சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : இரண்டாம் திருமுறை 64 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 02
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் 
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தியேறி இனமாம் மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 03
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த 
மூடுஞ்சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே

பாடல் விளக்கம்‬:
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 04
தெரிந்த அடியார் சிவனே என்று திசைதோறும்
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும், விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 05
வைத்த நிதியே மணியே என்று வருந்தித் தம் 
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
கொத்தார் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்தும் 
முத்தாறுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 06
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் 
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத் தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறை கோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடி வகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முதுகுன்றாகும்.


பாடல் எண் : 07
(இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.)


பாடல் எண் : 08
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ்வேந்தை 
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் 
பூசைசெய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.


பாடல் எண் : 09
அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதியூர் 
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக் கொடிகள் அருகில் இருந்து கண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 10
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே நின்று 
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் 
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறுமந்தி 
முருகின் பணைமேல் இருந்து நடஞ்செய் முதுகுன்றே.

பாடல் விளக்கம்‬:
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம் புரியும் முதுகுன்றமாகும்.


பாடல் எண் : 11
அறையார் கடல் சூழந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக் 
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

பாடல் விளக்கம்‬:
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக