இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை
திருமுறை : மூன்றாம் திருமுறை 99 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசமர் படை உடையீரே
பரசமர் படை உடையீர் உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.
பாடல் விளக்கம்:
பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை எழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்.
பாடல் எண் : 02
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பையரவம் அசைத்தீரே
பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறும் நலமே.
பாடல் விளக்கம்:
அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே! பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ள உம்மைப் பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.
பாடல் எண் : 03
முழவமர் பொழிலணி முதுகுன்றம் மேவிய
மழ விடையது உடையீரே
மழ விடையது உடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே.
பாடல் விளக்கம்:
முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமை வாய்ந்த இடபத்தை, வாகனமாகவும் கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.
பாடல் எண் : 04
முருகமர் பொழிலணி முதுகுன்றம் மேவிய
உருவமர் சடைமுடியீரே
உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே.
பாடல் விளக்கம்:
வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினை உடையவரே! அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும், புகழும் உடையவர்.
இப்பதிகத்தில் 5, 6, 7 ஆம் செய்யுட்கள் சிதைந்து போயிற்று.
பாடல் எண் : 08
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே
பத்து முடி அடர்த்தீர் உமைப் பாடுவார்
சித்தம் நல்ல அடியாரே.
பாடல் விளக்கம்:
முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.
பாடல் எண் : 09
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று
இயன்றவர் அறிவு அரியீரே
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார்
பயன் தலை நிற்பவர் தாமே.
பாடல் விளக்கம்:
தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.
பாடல் எண் : 10
மொட்டலர் பொழிலணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே
கட்டு அமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே.
பாடல் விளக்கம்:
மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப் பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப் பேற்றினைப் பெறுவர்.
பாடல் எண் : 11
மூடிய சோலைசூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழியிலரே.
பாடல் விளக்கம்:
அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக