ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 09

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 10 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய்ம் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத் 
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
பண்ணை ஒத்த மொழியாளாகிய உமை அம்மையை உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரே, உலகத்தவர்கள் வலம் வந்து வணங்கி வழிபடும் மறைக்காடரே, அடியேனாகிய நான் உமைக் கண்ணினால் கண்டு களிக்குமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற கதவுகளை, உறுதியாகத் திறந்து எமக்கு அருள் செய்யவேண்டும்.


பாடல் எண் : 02
ஈண்டு செஞ்சடை பாகத்து ஈசரோ
மூண்ட கார் முகிலின் முறிக் கண்டரோ
ஆண்டு கொண்ட நீரே அருள் செய்திடும்
நீண்ட மாக்கதவின் வலி நீக்குமே. 

பாடல் விளக்கம்‬:
உடலினில் படுமாறு, திரண்ட செஞ்சடை கொண்டுள்ள ஈசரே, கருமையான மேகத்தை ஒத்த கருநிறக் கறையினை. உடைய ஒளி பொருந்திய கழுத்தினை உடையவரே, மிகவும் வலிமையாக பிணைக்கப் பட்டுள்ள இந்த கதவுகளின் வலிமையினை, என்னை ஆட்கொண்டாராகிய நீரே, நீக்கவேண்டும் (கதவுகள் திறக்கப்பட வேண்டும்).


பாடல் எண் : 03
அட்ட மூர்த்தி அது ஆகிய அப்பரோ
துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட இக்கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
ஐந்து பூதங்களாகவும், சூரிய சந்திரர்கள் மற்றும் ஆன்மாவாக எங்கும் நிறைந்து விளங்கும் அட்ட மூர்த்தியாகிய எமது தந்தையே, துஷ்டர்களாக உலகெங்கும் திரிந்து கொடுஞ் செயல்கள் புரிந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்த செய்கைக்குப் பொருத்தமாக வெண்ணீறு அணிந்தவனே, சடைமுடியில் சந்திரன் மற்றும் கங்கையினைத் தரித்து ஒப்பற்ற தலைவன் என்ற பட்டத்தைச் சூடிய பரமனே, செம்மையாக யாம் உம்மைக் காணுமாறு, கோயிலின் திருக்கதவுகளை திறந்து அருள் புரியவேண்டும்.


பாடல் எண் : 04
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே.

பாடல் விளக்கம்‬:
மிகவும் அரியதான நான்கு மறைகளையும் அருளிய நாவினை உடையவரே, வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவரே, விரியக் கூடிய பொருட்கள் அடங்கிய நான்கு மறைகளையும் கோவண ஆடையாக உடைய ஆதி மூர்த்தியே, வேதங்கள் காப்பிட்டு அடைத்தமையால் புகழ் பெற்ற இந்த கதவுகளைப் பிரித்து திறக்கச் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 05
மலையில் நீடு இருக்கும் மறைக் காடரோ
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ
விலையில் மாமணி வண்ண உருவரோ
தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
கயிலாய மலை போல் ஊழிக் காலத்தையும் வென்று நிலையாக நிற்கும் மறைக்காடு தலத்தில் உறையும் மறைக்காடரே, வேதங்களும் மற்ற கலை வல்லுனர்களும் வந்து புகழ்ந்து, வழிபட்டு வேண்டிக் கொள்ளும் திருப்பாதங்களை உடையவரே, விலையில்லாத அரிய மாணிக்கம் போன்று ஒளி வீசும் உருவத்தை உடையவரே, சிறிதும் இடைவெளி இல்லாமல் மூடியே கிடக்கும் இந்த கதவுகள், ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் நிலையினை மாற்றி, கதவினைத் திறந்து அருள் புரியவேண்டும்.


பாடல் எண் : 06
பூக்கும் தாழை புறணி அருகெலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்கும் காண்பரியீர் அடிகேள் உமை
நோக்கிக் காண கதவைத் திறவுமே.

பாடல் விளக்கம்‬:
ஊர்ப்புறத்து உள்ள நீரின் அருகில் தாழை மலர்கள் பூத்துக் கிடக்கே அதன் அருகே சோலைகளும் காணப்படும் வளமை மிகுந்த மறைக்காடு எனப்படும் தலத்தில் உறையும் மறைக்காடரே, யாரும் காண்பதற்கு அரியவராக உள்ளவரே, அடிகளே உமை நேரில் நோக்கிக் காணும் பொருட்டு கதவினைத் திறந்து அருள் செய்வீராக.


பாடல் எண் : 07
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
வெந்த திருநீற்றுப் பொடியினைப் பூசும் விகிர்தரே, ஆதியும் அந்தமும் இல்லாதவரே, அழகிய மறைக்காட்டில் உறையும் மறைக்காடரே, எமது தந்தையே, கதவுகளைத் திறக்க வேண்டி அடியார்கள் அனைவரும் உம்மை கெஞ்சி வேண்டுகின்றார்கள். ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும் இந்த பெரிய கதவுகளின் பிணைப்பினை நீக்கி, கதவினைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 08
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
ஏறது ஏறிய எம்பெருமான் இந்த
மாறிலாக் கதவம் வலி நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
கங்கை ஆற்றினை தலையில் சூடியவரே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உமையம்மைக்கு உடலில் ஒரு பாகம் கொடுத்த குழகரே, ஏறினை வாகனமாக உடைய எம்பெருமானே, வேதங்கள் காப்பிட்ட நாள் தொட்டு தனது நிலையில் மாறுபாடு, ஏதும் இல்லாமல் மூடியே கிடக்கும் கதவுகளின் வலிமையை நீக்கி. அவை திறக்குமாறு அருள் புரிய வேண்டும்.


பாடல் எண் : 09
சுண்ண வெண்பொடி பூசுஞ் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணிமறைக் காடரோ
திண்ணமாக கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
சுண்ணம் போன்று வெண்மை நிறம் கொண்ட திருநீற்றினை தனது உடலினில் பொருத்தமாக பூசும் இறைவனே, அலங்கரித்த எருதினை மிகவும் மகிழ்ச்சியுடன் வாகனமாக ஏற்ற பரமரே, அண்ணலே, அனைவர்க்கும் ஆதி மூர்த்தியே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உறுதியாக மூடிய நிலையில் உள்ள இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 10
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
தங்களது வழிபாட்டினை முடித்துக் கொண்டு திரும்பும் வேதங்களும் தேவர்களும் எதிர்கொள்ளும் வகையில், மண்ணுலகத்தவர் வணங்கி வழிபடும் மறைக்காடரே, உம்மை தங்கள் கண்களால் அனைவரும் நேரே காணும்படி, உறுதியாக இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 11
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணின் வலிமையை அடக்கிய நீர் இரக்கம் ஒன்றும் இல்லாதவராகத் திகழ்கின்றீரே, எம்பெருமானே, தேன் சுரக்கும் புன்னை மலர்கள் நிறைந்த மறைக்காடு தலத்தில் உறையும் மறைக்காடரே, விரைந்து இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்வீராக.

வடமொழி வேதங்கள் காப்பிட்டுப் பூட்டப்பட்ட கோயிலின் கதவுகள், இதற்கு முன்னர் பலர் முயற்சி செய்தும் திறக்க முடியாத கதவுகள், தமிழ் வேதம் எனப்படும் தேவாரப் பதிகங்களால் திறக்கப் பட்டமை, திருமுறைப் பதிகங்களின் பெருமை வடமொழி வேதங்களுக்கு இணையானவை என்று உலகினுக்கு எடுத்துக் காட்டிய அற்புதப் பதிகம்.

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக