இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி
திருமுறை : முதல் திருமுறை 22 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல் குலைதர அதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்த காலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.
பாடல் எண் : 02
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவது கொடுவரு
வரன்முறை அணிதரும் அவனடல் வலிமிகு புலியதள உடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
கைகள் முதலிய அவயவங்களில், கொடிய விடம் பொருந்திய பாம்புகளைத் தொன்று தொட்டு வரும் வரன் முறைப்படி, வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும், கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய பெருமான், இரவலர்களின் வறுமைத்துயர் போக எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும் கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும் மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.
பாடல் எண் : 03
இழைவளர் தருமுலை மலைமகள் இனிதுறை தருமெழில் உருவினன்
முழையினின் மிகுதுயிலுறும் அரி முசிவொடும் எழ முளரியொடெழு
கழைநுகர் தருகரி இரிதரு கயிலையில் மலிபவன் இருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும், குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள், பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ, தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.
பாடல் எண் : 04
நலமிகு திரு இதழி இன்மலர் நகுதலையொடு கனகியின் முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடியினன் மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலமறு வகைமனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர், கபாலம், ஊமத்தை, கங்கை நதி, படஅரவு, பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான், பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள், தவம் முயலும் முனிவர்கள் ஆகியோர் தன்னை வழிபட அவர்கள் மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம் உறையும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 05
கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர்பசு
பதி அதன்மிசை வரு பசுபதி பலகலை அவை முறை முறையுணர்
விதியறி தரும்நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
நடை அழகுடன் தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின் மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 06
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு எழுதர வெறிமறி
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ்மலி கணி வடமுகம்
உறைதரு கரனுலகினில் உயர் ஒளிபெறு வகை நினைவொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம், வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம், கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான், முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை, முடைநாறும் பிரமகபாலம், முகிழ் போலும் கூரிய கணிச்சி, வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும், தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப்பெறுபவனுமாகிய சிவபிரான் மறைவனத்தில் உறையும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 07
இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு
பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 08
சனம்வெரு உறவரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனமருவிய புயம் நெரிவகை கழலடியிடியில் ஒரு விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என
மனமகிழ்வொடு மறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர், வாழ்நாள், தேர், வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 09
அணிமலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியதொர் பரிசினில் எரி
திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு உறலொடு துதி செய்து
பணியுற வெளியுருவிய பரன் அவனுரை மலிகடல் திரளெழும்
மணிவளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
அழகிய மலர்மகள் கேள்வனும், அயனும் அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல் செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய, வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல் திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர் ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும் மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 10
இயல் வழிதர இது செலவுற இனமயில் இறகு உறுதழையொடு
செயல் மருவிய சிறு கடமுடி அடைகையர் தலைபறி செய்து தவம்
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அருபரன் அவனணி
வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.
பாடல் விளக்கம்:
உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும், துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில் சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.
பாடல் எண் : 11
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ் விரகனது உரை இயல் வல
இசைமலி தமிழொருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.
பாடல் விளக்கம்:
குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக