திங்கள், 7 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் 
தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் 
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லாம் 
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியினனாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் (வழியாய்) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான்.


பாடல் எண் : 02
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் 
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி 
மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய் 
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வை கிளரும் கூர்வாள் படையான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான்.


பாடல் எண் : 03
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய், திரிபுரங்களைத் தீ மடுத்தவனாய், நிலம் அதனைச் சூழ்ந்த நீர், தீ, காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய், உருவமும் உருவம் அற்ற நிலையும் உடையவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 04
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் 
காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளியுழை மானின் தோலான் கண்டாய் 
புலியுரி சேராடைப் புனிதன் கண்டாய் 
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய 
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய், வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்.


பாடல் எண் : 05
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் 
இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.


பாடல் எண் : 06
ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் 
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய் 
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்
நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் 
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான் பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.


பாடல் எண் : 07
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் 
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி அழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத் தான் கண்டாய் பரவை மேனி 
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன். சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.


பாடல் எண் : 08
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் 
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கம் செய்திட்டு 
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் 
என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் 
வெண்காடன் கண்டாய் வினைகள் போக 
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன் பயக்கும் தெளிந்த தேனாய், நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய், உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய், திருவெண்காட்டில் உறைபவனாய், நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான்.


பாடல் எண் : 09
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்
ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய் 
பவளத் தடவரையே போல்வான் கண்டாய் 
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய், முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய், ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரிய பவள மலைபோன்ற உருவினனாய், கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய், மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 10
அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று 
சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் 
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும் படையோடும் ஈந்தான் கண்டாய்
மயருறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன். இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளி வீசும் விரலால் அழுத்தியவன். தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன். அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன். அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக