இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுவேத ரிஷபேஸ்வரர், ஸ்ரீ வெள்விடை நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ நீலோத்பவ விசாலாட்சி, ஸ்ரீ காவியங்கன்னி அம்மை
திருமுறை : மூன்றாம் திருமுறை 124 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
ஊரின் பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி காவியங்கன்னி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன. கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இறைவன் சுந்தரருக்கு அமுது படைத்தல்: சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளுகையில் தாகமும், பசியும் அவரையும் அவர் தொண்டர் கூட்டத்தினரையும் வருத்திற்று. இறைவர் அந்தணர் உருவம் கொண்டு வழியில் தண்ணீர்ப் பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரர் உண்டு உறங்குகையில் இறைவர் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரர் தூக்கத்தினின்று எழுந்து "இத்தனையாமாற்றை யறிந்திலேன்" எனத் தொடங்கும் பதிகம் பாடி கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு: சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை காசிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார்.
இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப் போக்கிய கட்டமுது தந்த விழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது.
நன்றி shivatemples இணையதளத்திற்கு
பாடல் எண் : 01
சுண்ண வெண்ணீறு அணி மார்பில் தோல் புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்த நின்று ஆடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞகனாரே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார். அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர்.
பாடல் எண் : 02
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளரவு ஆட்டு உகந்தீரே.
பாடல் விளக்கம்:
நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர்.
பாடல் எண் : 03
அடையலர் தொன்னகர் மூன்று எரித்து அன்ன
நடைமட மங்கையொர் பாகம் நயந்து
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கரனீரே.
பாடல் விளக்கம்:
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சடையில் வெண்ணிறப் பிறைச் சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர். அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின் மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர்.
பாடல் எண் : 04
வளங்கிளர் கங்கை மடவரலோடு
களம்பட ஆடுதிர் காடு அரங்காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை எம்பெருமானே.
பாடல் விளக்கம்:
குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய எம்பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர்.
பாடல் எண் : 05
சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரிபுல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தை பிரானே.
பாடல் விளக்கம்:
விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பு, மழு, வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும், உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு, வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில், உலகுமீள உளதாக, ஆடுகின்றீர்.
பாடல் எண் : 06
காவியம் கண் மடவாளொடும் காட்டிடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே.
பாடல் விளக்கம்:
தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ அகல் ஏந்தி நின்று ஆடுகின்றீர்.
இப்பதிகத்தில் உள்ள ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக