சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : மூன்றாம் திருமுறை 34 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வண்ண மாமலர் கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்விடம்
விண்ணின் மாமழை பொழிந்து இழிய வெள்ளருவி சேர்
திண்ணிலார் புறவணி திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லை நிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 02
வெறியுலாம் கொன்றையம் தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத்து ஆடி ஓர் புண்ணியன்
மறியுலாம் கையினான் மங்கையோடு அமர்விடம்
செறியுளார் புறவணி திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து, படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான், இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய், உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 03
ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனல் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
இறைவன், இடப வாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 04
உரையினார் உறுபொருள் ஆயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென ஓங்கு முத்தாறு மெய்த்
திரையினார் எறி புனல் திருமுதுகுன்றமே.  

பாடல் விளக்கம்‬:
இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 05
கடியவாயின குரல் களிற்றினைப் பிளிறவோர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி
வடியவாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம்
செடியதார் புறவணி திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற, இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில், கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடி கொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும். 


பாடல் எண் : 06
கானமார் கரியின் ஈர் உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோடு அரவர் தாம் மருவிடம்
ஊனமாயின பிணியவை கெடுத்து உமையொடும்
தேனமார் பொழிலணி திருமுதுகுன்றமே.  

பாடல் விளக்கம்‬:
காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன், அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும், பாம்பையும் அணிந்து, உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து, அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 07
மஞ்சர் தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் அமர்விடம் அணிகலைச்
செஞ்சொலார் பயில் தரும் திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர் தூவிப் போற்றி வணங்க, கொடுந்தொழில் செய்யும் வேடர்களும், பிற ஆடவர்களும் விரும்பித் தொழ, அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும், பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 08
காரினார் அமர்தரும் கயிலை நன் மலையினை
ஏரினார் முடி இராவணன் எடுத்தான் இற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ் தரும் திருமுதுகுன்றமே. 

பாடல் விளக்கம்‬:
மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மை தரும் கயிலை மலையினை, அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த இறைவன், கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 09
ஆடினார் கானகத்து அருமறையின் பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனும் மால் இருவரும்
தேடினார் அறிவொணார் திருமுதுகுன்றமே. 

பாடல் விளக்கம்‬:
இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர். அரிய வேதங்களை அருளி, அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர். எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடையை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 10
மாசுமெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசுமெய் உளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
தேசமார் புகழ் மிகும் திருமுதுகுன்றமே.

பாடல் விளக்கம்‬:
அழுக்கு உடம்பையும், அழுக்கு உடையையுமுடைய சமணர்களும், புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல. வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க, அழகும், புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து, அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள்.


பாடல் எண் : 11
திண்ணினார் புறவணி திருமுதுகுன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினார் ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே. 

பாடல் விளக்கம்‬:
செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக