சனி, 5 மார்ச், 2016

திருப்புள்ளிருக்குவேளூர் திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வைத்திய நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ தையல் நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 79 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வெள்ளெருக்கு அரவம் விரவும் சடைப் 
புள்ளிருக்கு வேளூர் அரன் பொற்கழல்
உள்ளிருக்கு உணர்ச்சி இல்லாதவர்
நள்ளிருப்பர் நரகக் குழியிலே.

பாடல் விளக்கம்‬:
வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.


பாடல் எண் : 02
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய்க் 
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே 
போற்ற வல்லிரேல் புள்ளிருக்கு வேளூர்
சீற்றமாயின தேய்ந்து அறும் காண்மினே.

பாடல் விளக்கம்‬:
விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.


பாடல் எண் : 03
அருமறையனை ஆணொடு பெண்ணனைக் 
கருவிடம் மிக உண்ட எம் கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

பாடல் விளக்கம்‬:
அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்கு வேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.


பாடல் எண் : 04
தன்னுருவை ஒருவருக்கு அறிவொணா 
மின்னுருவனை மேனி வெண் நீற்றனைப்
பொன்னுருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே.

பாடல் விளக்கம்‬:
தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில் பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.


பாடல் எண் : 05
செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா
அங்கியின் உருவாகி அழல்வதோர் 
பொங்கு அரவனைப் புள்ளிருக்கு வேளூர் 
மங்கை பாகனை வாழ்த்த வரும் இன்பே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த கண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்கு வேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.


பாடல் எண் : 06
குற்றம் இல்லியைக் கோலச் சிலையினால் 
செற்றவர் புரம் செந்தழலாக்கியைப்
புற்று அரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

பாடல் விளக்கம்‬:
குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.


பாடல் எண் : 07
கையினோடு கால் கட்டி உமரெலாம் 
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் 
பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே.

பாடல் விளக்கம்‬:
கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன் முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.


பாடல் எண் : 08
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்கு வேளூர் 
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.

பாடல் விளக்கம்‬:
உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று "சிவன்" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார் பணிகின்ற புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.


பாடல் எண் : 09
இப்பதிகத்தில் உள்ள செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 10
அரக்கனார் தலை பத்தும் அழிதர 
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய 
பொருப்பனார் உறை புள்ளிருக்கு வேளூர் 
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே.

பாடல் விளக்கம்‬:
இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்கு வேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக