்கம்‬:
வளப்பம் மிகுந்த சோலைகளையும், நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற, வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய, `வனப்பகை` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன், மனம் இன்புற்றுப் பாடிய இத்தமிழ்மாலை, அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ் மாலையாய் நிற்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| --- திருக்குருகாவூர் வெள்ளடை திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக