இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை
திருமுறை : ஏழாம் திருமுறை 25 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பாடல் எண் : 01
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்
முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்
மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை அரையில் உடுத்தியவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் "பரவை" என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு.
பாடல் எண் : 02
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொனைத் தந்தருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
வம்பமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
எம் பெருமானிரே நீர் முன்பு வானத்தில் உள்ள தேவர்களும், அவர்கட்குமேல் உள்ள "அயன், மால்" என்பவர்களும் கண்டு நிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர். இப்பொழுது, மணம் பொருந்திய கூந்தலையுடையவளும் "பரவை" என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலிகின்றாள்; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும்.
பாடல் எண் : 03
பத்தா பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தாரும் தடங்கண் பரவை இவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே, அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே, இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே, மூன்று கண்களையுடையவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, என் அப்பனே, மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய "பரவை" என்னும் பெயரினளாகிய இவள், பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
பாடல் எண் : 04
மங்கையொர் கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர்
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே, சடையின்கண் சந்திரனை அணிந்தவரே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, கண்ணோட்டம் உடையவரே, தனங்கள் அழகியாளும், யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும் "பரவை" என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும்.
பாடல் எண் : 05
மையாரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய்
பையாரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே, பகைவரது மூன்று ஊர்களை எரித்த, செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினையுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள்.ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு, செம்பொன்னைத் தந்தருள்.
பாடல் எண் : 06
நெடியான் நான்முகனும் இரவி(ய்)யொடும் இந்திரனும்
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படியாரும் இயலாள் பரவை இவள் தன் முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
திருமாலும், பிரமனும், சூரியனும், இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும் "பரவை" என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
பாடல் எண் : 07
கொந்தணவும் பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகை மேல்
வந்தணவும் மதிசேர் சடைமா முதுகுன்று உடையாய்
பந்தணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே
அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும், மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுதுகுன்றத்தை உடையவனே, அந்தணனே, பந்து பொருந்திய விரலை உடையவளும் "பரவை" என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய்.
பாடல் எண் : 08
பரசாரும் கரவா பதினெண் கணமும் சூழ
முரசார் வந்து அதிர(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே
விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
மழுப் பொருந்திய கையை யுடையவனே, பதினெண் கணங்களும் புடை சூழவும், முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, எல்லா உலகிற்கும் அரசனே, நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும் "பரவை" என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
பாடல் எண் : 09
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.
பாடல் விளக்கம்:
தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே, எல்லா உயிர் கட்கும் மூத்தவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, கூத்துடையானே, உன்னை யான் பாடாமல் இருந்தறியேன், ஆதலின் மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும் "பரவை" என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
பாடல் எண் : 10
பிறையாரும் சடை எம்பெருமான் அருளாய் என்று
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார் தங்குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே.
பாடல் விளக்கம்:
தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை, அந்தணர் தலைவனும், வயல்களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன், "பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய்" என்று வேண்டிப் பாடிய, இறைவனது திருவருள் நிறைந்த இப்பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக